சனி, 18 ஜனவரி, 2014

பேதைமை கதை

                                                                               கதை
                                                                   
                                                                          பேதைமை


முன்பின் உங்களுக்கு எந்த வகையிலும் அறிமுகமில்லாத, உங்களுக்கு எந்த வகையிலும் தீங்கிழைக்காத யாராவது ஒரு நபரை அப்படியே அடித்து நொறுக்கி விடவேண்டும், நரநரவென்று கடித்து மென்றுவிடவேண்டும் என்று உங்களுகு ஆத்திரம் வந்திருக்கிறதா?  எனக்கு வந்திருக்கிறது.
நீங்கள் அன்றாடம் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து பணிக்குப் போய்த் திரும்புபவரா?  அல்லது பல்வேறு பணிகளாக மாநகரப் பேருந்தில் அன்றாடம் பயணிப்பவரா? அப்படியானால் உங்களால் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
சென்னை மாநகர வரிவாக்கப் பகுதிகளில், சமீபத்தில் வேளச்சேரி பகுதியைப் போன்ற நெரசல் வேறெங்கும் இருக்கமுடியாது என்று சொல்லலாம்.  காலையில் பேருந்து பிடித்து பணிக்குப் போகிறவர்களும், பள்ளிக்குப் போகிற மாணவர்களும், அதேபோல் மாலையில் பணி முடிந்து, பள்ளி முடிந்து வீடு திரும்புகிறவர்களும் என கூட்டம் விரிய, நண்பகல் சிறிது நேரம் காற்றாப் பேருந்துகள் பயணிக்கும் என்பதைத் தவிர மற்றபடி கூட்டம், கூட்டம், நெரிசல், நெரிசல் என தொத்தல் பயணம்தான்.
மாலை மங்கி தெரு விளக்குகள், கடை, வணிக நிறுவனங்கள், ஒளி வீசுகிற நேரம்.   5ஏ பேருந்தில் சைதாப்பேட்டையில் ஏறினேன்.  தி.நகரில் புறப்படுகிற போதே அமர்விடங்கள் நிரம்பி நிற்போர்களுடன் வருகிற பேருந்து ஆயினும் கூட்டமாகவே நெரித்து முண்டியடித்து ஏறி இடுக்குகளில் நுழைந்து ஆண்கள் இருக்கை ஓரமாக நின்று கொண்டேன்.
இதுமாதிரி சந்தர்ப்பங்களில் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களின் முகங்களை  அசைவுகளை எடை போட்டு அவர்களில் யாரும் இறங்குகிற அறிகுறி தென்படுகிறதா எனப் பார்த்து அவர்கள் பக்கமாக போய் நின்று கொள்வதும், அவர்கள் இறங்க யத்தனிக்கும்போது பக்கத்திலிருப்பவர்கள் வழிக்குப் புகுந்தோ பார்ப்பதோ கிடைத்ததை கைப்பற்றுவது ஒரு சாகசம்.
சிலர் இதற்கு எளிமையாய் வழி ஒன்றை வைத்திருக்கிறார்கள்.  இவர்கள் தங்கள் தோளில் அல்லது கையில் இருக்கும் பையையோஉட்கார்ந்திருப்பவர்களின் தந்து விடுவார்கள்.  அவர்கள் இறங்குமபோது அந்தப் பையைத் தாங்கள் அமர்ந்திருக்கிற இடத்தில் வைத்துவிட்டு இறங்குவார்கள்.  இதனால் அந்த இடம் பையின் சொந்தக் காரருக்கு உரியதாக ஆகிவிடும்.  அதாவது அந்த இடத்தில் யார வந்து அமர்வது என்பதை இறங்குபவர் தீர்மானிப்பதாக ஆகிவிடும்.  பக்கத்திலிருப்பவர்கள் எல்லாம் பரிதாபமாகப் பார்க்க, நாலு இருக்கை தள்ளி உள்ள நபர் தொகுதியில் வென்ற வேட்பாளர் போல மந்தமாகப் புன்னகையோடு வந்து அமர்ந்து கொள்வார்.
வேறு சில சந்தர்ப்பங்களில் இருவர் இருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் எதாவது ஒரு நிறுத்தத்தில் இறங்க, இடம் காலியாகிறதே என பக்கத்தில் நிற்கும் நீங்கள் அமர முயன்றால்,  தடுத்து இடத்தைப் பிடித்துக் கொண்டு நாலு இருக்கைத் தள்ளியிருக்கிற தனது நண்பரை, உறவை அழைத்து அதில் அமர வைப்பர்.  அதாவது இருவர் இருக்கையில் ஒருவராக இவர் அமர்ந்திருக்கிறார் என்பதனாலேயே, பக்கத்து இருக்கையையும் யாருக்குத் தருவது என்று தீர்மானிக்கும் உரிமையைப் பெற்று விடுகிறார்.  நீங்கள்  பரிதாபமாக அசடு வழிய நிற்க வேண்டியதுதான்.  இதெல்லாம் என்ன நியாயம் என்று யாருக்கும் தோன்றுவதில்லை.  தோன்றித்தான் என்ன ஆவப்போகிறது?  சம்மந்தப்பட்டவரிடம் சண்டை வாங்கலாம்.  அடுத்து பத்துப் பதினைந்து நிமிடங்களில் நிறுத்தம் வந்து எதோ ஒரு இடத்தில் இறங்கப் போகிறவர்களுக்குள் எதற்கு சண்டை.  அதுவும் தற்காலிகமாக அமரப் போகும் ஒரு இருக்கைக்காக என்று தாராள மனசோடு இருந்து விட வேண்டியதுதான்.
யார் முகத்திலாவது இறங்குகிற குறி தென்படுகிறதா என்று பார்த்துக கொண்டிருந்தேன்.  சின்னமலை நிறுத்தம் தாண்டி ஆளுநர் மாளிகைத் திருப்பத்தில் கையில் சுருட்டி மடக்கிய மாலை நாளேட்டுடன் நடுத்தர வயதைத் தாண்டிய ஒருவர் சற்று பரபரப்போடு வெளியே இப்படியும் அப்படியமாக பார்த்துக் கொண்டு வந்தார்.  சரி, நகருக்கு புதுசு போலிருக்கிறது, இறங்க வேண்டிய இடம் தவறிவிடுமோ என்கிற பதட்டத்தில் பார்த்துக் கொண்டு வருகிறார் போலிருக்கிறது என்று அனுமானித்து, சாதுர்யமாக சிலரை விலக்கி அவர் இருக்கைக்குப் பக்கமாக போய் நின்று கொண்டேன்.  பேருந்து கி.ஆ.பெ. சாலை வளைவில் திரும்பி, மேம்பாலம் பக்கம் இணைப் பக்கமும் திரும்பி இறக்கத்தில் ஓடியது.  அவர் இன்னும் சற்று பரபரப்போடு எதிர் இருக்கைக் கம்பியைப் பிடித்தார்.  சரி கிண்டி இறங்கப் போகிறார் போலிருக்கிறது என்கிற தெம்போடு, அந்த இடத்தைப் பிடிக்க நான் தயாராகிக் கொண்டிருந்தேன்.
கிண்டி நிறுத்தம் வந்தது.  பயணிகள் இறங்கினர், ஏறினர்.  இவர் கம்பியைப் பிடித்தபடி இறங்குகிற பயணிகளைப் பார்த்து வலப்புறம் கிண்டி ரயில் நிலையத்தையும் பார்த்து பழையபடியே சாவகாசமாக அமர்ந்து கொண்டார்.
சரி, இந்த இடம் இல்லை போலிருக்கிறது, அடுத்த இடமாக இருக்கலாம் என்று சமாதானம் செய்து கொண்டேன்.  எங்கே இறங்கப் போகிறீர்கள் என்று அவரைக் கேட்கலாமா என்று தோன்றியது.  என்றாலும் சகுனம் பார்க்கிற ஆளாயிருந்து ஏதாவது காரியமாகப் போகிறதாயிருந்தால், நாம் கேட்டதால்தான் கெட்டது என்கிற அவப்பெயர் எதற்கு என்று ‘என்ன போனால் அடுத்த நிறுத்தம் இறங்கத்தானே போகிறார்’ என்று சமாதானம் செய்து கொண்டு, அடுத்த நிறுத்தத்திற்காகக் காத்திருந்தேன்.
அவர் சாவகாசமாக பின்புறம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நாளேட்டைப் புரட்டத் தொடங்கினார்.  செக் போஸ்ட் நெருங்க அங்கும் இதே மாதிரி கம்பியைப் பிடித்து உடம்பை முன்னே தள்ளி இருபுறமும் பார்த்து விட்டு வண்டி புறப்பட பழையபடியே சாய்ந்து கொண்டார்.
முதலில் இடம் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாரோ என்று அவர் மேல் பரிதாபப்பட்ட எனக்கு போகப் போக அவரது நடவடிக்கைகள் எரிச்சலைத் தர ஆரம்பித்தது.  அவர் அடிக்கடி வெளியே பார்ப்பதும், சட்டைப் பையில் கைவிடுவதும் அதிலிருந்து ஒரு முகவரி அட்டை எடுத்துப் பார்ப்பதும், பிறகு இடத்தை உறுதி செய்து கொண்டவர் போல் தாளை பழையபடியே பையில் போட்டுக் கொண்டு முன்புறம் சாய்வதும், மறுபடி பின்புறம் சாய்வது, வேட்ட சுருக்கங்களை நீவி விட்டுக் கொள்வதும், கையில் இருந்த கைக்குட்டையால் முகத்தை அழுந்தத் துடைப்பதும், அவரது ஒவ்வொரு அசைவும் ஏதோ எல்லாம் முடிந்து இறங்கத் தன்னைத் தயார் செய்வது போல் தோன்ற, ஒவ்வொரு நிறுத்தத்திலும் அவர் இதோ இறங்குவார், அதோ இறங்குவார் என்று எதிர்பார்க்க ஆனால் அவர் எங்குமே இறங்காமல் தன் சேட்டைகளை மட்டும் தொடந்து வர, எனக்கு கொதிப்பு எகிறியது.  குருதிக் கொதிப்பு.
ஏற்கெனவே 100-150 இருந்து உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி முதலான பல ஆலோசனைகளுடன் எதிலும் அதிகம் உணர்ச்சி வசப்படாதீர்கள் என்று சொல்லியிருந்தும் அதையும் மீறி ‘மவனே, டேய், நீ எங்கதாண்டா எறங்கப் போற’ என்கிற  கேள்வி வார்த்தைகளில் வெளிப்படாமல், உள்ளூறவே குமுறியது.  ‘நீ எங்கேயோ எறங்க, ஆனா பேசாம உக்காந்துக்குனு வா. எதாவது சேட்ட பண்ண கடிச்சிக் கொதறிடுவேன் என்ன’ என்று பாய மனம் துடித்தது.
இடை இடையே புத்தி கொஞ்சம் வேலை செய்து அந்த ஆள் பாட்டுக்கு அந்த ஆள் பயணம் போகிறார்.  அவர் எப்படியோ, எதையோ செய்து கொண்டு போகிறார், அதை விட்டு நாமாக அவனுடைய செய்கைகள் பற்றி ஒன்றை கற்பனை செய்து கொண்டு அவன் மேல் ஆத்திரப்படுவது என்ன நியாயம் என்று புத்தி சொன்னாலும், மனசு ஆறுவதாயில்லை.  பொருமிக் கொண்டே யிருந்தது.  இவனுக்கெல்லாம் ஒரு பஸ் ஒரு பயணம், அவன் மூஞ்சியும் மொகரையும், பஸ்சுல எப்படி உக்காந்துக்கனு வரணும்னு கூடம் தெரியாம.  இருக்கிறவங்களையெல்லாம் கடுப்பேத்திக்னு’ என்று பொரிந்து கொண்டே...
கடைசீ வரை அந்த ஆள் இறங்கவே இல்லை.  எதற்குத்தான் இம்மாதிரி சேட்டைகள் செய்து கொண்டு வந்தான் என்பதும் தெரியவில்லை.  என் நிறுத்தம் வர சபித்துக் கொண்டே வந்தேன்.
சங்கதி இத்தோடு முடிந்து போயிருந்தால் நான் இந்தக் கதையை எழுத வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.  நாலு நாள் கழித்து ஒரு சம்பவம்.
இந்த முறையும் தடம் எண் 5ஏ பேருந்துதான்.  ஆனால் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திய வேகத்திலேயே முண்டி மோதி இடம் பிடித்து தி.நகரிலேயே ஏறி அமர்ந்து விட்டதால் இடப் பிரச்சினை இல்லை என்கிற நிம்மதி.  அக்காடா என்று என் பையை மடியில் வைத்து, நான் தொடர்ச்சியாய் வாங்குகிற வாரமிருமுறை இதழைப் பிடித்துப் படித்துக்  கொண்டிருந்தேன்.  வண்டி சி.ஐ.டி. நகர், சைதை, சின்னமலை என்று கடந்து ஓடிக் கொண்டிருந்தது.  பஸ் ஒவ்வொரு நிறுத்ததில் நிற்கும் போதும் தலையை நிமிர்த்தி எங்கு நிற்கிறது, எந்த நிறுத்தத்தைக் கடக்கிறது என்று பார்த்துக் கொண்டே போவேன்.  லேசாய் அசதி ஏற்பட, படித்த வரைக்கும் போதும், மீதி இறங்கிப் போய் படித்துக் கொள்ளலாம் என்று இதழை மடித்து பையில் வைத்து,  கண்ணாடியைக் கழற்றி சட்டைப் பையில் வைத்து, பின்னால் தலை சாய்க்க வாகாக என்னைச் சாய்த்து சரி செய்து கொண்டேன்.  அந்த நேரம் ஒரு நிறுத்தம் வர என் பக்கத்திலிருந்தவர் எழ, வேறொருவர் வந்து அங்கு அமர்ந்தார்.
ஆனால் என் பக்கத்திலிருந்து எழுந்தவர் இறங்கவில்லை.  பக்கத்திலேயே நின்றார்.  அப்போதுதான் அவரை முழுசாகப் பார்த்தேன்.  நடுத்தர வயது.  ஆனாலும் கட்டு மஸ்தான கரிய தோற்றம்.  நறுக்கு மீசை.  பொதுவில் அன்றாடம் சரக்கடிக்கிறவர்களுக்கு உள்ளது போன்ற லேசாய் சிவந்த மயக்கம் தோய்ந்த கண்கள்.  நல்ல நிதானத்தில்தான் இருந்தார்.  இப்படிப்பட்ட தோற்றத்துள்ளும் அடுத்தவருக்கு இடம் தரவேண்டும் என்கிற நல்ல இதயமா... அடடா முள்ளில் ரோஜா, கல்லுக்குள் ஈரம், சேற்றில் செந்தாமரை என்று அவரை மனதுக்குள் வாழ்த்திக் கொண்டிருந்தேன்.
அவர் என்னைப் பார்த்து ‘நீங்க எறங்கலையா’ என்றார்.  நான் இல்லை என்றேன்.   ‘நீங்க எறங்கப் போறிங்கன்னு நெனச்சிதான் நான் எழுந்து அவருக்கு எடம் கொடுத்தேன்’ என்றார்.  ‘அடடா நீங்க ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே, சொல்லியிருப்பேனே’ என்றேன்.  எங்களுக்குள் இந்த உரையாடலைக் கேட்ட பக்கத்தில் இருந்தவர் கரை வேட்டியைப் பார்த்து ‘அப்ப நீங்க உக்காரிங்களா’ என்றார்.  அதற்கு கரை வேட்டி பெருந்தன்மையுடன் ‘பரவால்ல, உக்காருங்க’ என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து முறைத்தார். இதேதடா வம்பு என்று தோன்றிய எனக்கு தலை சாய்க்கிற எண்ணம் தொலைந்து போய் மனம் சங்கடப்பட, பழையபடியே பையைத் திறந்து இதழை எடுத்து, கண்ணாடியை எடுத்து மாட்டி படிக்கத் தொடங்கினேன்.  படிப்பில் மனம் லயிக்கவில்லை.  இடச்சிக்கல் பற்றிய இதனையே மனதை இடர்ப்படுத்திக் கொண்டு வந்தது.  அது பற்றிய யோசனையுடனே சிறிது நேரம் ஆளாயிருந்தேன்.  பிறகு இதழை மடித்து பையில் போட்டு, கண்ணாடியைக் கழற்றி பையில் வைத்து, அவ்வப்போது நழுவும் பையை சரி செய்து இழுத்து இழுத்து மடியில் அமர்த்தியபடியே, பயணித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு கட்டத்தில், பையை அடிக்கடி நழுவாமல் மடியில் சரியாய் பொறுத்த, சற்று நிமிர்ந்து என்னைச் சரி செய்து கொண்டிருக்க, அந்த நேரம் ஒரு நிறுத்தம் வந்தது.  ஒரு சிலர் இறங்க பலர் ஏறினார்கள்.  பக்கத்தில் இருந்த கரைவேட்டி, கண்கள் சிவக்க என்னைப் பார்த்து ‘என்னா எறங்கலையா’ என்றார்.  நான் ‘இல்ல’ என்றேன்.  சிறிது நேர பயணத்தில் அடுத்த நிறுத்தமும் நெருங்க நான் பழைய படியே பையைச் சரிசெய்து கொண்டு அமர்ந்து பஸ் புறப்பட கரை வேட்டி ஏனோ ஆத்திரத்தின் உச்சிக்குப் போய் என்னைப் பார்த்துக் கத்தினார் ‘மவனே இனிமே பையில கை வச்ச.  உன்னைக் கொல பண்ணி போட்டுடுவேன்.  நீ எங்க வேணா எறங்கு.  ஆனா பேசாம வா.  நீ எறங்குவன்னு நான் இருந்த எடத்தையும் உட்டுட்டு நின்னுக்னு வரேன்.  நீ என்னா வேடிக்கை காட்டிக்னு வரியா...’
***

புதன், 15 ஜனவரி, 2014

மயக்கம் சிறுகதை

மயக்கம்
கைக்குட்டை எடுத்து ஈரக் கைகளைத்   துடைத்தபடியே கல் லாவை நெருங்கினான்.  மேசை மேலிருந்த கணக்குப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி ரசீதுபடி கணக்கெழுதி மூடிப் போட்டு வெளியே வந்தான்.  முகப்பிலேயே இருந்த பெட்டிக் கடையில் சிகரெட் ஒன்றை வாங்கிக் கொளுத்திய படியே மணியைப் பார்த்தான்.  ஒன்பது இருபது ஆகியிருந்தது.  சுள்ளென்று உரைக்கும் வெய்யிலில் காலை நேரப் பரபரப் போடு காணப்பட்டது தெரு.  நகராட்சித் தகுநிலை உடைய நகரத் தெரு.  அலுவலகம் போகிறவர்களும், பள்ளி செல்கிற சிறுவர் சிறுமியர்களும், காய்கறி அங்காடி போகிறவர்களும் நடந்து, மிதி வண்டியில், பிற வண்டிகளில் கடந்து கொண் டிருந்தார்கள்.
அவள் வருகிற நேரம்.  பெட்டிக் கடையோரம் போட் டிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.  செய்தித்தாள் பார்க்கிற சாக்கில் பக்கத்தில் கசங்கிக் கிடந்த தினசரியை எடுத்து கையில் வைத்துத் தெருவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
வெள்ளை ரவிக்கையும், நீலப் பாவாடை தாவணியுமாக மேநிலைப் பள்ளி படிக்கிற பெண்கள் போய்க் கொண் டிருந்தார்கள்.  சிவுக் சிவுக்கென்று பாவாடை சிக்க ஒண்டியாக,  தனித்து, நாலைந்து பேராக கதை பேசிக் கொண்டு, சாரி சாரியாகச் செல்லும் சீருடைகளில் அவளைச் தேடிக் கொண்டிருந்தான்.  அவள் எப்பவும் வழக்கமாக வரு கிற ரெண்டு மூணு பேரோடு வருவாள்.  எப்பவாவது தனியாகவும் வருவாள்.
தெருவையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களை நீல நீலமான வண்ணங்கள் கடந்து கொண்டிருந்தன.  பாதி தீர்ந்து போயி ருந்த சிகரெட்டை மெல்ல ஒரு முறை இழுத்துவிட்டுக் கொண்டு சலிப் படையாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.  அதோ அவள்.  தூரத்தில் வரும்போதே இவன் கண்களுக்குத் தெளிவாகவே தெரிந்தாள்.
வடிவ கணிதப் பேழையோடு சேர்த்து அடுக்கிய புத்தகங்களை ஒரு கையால் மார்போடு அழுத்திய படி வந்து கொண்டிருந்தாள் அவள்.  வலது கையில் பிடித்திருந்த அளவு கோலை ஆட்டி ஆட்டி நீட்டி ஏதோ அவள் பேசிக் கொண்டு வந்ததை கூட வந்த இரு பெண்களும் தலையை அசைத்து அசைத்து கேட்டுக் கொண்டு வந்தனர்.
இவன் செய்தித்தாளை ஒதுக்கிப்போட்டு உற்சாகத் தோடு எழுந்து ஒரு திமிர் விட்டான். சிகரெட்டைக் கடைசி முறையாக இழுத்துப் போட்டு மிதித்து தெருவுக்குப் பக்க மாகப் போய் நின்று கொண்டான்.  தெருவில் நடந்து செல்கிற வர்களுக்கும் இவனுக்கும் மிஞ்சினால் ஒரு மீட்டர் இடை வெளி கூட இருக்காது.  இவனைக் கடந்து செல்லும் போது அவளால் பார்க்கமுடியும், பார்ப்பாள், அல்லது பார்க்காத மாதிரியும் சென்று விடுவாள்.  வேறு யாரையோ எதிர் நோக்கு கிற பாவனையில் நின்றான்.
அவள் பேசிக்கொண்டு வந்த கதை தொடர இவனைக் கடந்து போய்க் கொண்டிருந்தாள்.  பார்த்தாளா இல்லையா என்பது பிடிபட வில்லை.  பார்த்திருக்கலாம்.  பார்க்காமலும் இருந்திருக்கலாம். அவளைச் சற்றுப் போகவிட்டு பத்தடி தள்ளி பின்னாலேயே நடக்கத் தொடங்கினான்.
தான் அவளைத் தொடர்ந்து வருகிறோம் என்பது அவளுக்குத் தெரியும்.  தெரிந்தேதான்  யாரும் வித்யாசமாய்க் கருதிவிடக் கூடாது  என, திரும்பிப் பார்க்காமலே போகிறாள்  என்று நினைத்துக் கொண்டான்.  தான் பாட்டுக்கு இயல்பாய் சாலையில் நடப்பவனைப் போல அவளையே பார்த்துக் கொண்டு நடந்தான்.
நேரே செல்கிற சாலையில், வலது பக்கம் திரும்பி, சாலையைக் குறுக்காகக் கடக்கிற வரைக்கும் அவள் திரும்பவேயில்லை.  வளைவில் கொஞ்சம் திரும்பினாள்.  திரும்பியவளும் இவனுக்காகத் திரும்பி னாளா அல்லது சாலையில் ஏதாவது வாகனங்கள் குறுக்கிடுகிறதா என்பதைப் பாப்பதற்காகத் திரும்பினாளா என்பது தெரியவில்லை.
இரண்டுக்குமாக இருக்கும் அல்லது அந்த சாக்கில் இவனைப் பார்ப்பதற்காகவும் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.  இவனும் சாலையைக் குறுக்காகக் கடந்து வலது பக்கம் நடந்தான்.  பின்னாலேயே நடப்பது ஒன்றும் சிரமமாக இல்லை.  அவளுடைய பள்ளியைக் கடந்து தான் இவன் அலுவலகம் போகவேண்டும்.  தினம் அவள் பின்னாலேயே நடந்துதான் இவன் அலுவலகம் போனான்.
பள்ளி நெருங்க இடப்புறமுள்ள வாயிலுக்காகத் திரும்பி இயல் பாக  அவள் உள்ளே நுழைந்தாள்.  வராந்தாவில் நட மாடிக் கொண் டிருந்த பெண்களில் நின்றிருந்த இரட்டைப் பின்னல்காரி ஒருத்தி ‘குட் மார்னிங்டீ’ என்றாள்.  இவளும் பதிலுக்கு அளவுகோலைத் தூக்கி காட்டியபடியே ‘குட் மார்னிங்’ சொன்னாள்.  இவன் நெஞ்சுயரச் சுற்றுச் சுவருக்கு மேலே அவர்களைப் பார்த்தபடி பள்ளியைக் கடந்து வழக் கமான குழப்பத்துடனே அலுவலகம் நோக்கி நடந்தான்.
ஏழெட்டுக் கட்டடம் தள்ளியிருக்கிற வட்டாட்சியர் அலுவலகத் தில் இளநிலை உதவியாளர் வேலை இவனுக்கு.  வந்து எட்டு ஒன்பது மாதம் ஆகிறது.  வந்த புதிதில் தான் உண்டு தன் வேலை பார்க்கும் பிரிவு உண்டு என்று இருந்தவன்தான்.  அலுவலகம் முடிந்ததும் நேரே அறைக்குத் திரும்பி முகம் கைகால் கழுவி, உடை மாற்றிக் கொண்டு பொழுதைக் கழிக்க பூங்காவுக்கோ, நூலகத்துக்கோ போவான்.  புதிதாக ஏதாவது திரைப்படம் வெளிவந்தால் பார்ப்பான்.  மற்ற நேரங்களில் பண்பலை வரிசையில் ஏதாவது பாட்டுக் கேட்டுக் கொண்டு பெரும் பாலும் அறையிலேயே தனியே இருந்து விடுவான்.
இப்படி இருக்க நாளாவட்டத்தில் மற்றப் பிரிவு அலுவலர்கள்  இவனுக்குப் பழக்கமானார்கள்.  அஞ்சல் அனுப்புகைப் பிரிவு சீனு கொஞ்சம் கூடுதல் நெருக்கமானான்.  உள்ளூர்க்காரன்.  சற்று கலகலப் பான பேர்வழி.  வேலை நேரம் போக மற்ற நேரங்களில் எப்போதும் யாரிடமாவது எதாவது வளவளத்துக் கொண்டிருப்பான்.  இவனோடு பேசிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் ‘சாயந்தரம் கோயிலுக்குப் போலாமா’ என்றான்.
‘எந்தக் கோவிலுக்கு”
“விநாயகர் கோயிலுக்கு”
“விநாயகர் கோயிலா?” இவன் புரியாமல் கேட்டான்.
‘சர்தான் வந்து இத்தினி மாசம் ஆவுது.  இன்னும் விநாயகர் கோயிலு தெரியாமத்தான் இருக்கிறியா நீ!  ஜங்ஷன் பக்கத்துல இருக் குதே தெரியாது.  வரசித்தி விநாயகர் கோயிலு.  டவுன்லியே ரொம்ப ஃபேமசாச்சே.....”
இவன் கோயில்களைப் பற்றி எப்போதும் அக்கறைப் பட்டுக் கொண்டவனில்லை.  தொடர் வண்டி சந்திப்பு வழியாகத்தான் தினம் இவன் அலுவலகம் வந்தான்.  இவன் சாப்பிடுகிற உணவகத்திற்குச் சற்றுத் தள்ளி எதிர்த்தாற் போல்தான் அமைந்திருந்தது சந்திப்பு.  பெரிய சந்திப்பு.  ஐந்து பாதைகள் வந்து ஒன்றாகக் கூடிப் பிரிகிற சந்திப்பு.  பக்கத்திலேயே பேருந்து போக்கு வரத்துக்கான பெரிய மேம்பாலம்.  மேம்பால மறுபக்க இறக்கத்தில்தான் இவனுக்கு அறை. தினம் மேம் பாலம் ஏறி இறங்கித்தான் இவன் அலுவலகம் செல்லவேண்டும்.
பாலத்தின்மீது நின்று பார்த்தால் நகரின்  பெரும்பகுதி கட்டடங்களும், நடுவே விசாலமான பெரும் பரப்பாய் விரிந்திருக்கும் சந்திப்பும் தெரியும்.  பரந்து கிடக்கும் இணை இணையான தண்ட வாளங்களும் , நடுவே உயர உயரமான மின் விளக்குகளும், வெள்ளைக் காரன் காலத்து மலைப்பான கட்டடங்களும், பயணிகள் தொடர் வண்டிப் பாதையைக் கடப்பதற்காக இரும்புக்கிராதி கொண்டு அமைக்கப் பெற்ற நீண்ட கான்கிரீட் பாலமும், சாரி சாரியாய் நடை மேடைகளும் தெரியும். அலுவலகம் விட்டுத் திரும்பும்போது சில முறை  நின்று பார்ப்பான்.  எந்த நேரமும் லொட்டு லொட்டு என்று முன்னும் பின்னும் நகர்ந்து, தடம் மாறி இணைந்தும் கழன்றும் இயங்கிக் கொண்டிருக்கிற சரக்கு வண்டிப் பெட்டிகளும், தொடர் வண்டி இயக்கு பொறிக் கூடத்திலிருந்து பெருங்கூச்சல் எழுப்பி புகையைக் கக்கியபடியே சீறி அலைந்து கொண்டிருக்கும் தொடர் வண்டி என்ஜின்களும் வளைந்து நெளிந்து களைத்து வந்து ஆயாசத் தோடு நின்றபடியே நடை மேடை களில் பயணிகளை வெளித்தள்ளியும் அள்ளிக் கொண்டும் செல்கிற நீள நீளமான தொலைதூரத் விரைவு வண்டிகளும் பார்க்கவே பிரமிப்பாய் இருக்கும்.
கண்ணுக்கெட்டிய வரை நீண்டு கிடக்கும் சந்திப்பின் சுற்றுச் சுவருக்குள் பயணச்சீட்டு தரும் அலுவலகத்தை யொட்டி பெரிசு பெரிசாக அடர்ந்து படர்ந்திருக்கும் தூங்குமூஞ்சி மரங்களுக்குச் சற்றுத் தள்ளி மேற்கு மூலையில் மேம்பாலத்தின் அருகே ஒரு புன்னைமரமும், பக்கத்தில் சின்னதாய் மண்டபம் மாதிரித் தெரிந்த இடத்தையும் நினைத்துக் கொண்டான்.  அதுதான் கோயிலாக இருக்க வேண்டும் போல.  ‘என்னா விசேஷம்’ என்றான்.
‘சர்தான். இன்னைக்கி வெள்ளிக் கிழமையாச்சே.  தெரியாதா.  கலர்லாம் நெறைய வருமே. ....’ என்ற சீ தொடர்ந்து கோயிலைப் பற்றிச் சொன்னான்.
நகரத்திலேயே ரொம்பப் பிரசித்தியாம் அந்தக் கோயில்.  பார்ப்ப தற்குச் சின்னதாகத் தெரிந்தாலும் மகிமை அதிகமாம்.  வேண்டியது கிடைக்கும் என்பதால் ‘வரசித்தி விநாயகர் கோயில்’ என்று பெயர் வந்ததாம்.
ரொம்ப காலத்துக்கு முன்பு இச் சந்திப்பெல்லாம் வராத முன்பு இந்த இடமெல்லாம் ஒரே காடாகக் கிடந்திருக்கிறது.  யாரோ ஒரு சாமியார், கோடை வெயிலில் நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பில் இந்தப் புன்னை மரத்தடியில் வந்து படுத்து அப்படியே தூங்கிப் போய் விட்டிருக்கிறார்.  நல்ல தூக்கத்தில் யாரோ தட்டி எழுப்பியதைப் போலிருந்ததாம்.  விழித்துப் பார்த்தால் யாரையும் காணோம்.  பக்கத்தில் கமகமவென்று வாசனை வருகிற ஒரு கட்டுச் சோற்று மூட்டையும், ஒரு வெள்ளி கூஜா நிறைய ஜில்லென்ற தண்ணீரும் இருந்ததாம். சாமியாருக்கு ஒரே ஆச்சர்யமாகப் போய் விட்டது “ எல்லாம் அவன் கருணை என திகைத்து, எழுந்து சுற்றுமுற்றும் பார்க்க கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் யாரும் வந்து போனதற்கான அறிகுறியும் தென்படவில்லை.  புன்னை மரத்தடியில் மட்டும் ஒரு பெருச்சாளி சுற்றிக் கொண்டிருந்ததாம்.
இந்த இடத்தில் ஏது பெருச்சாளி என்று யோசித்துக் கொண் டிருக்கும் போதே அது வடக்குப் பக்கமாக ஓடி கொஞ்ச தூரம் போனதும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சட்டென்று மறைந்து போய்விட்டதாம்.  எப்படி மறைந்தது, எங்கே மறைந்தது என்று தெரியவில்லை.  பக்கத்தில் வளை, கிளை கூட எதுவும் காணவில்லை.  சாமியார் குழம்பிப் போய் சிறிது நேரம் யோசிக்க அவருக்குச் சந்தேகம் வந்து விட்டிருக்கிறது.  எலி ஓடி மறைந்த இடத்தில் மண்ணைச் சீச்சிப் பார்க்க மேலாகவே கூம்பாக ஏதோ கல்லு மாதிரித் தெரிந்ததாம்.  இது சாதாரணக் கல்லு மாதிரி இல்லா திருக்கவே சாமியார் முழுசும் தோண்டிப் பார்த்தால் கைக்குழந்தை அளவுக்கு ஒரு விநாயகர் சிலை தென்பட சிலைக்கும் கீழே இருந்த பெருச்சாளி சிரித்துக் கொண்டே, பெருச்சாளி எப்படி சிரித்தது என்று தெரியவில்லை. வெளியே வந்து எங்கோ ஓடி மறைந்து விட்டதாம்.  சாமியார் வியந்து”எல்லாம் அவன் செயல் என” அந்த சிலையை வைத்து ‘பகவான பிரதிஷ்டை’ செய்து அந்த இடத்தி லேயே மண்ணைக் குழப்பி சேறு வைத்து,முழங்கால் அளவு சுவர் எழுப்பி, அதை பனை ஓலை வேய்ந்து மூடி மொட்டையாக சிறு குடிசை மாதிரி ஒரு கோவிலைக் கட்டி வைத்து விட்டுப் போய் விட்டாராம்.
“சாமியார் எப்போது அந்தக் கோயிலைக் கட்டினாரோ தெரியாது. அப்போதிலிருந்தே அது அங்கேயே தான் இருக்கிறதாம். அதற்குப் பிறகு ஊர் எவ்வளவோ பெருத்து நகரம் ஆகியும், வெள்ளைக்காரன் தண்டவாள மெல்லாம் போட வந்தபோதும் கூட யாரும் அதை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தவேயில்லையாம். எவனோ ஒரு வெள்ளைக்காரப் பொறியாளர் மட்டும்  கோயில் அங்கேயிருப்பது ரயில் போக்கு வரத்துக்கு இடையூறாக இருக்கும்.  அதை அப்புறப்படுத்தி விட வேண்டும் என்று சொன்னபோது கூட ஊர்க்காரர்கள் எல்லாம் சேர்ந்து மேலதி காரிகளுக்கு மனுப்போட்டு கோயில் அதே இடத்தில்தான் இருக்க வேண்டும் என்றார்களாம்.  மேலதி காரிகள் சொல்லியும், என்ஜினியர்  அதை ஏற்காமல் கோயிலை அப்புறப் படுத்தத்தான் வேண்டும் என்று விடாப் படியாக அதற்கு முயற்சிக்கவே, அடுத்த பதினைந்து நாளில் என்ஜினியர் காய்ச்சல் வந்து செத்துப் போனாராம். அதற்குப் பிறகு கோயிலை அப்புறப் படுத்துவது பற்றியே யாரும் பேச்செடுக்கவில்லை. அந்த இடத்தைத் தனியாக ஒதுக்கி விட்டுத்தான் தண்டவாளமெல்லாம் போட்டார்களாம்.  இது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததோ இப்ப எவ் வளவோ சீர்த்திருத்தமாயிட்டுது கோயில்” என்றான்  சீனு.
ஈடுபாடின்றி அதைக் கேட்டுக் கொண்டு வந்தான். இவன் கருதியிருந்த இடத்தில் தான் இருந்தது கோயில். சாலையிலிருந்து பிரிந்ததும் சந்திப்பின் சுற்றுச்சுவர். வாயிலைக் கடந்து நேரே உள்ளே போனால்  பிரும்மாண் டமாகத் தெரிகிற நிலையக் கட்டிடங்களுக்கு எதிரே வலது புறம் குறுகலான சிமெண்ட் பாதை. பாதையிலேயே கொஞ்சதூரம் நடந்து இடது பக்கம் திரும்பினால் கோயில். மாலை, வேளையோடே அழைத்துக் கொண்டு வந்திருந்தான் சீனு. அவன் சொன்னமாதிரியே கோவிலுக்கு கலர்கள் நிறைய வந்திருந்தன. மைனர் பையன்கள் ஓரம் கட்டி நின்று அடுத்தவன் தோள் மீது கை போட்டோ  முழங்கையை ஊன்றியோ ஒய்யாரமாக நின்று ‘லுக்’ விட்டுக் கொண்டிருந் தான்கள்.
தான் சொன்னது சரிதானே என்பது மாதிரி சீனு இவனைப் பார்த் தான். இவன் கோயிலைப் பார்த்தான். கோயில் இவன் தங்கியிருந்த அறையை விடச் சின்னது. முன்புறம் கொஞ்சம் விசாலமான மேடை, மேடையின் நடுவில் எண்ணெய்ப் பசை பிசு பிசுக்கிற ஒரு பெருச்சாளி உருவம். உள்ளே குகை மாதிரித் தெரிகிற இடத்தில் மின் விளக் கொளியில் கரிய விநாயகர் சிலை. மேலே ரயில் ஓடு போட்டு மூடி முன்புறம் டாப் இறக்கியிருந்தார்கள். இடது பக்கம் சற்றுத் தள்ளி புன்னை மரம். கோயிலைச் சுற்றிலும் வசதியாக வலம் வருகிற அளவுக்கு இடம் விட்டு சுற்றுத் தடுப்பு இரும்புக் கிராதியால் வளைத்திருந்தார்கள். கோயிலின் முன்புறம் இரண்டு பக்கமும் சில பூச்செடிகள். முகப்பின் உயரத்தில் ‘வரசித்தி விநாயகர் கோயில்’ என்று கருப்பு வண்ணத்தில் வெள்ளை எழுத்துகள் பொறிக்கப்பட்ட தகரம் தொங்கியது. ‘த்’ ஐ மட்டும் யாரோ சுரண்டிப் பார்த்த முயற்சி தென்பட்டது. மதில் ஓரம் லாக் அடிக்கிற பசங்களின் வேலையாக இருக்கலாம் அல்லது பிராத்தனை  நிறைவேறாத யாருடைய கோப மாகவும் இருக்கலாம். எண்ணெய்ப் பிசுக் கோடு அழுக்கேறி கறுப்பாய்த் தெரிந்த - விநாயகரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“பாக்கறத்துக்குத்தான் விநாயகர் இப்படி தெரியாரோ தவிர, துதிக்கை யெல்லாம் தங்கம்” என்றான் சீனு.
“தங்கமா.....”
“ ஆமா”
“மத்ததெல்லாம் “
“ மிதி எல்லாம் கல்லுதான்”
“ஏன் துதிக்கை மட்டும் தங்கம்”
“ஒரு பத்து பன்னெண்டு வருஷத் துக்கு மின்ன அடிச்ச காத்து மழையில இதுக்கு முன்ன இருந்த மண்டபம் இடிஞ்சி உழுந்ததுல, விநாயகர் துதிக்கை ஒடஞ்சி போச்சாம்.  அப்ப அந்த செட்டியாரும், மொதலியாரும் தான் நன்கொடை வசூல் பண்ணி, கோயிலப் புதுப்பிச்சு கட்டி திருப்பணி, கும்பா பிஷேகம் எல்லாம் செஞ்சி, துதிக்கையையும் பவுனாலேயே செய்து போட்டுருக்காங்க. தினம் அபிஷேகம் பண்ணி, பண்ணி, எண்ணெய் பசையில பாத்தா தெரி யாது..”  என்றான். சீனு “பவுனுண்ணா பூராவும் பவுன் இல்ல. பவுன் தகடு கொழாய் மாதிரி செஞ்சி மாட்டி யிருக்கறாங்க.  இருந்தாலும் ஒரு பத்து பவுனுக்கு தேறும்னுவாங்க... அந்த அளவுக்கு மகிமை உள்ள விநாயகர் இவரு.”
சீனுவோடு கோயிலை ஒரு முறை வலம் வந்தவன் விநாயகரைப் பார்ப்பதற்காக சற்று நெருக்கத்தில் போனான். சுமாரான கூட்டம். சின்ன வாயிலை அடைத்து நிறையப் பேர் நின்றிருந்தார்கள். பெண்களின் எண்ணிக்கையே அதிகம். சீனு குழுமி யிருந்தவர்களில் யாரோ ஒரு இளம் பெண்மீது எதேச்சையாகப் படுவது போல உரசிக் கொண்டு நின்றான். இவனுக்கு இதிலெல்லாம் பிடிப்பில் லாமல் இருந்தது. எடையவே நின்று கொண்டிருந்தான். உள்ளே அர்ச்சகர் தீபாராதனை காட்டி முடித்து, தட்டுடன் வெளியே வர அனைவரும் தீபத்தை கைகளால் ஒற்றிக் கும்பிட்டு விபூதி வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டார்கள்.
சீனு கையில் ஏந்திய விபூதி யோடு வெளியே வந்து இவனிடம் நீட்டி ‘இந்தா இட்டுக்கோ’ என்றான். இவன் மெல்ல ‘வேண்டாம்’ என்று தலை யசைத்தான். சுவரில் பதித்திருந்த கண்ணாடி பார்த்து சீனு விபூதி இட்டுக் கொண்டு திரும்பிய பிறகு, இவன் சும்மா கண்ணாடி பார்க்கப் போனான். குனிந்து கலைந்து கிடந்த தலைமுடியை கையால் ஒதுக்கி இப்படியும் அப்படி யுமாகத் தலையைச் சாய்த்து திருப்பிப் பார்த்து ஒழுங்கு செய்து கொண்டு நிமிர்ந்த போதுதான் எதேச்சையாய் அவளை முதன் முதலில் பார்த்தான்.
கொஞ்சம் தள்ளி கையில் விபூதி யுடன் இவன் நகர்வதற்காகக் காத்துக் கொண்டு நின்றாள் அவள், இவன் அப்பால் விலக கண்ணாடியை நெருங்கினாள். இவன் லேசாய் அதிர்ச்சியுற்று, அவள் எவ்வளவு நேரமாய் இப்படி நின்று கொண்டிருந்தாளோ.. சீனு குனிந்து எவ்வளவோ நேரம் ஜாலம் வளர்த்தி, நெற்றியில் இட்ட விபூதியின் ஓரமெல்லாம்துடைத்து ஒழுங்கு செய்ய, அதன் பிறகு தான் குனிந்து தலை முடியை சரி செய்ய.. என்று நினைத்து யோசனையோடு ஒதுங்கி நின்று அவளையே பார்த்துக் கொண் டிருந்தான்.
அவள் கண்ணாடி முன் குனிந்து கையிலிருந்த விபூதியை எடுத்து நெற்றியில் அழகாக ஒரு குறுக்குக் கோடு இழுத்துக் கொண்டு, கூடவே நின்ற கண்ணாடி உயரத்துக்கு எட்டாத கௌன் போட்ட சிறுமிக்கும் இட்டு இளஞ் சிவப்பு நிறத் தாவணியால் துடைத்து சிறுமியை கண்ணாடிக்காகத் தூக்கிக் காட்டினாள்.
இவன் பக்கமாக எப்படியும் அவள் திரும்புவாள் என்று எதிர் பார்த்தான். இல்லை. சிறுமியை அழைத்துக் கொண்டு படியிறங்கும் போது ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். அது இவனுக்காகத் திரும்பி னாளா அல்லது உடன் வந்த வேறு யாருக்காகவாவது காத்திருக்கத்  திரும்பி னாளா என்பது நிச்சயமில்லை. உடன் வந்த சிறுமியுடன் கோயிலை மூன்று முறை வலம் வந்தவள் மறுபடியும் படியேறி, மேடை யிலிருந்த பெருச் சாளியை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு, அவள் பாட்டுக்கு உடன் வந்த சிறுமியின் தோளில் கைபோட்ட படியே இறங்கிப் போய்க் கொண்டிருந்தாள்.
தட சந்திப்பின் சுற்றுச் சுவர் வாயிலைக் கடந்து செல்கிற வரைக்கும் இவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். தன்னை அவள் பார்த் திருப்பாளா, தான் அவள் கவனத்தில் இடம் பெற்றிருப் போமா என்பது இவனுக்குத் தெரியவில்லை. அவள் ஒதுங்கி நின்று கண் ணாடிக்காகக் காத்திருந்த போது தன்னை அவள் எப்படியும் பார்த்திருப்பாள் பார்க்காமல் இருந்திருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான். அவள் பின்னாடியே போக வேண்டும் போல இருந்தது. சீனுவைப் பார்த்து ‘போலாமா’ என்றான்.
“இருப்பா, இதுக்குள்ள என்னா அவசரம். இனிமேதான் கலர்ல்லாம் நெறைய வரும். போவலாம் இரு”
இவன் பதில் எதுவும் சொல்லாமல் நின்றான். இருவரும் புன்னை மரத்தடியில் காலியாயிருந்த ஒரு சிமெண்ட் கட்டையில் அமர்ந்தார்கள். பொழுது ஆக ஆக கூட்டம் அதிகம் வந்து கொண்டிருந்தது. கோயில் முன்னும், பின்னும், பக்க வாட்டுகளிலும் குழல் விளக்குகள் போட் டார்கள். உள்ளே அர்ச்சகர் அடிக்கடி மணியாட்டுகிற சப்தம் கேட்டது. சற்றுப் பொறுத்து அர்ச்சகர் ஒரு குண்டான் நிறைய சுண்ட லோடு வெளியே வந்தார்.
“பஜார்ல வீனஸ் சில்க் ஹவுஸ் இருக்குதே தெரியுமா. அதும் ஓனர்தான் இதுக்கு தர்மகர்த்தா’ . அவருக்கு சொந்த ஊர் தெற்கே தூத்துக் குடிப் பக்கம் எங்கியோ கிராமமாம். வாலிப வயிசுல ஜோபில ரெண்டே முக்கால ணாவோட ஊட்டுல கோவிச்சிக்கினு வந்து திருட்டு ரயி லேறிட்டிருக்காரு பட்டணம் போறதுக்காக. வழில டி.டி.ஆர். பாத்து  இங்க எறக்கி உட்டுடவே, ராத்திரி வண்டிக்கு எப்படி யாவது ஏறிப் போயிடலாம்னு இங்க வந்து இந்த மரத்தண்ட படுத்தாராம். படுத்தவர் அப்படியே அசந்து தூங்கிப் போவ, பொழுது சாய பூஜைக்காக வந்த அர்ச்சகர் அவரத் தட்டி எழுப்பி யார், என்னாண்ணு விசாரிச்சி படிச்ச பையனா யிருக்கவே, அதுக்கு மின்ன இங்க ஒரு செட்டியார் ஜவுளிக்கட வச்சி இருந்தாராம், அவர்கிட்ட கொண்டு போய் உட்டிருக் கிறார். அவருகிட்ட குமாஸ்தா வேலைக்கு சேர்ந்தவர் தான். நல்ல புள்ளையா நம்பிகையா நடந்துக்கவே  சாதியெல்லாம் கூடபாக்காம தன் சொந்தப் பொண்ணையே அவருக்குக் குடுத்து ஊட்டோட மாப்புள்ளையா மாப்பிள்ளையா ஆக்கிக்னு இருக் கறாரு. செட்டியாருக்கு புள்ள கிள்ள எதுவும் கிடையாது. ஒரே பொண்ணு. சொத்து பூரா இவருக்குத் தான். அதிலிருந்து, இங்க வந்து தான நமக்கு இந்த வாழ்வு கிடைச்சுதுன்னு நன்றி மறக்காம இந்தக் கோயில அவர்தான் கவனிச்சிக்கனு வர்றாரு. லைட், ஃபேனு, அர்ச்சகர் சம்பளம், எல்லாம் அவர் தான்.தெனம் ரெண்டு வேள பூஜ நடக்கும். செவ்வாக் கிழம, வெள்ளிக்கெழம சுண்டல் தருவாங்க. வருஷத்துல ஒரு நாள் விநாயகர் சதுர்த்தி கோலகாலமா திருவிழா மாதிரி நடக்கும். வெளில இருந்து யார்னா இட்டாந்து வச்சி இன்னிசைக் கச்சேரி, சொற்பொழிவு ஏழ பாழைங்களுக்கு அன்னதானம் எல்லாம் பண்ணுவாங்க”
சீனு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.  இவன் எல்லா வற்றுக்கும் ம்...ம்... என்று தலை யாட்டிக் கொண்டிருந்தானே தவிர ஞாபகமெல்லாம் அவள் மேலேயே இருந்தது. அறைக்கு வந்து உணவகத்துக்கு போய் சாப்பிட்டு வந்து படுத்த பின்னும் கூட அவள் முகம் அப்படியே மனசில் நின்றது. சற்றுப் படர்ந்த முகம் அவளுக்கு, சிவந்த நெற்றி, அகலமான பெரிய கண்கள், மதமதப்பான பார்வை, சக மாணவிகளுக்குச் சற்றுக் கூடுதலான உயரம். மழுப்பினாற் போன்ற சதை.  மொழு மொழுவென சிவந்த கைகள். இடது கையில் சின்ன கடி காரம். வலது கையில் நாலு கருப்பு பிளாஸ்டிக் வளையல்கள்.  நெற்றியில் இட்ட விபூதிக் கோட்டோடு பளிச்சென்று நின்றது அவள் முகம்.  நிமிர்ந்த போது சலனமற்றிருந்த விழிகள் நன்றாகவே ஞாபகத் தில் இருந்தன.  யார், எவள் என்பது தெரியவில்லை.  அடுத்த வெள்ளிக் கிழமை இதே கோயிலில் பார்க்க முடியலாம், ஒரு வேளை செவ்வாய்க் கிழமையும் வந்தாலும் வரலாம்.
ஆனால் இரண்டு நாள் கழித்து காலை சிற்றுண்டி முடித்து உணவகத்தை விட்டு வெளியே வரும் போது இவன் எதேச்சையாக தெருவில் அவளைப் பார்த்தான்.  பள்ளிச் சீருடையில் இருந்தாள்.  அவள், இடது கை அடுக்கிய புத்தகங்களை மார்போடு சேர்த்து அணைத்துப் பிடிக்க வலது கையை வசதிப் போல் வீசி வீசி ஆட்டிக் கொண்டு நடந்து போனாள்.
அதே முகம்.  இவனுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. இவனைக் கடந்து செல்லும் போது உணவகத்தை விட்டு வெளியே வந்ததை அவள் பார்த்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.  பார்த்திருந்தாலும் மூன்று நாள் முன்பு கோயிலில் பார்த்த அவன் தான் இவன் என்பது அவளுக்கு நினைவிருக்குமா என்பது இவனுக்குச் சந்தேக மாயிருந்தது.  கோயிலுக்குப் போன அன்று இவன் வேட்டி கட்டிக் கொண்டு போயிருந்தான்.  இப்போது பான்ட் போட்டுக் கொண்டிருக் கிறான்.  அவளால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமா என்று யோசித்தான்.  அன்று ரோஸ் தாவணி போட்டு வந்த அவளை தற்போது சீருடையில் தன்னால் அடையாளம் காண முடியும்போது அவளாலும் தன்னை அடையாளம் காண முடியும் என்று சொல்லிக் கொண்டான்.  அவள் பின்னாலேயே மெல்ல நடக்கத் தொடங்கினான்.
அவள் பள்ளியை அடைந்து உள்ளே நுழைகிற வரைக்கும் பின்னாலேயே நடந்தான்.  அவள் இந்தப் பள்ளியில்தான் படிக்கிறாள் என்பது இவனுக்கு நிச்சயமானதும், பரவாயில்லை தினம் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.
அதற்குப் பிறகு காலையில் சற்று சீக்கிரமாகவே உணவகத்திற்கு வந்து சிற்றுண்டி சாப்பிட்டு வெளியில் வந்தமர்ந்து அவளை எதிர் பார்த்துக் காத்துக் கிடப்பதும், அவள் பின் னாலேயே நடப்பதும் இவனுக்கு வழக்கமாகி விட்டது.  சாலையில் நடக்கும் போது எப் போதாவது மிதிவண்டி மணிச்சத்தம் அல்லது வேறு ஏதாவது வாகனங் களின் ஒலிப்பான்கள் சத்தம் கேட்டு அவள் திரும்புவாள்.  தான் அவளைப் பின் தொடருகிறேனா என்று கவனிக்கவே அவள் அதை ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொள்வதாகச் சொல்லிக் கொண்டான்.
எப்படியும் அவளால் இவனைக் கவனிக்காமல் இருக்க முடியாது என்பதில் இவனுக்கு நம்பிக்கை யிருந்தது. இருந்தாலும் அவளை எப்படி அணுகுவது, தன்னை எப்படி வெளிப் படுத்திக்கொள்வது, அவளை எப்படிப் புரிந்து கொள்வது என்பது இவனுக்குக் குழப்பமாக இருந்தது.
என்றாலும் நம்பிக்கை இழக் காமல் தினம் அவள் பின்னாலேயே நடந்தான். பதினொண்ணரை மணிவாக்கில் அலுவலகத்தில் எந்த வேலை எப்படியிருந்தாலும் எடுத்து வைத்து இருக்கையை விட்டு எழுந்து அவளது பள்ளிக்கு எதிர்த்தாற் போலிருக்கும் தேநீர்க் கடையில் வந்து தேநீர் குடிப்பான். இடைவேளை முடிவு மணி அடிக்கிற வரைக்கும் அமைதியாக உட்கார்ந்து புகை பிடிப்பான்.
சாலையை விட்டு சற்று உயரமாக மேடைபோல அமைக்கப் பட்ட தேநீர்க் கடை விசிப் பலகையில் அமர்ந்தால் சாலைக்கு அப்பால் பள்ளிக்கூடச் சுற்றுச் சுவரும் திடலும் நன்றாகத் தெரியும்.  நீளமான வராந்தாவுக்கு முன்புறம் நடுவில் கொடிக்கம்பம் நிறுவப் பட்டிருக்கும் திடலில், நீல நீலமாய் சீருடை உடுத்தியிருக்கும் பெண்களில் அவளைக் கண்டுபிடிப்பது கடினமாய் இருக்கும். கண்கள் பூக்கக் காத்திருக்க ஓடிப் பிடித்து விளையாடும் பெண் பசங்களில் எப்போதாவது அவளும் தென்படுவாள்.
சிலசமயம் தான் ஒருவன் இங்கே அமர்ந்து அவளுக்காகக் காத்திருக்கிறோம் என்பது அவளுக்குத்  தெரியுமா என்கிற சந்தேகம் எழும்.  இந்தப் பக்கம் திரும்ப மாட்டாளா என்று இருக்கும்.  திரும்பு வாள். திரும்பினாலும் குறிப்பாக இவனைப் பார்த்தா மாதிரி யிருக்காது.  எப்படிப் பார்ப்பாள். கூட இருக்கிற பசங்கள் ஏதாவது நினைத்துக் கொள்ள மாட்டார்களா என்று சமாதானம் செய்து கொள்வான்.
அவள் பற்றி அறியும் தொடர் முயற்சியில் நாளா வட்டத்தில் அவள் பெயர் சுலோச்சனா என்றும் - அவளது பெண் தோழிகள் அவளை ‘சுலோ’ என்று அழைத்தார்கள் -  அவள் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறாள் என்றும் தெரிந்து கொண்டான்.  அவளது நண்பர்கள் வட்டாரத்தில் அவள் ஓரளவு முக்கியமானவளாகவே தெரிந்தாள்.  தோற்றமும் அதற்கு உரியதாகவே இருந்தது.  வெள்ளிக் கிழமை தோறும் அவள் கௌன் போட்ட சிறுமியோடு தவறாமல் கோயிலுக்கு வந்தாள்.  அவளை எதிர்பார்த்து ஒருவன் அவளைத் தொடர் கிறான் என்பதை அவள் அறிந்தாளா என்பது இன்னும் நிச்சய மாகவில்லை.  சீனு வராத ஒரு நாளில் இவன் அவளைக் கொஞ்ச தூரம் போகவிட்டு பின்னால் நடந்தான்.  இரண்டு வளைவு திரும்பி மேம் பாலத்துக்கு வலப்புறம் சந்தான கோபாலபுரம் பகுதியில், ஈசுவரன் கோயில் தெரு, எண். 14ஏ அவளுடைய வீடு என்பது தெரிந்தது. அதற்குப் பிறகு சீனுவோடு கோவிலுக்கு வந்தாலும் ஏதாவது சாக்கு சொல்லி அவனைக் கழட்டிவிட்டு அவளைப் பின் தொடர்ந்தான்.  அவள் வீட்டில் நுழைகிறவரைக்கும் அவள் பின் னாலேயே நடந்து வேறு ஏதோ வேலையாக வந்தவனைப்போல் அவள் வீட்டை நோட்டமிட்டபடியே கடந்து செல்வான்.
விடுமுறை நாட்களில் இவனுக்கு அறையில் இருப்புக் கொள் ளாமல் வாடகை மிதிவண்டி எடுத்துக்கொண்டு அவள் தெருப் பக்கமாகப் போவான்.  அரை வேக்காடு மாதிரி கிணிங்கிணிங் என்று மணியடித்துக் கொண்டு பறந்து அலம்பல் பண்ணாமல் நிதானமாக மிதித்துக்கொண்டு போவான். இரண்டு மூன்றுமுறை மெல்ல வீட்டைக் கடந்து செல்வான்.  எப்போதாவது அவள் சன்னலில் தென்படுவாள். இல்லா விட்டால் வெறும் உடம்போடு வெறும் ஜட்டி மட்டும் போட் டிருக்கிற சிவந்த கைக்குழந்தையை இடுப்பில் ஏற்றி வைத்தப்படி தூணில் சாய்ந்து நிற்பாள்.  அப்படி நிற்பது இவனை எதிர்பார்த்து நிற்பது மாதிரியோ, அல்லது இவனுக்கு தோற்றம் கொடுக்க வேண்டும் என்கிற நோக்ககில் நிற்பது மாதிரியோ இருக்கும். என்றாலும் இவன் தெருவில் தென்படுவதால் குறிப்பான எந்த மாற்றமும் ஏற்பட்ட மாதிரி  முகத்தில் ஒன்றும் தெரியாது.  எதையும் காட்டிக் கொள்ள மாட்டாள்.  ரொம்ப அழுத்தக்காரி என்று சொல்லிக் கொள்வான்.
இப்படி இவன் எப்போதும் யோசனை கவிந்த முகத்தோடு இருப்பதைக் கண்ட சீனு ‘என்னாபா ஒரு மாதிரியாயிருக்கற’ என்றான்.  ‘ஒண்ணுமில்லையே நான் எப்பவும் போலதான் இருக்கிறேன்’ என்று சமாளித்தான்.  யாரிடமும் இதைச் சொல்லிக் கொள்ள வேண்டும் என்று  இவனுக்குத் தோன்றவில்லை.  எப்படிச் சொல்வது, என்னவென்று சொல்வது என்று புரியாமலிருந்தான்.
இப்படியே நாட்கள் கழிய சதுர்த்தி நெருங்கியது.  கோயில் திரு விழாக்கள் பற்றியெல்லாம் எப் போதுமே பொருட்பாடு கொள்ளாத இவன் வரசித்தி விநாயகர்கோயிலுக்கு விழா வந்ததில் மிகுந்த உற்சாக மானான்.  சதுர்த்திக்கு மூன்று நாள் முன்பிருந்தே கொட்டகை போட    கழிகள் நடுவதையும், கீற்று வேய்வதையும் அலுவலகம் போகும் போதும் வரும்போதும் ஏதோ தன் சொந்த இல்லத்தில் நடைபெறும் விசேஷத்துக்கான ஏற்பாடு போல் நிறைவுடன் நின்று  பார்த்துக் கொண்டே போனான். இந்த சதூர்த்தியைப் பற்றி சீனு எவ்வளவோ சொல்லி யிருந்தான் என்றாலும் அது இவ்வளவு பிரம் மாண்டமாக இருக்கும் என்று இவன் எதிர்பார்க்கவில்லை.  கோயில் பக்க வாட்டுகள், எதிர்ப்புறமிருந்த விசாலமான இடம் எல்லா வற்றையும் வளைத்துப் போட்டு மிகப் பரந்த அளவில் பந்தலைப் போட்டிருந்தார்கள்.  முகப்பு வடிவம் கோட்டை வாயிலைப் போன்று வசீகரமாக, அலங்கரிக்கப் பட்டிருந்தது.  உள் பக்கம் பூவேலை செய்த வெள்ளைத் துணிவிரிப்பால் கீற்று தெரியாமல் மூடி அழகுபடுத்தி வெப்பம் தெரியாமல் இத மூட்டியிருந்தார்கள்.  கோயில் மண்டபத்தின் மீது படிந்திருந்த தூசு தும்புகளை நீக்கி தூய்மைப்படுத்தி, கோயிலைச் சுற்றியும் புல் பூண்டு களைச் செதுக்கி சுத்தம் செய்து வைத்திருந்தார்கள்.  உள்ளே விநாயகர் நீண்ட நாள் அழுக்கைக் களைந்து தங்கத் துதிக்கை பளபளக்க புதுப் பொலிவோடு அமர்ந்திருந்தார்.
சதுர்த்தியன்று காலை ஆறு மணி யிலிருந்தே ஒலி பெருக்கி பக்திப் பாடல்களைப் பொழியத் தொடங்கியது.  அன்று  விடுமுறையானா லும் பிரிவில் சில வேலைகள் இருந்ததால் அலுவலகம் கிளம்பியவன் போகும் போது பார்த்துக் கொண்டே போனான். நண்பகல் இவன் உணவுக்குத் திரும்பியபோது கோயிலில் ஏழை பாழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்கள் போலிருந்தது.   சட்டியும், குண்டானும், கிண்ணமும், ஒடுக்கு  விழுந்த அலு மினியத் தட்டுகளும், முட்டிக் கொள்ள சிலர் துண்டு வேட்டிகளிலும் சோற்றை வாங்கி சாப்பிட்டுக் கொண்டோ அல்லது முடிந்து வீட்டுக்கு எடுத்துக் கொண்டோ சென்றார்கள்.  எண் ணெய் காணாத பரட்டைத் தலைகளுடன், பஞ்சை பராதை களாய்த் தோற்றமளித்த அவர்களைக் காண இவனுக்கு என்னமோ மாதிரியிருந்தது.  வருடத்தில் ஒரு நாள் ஒரு வேளை கிடைக்கும் உணவுக்கே இவர்கள் இந்தப்பாடு படுகிறார்கள் என்றால் ஆண்டு பூராவும் அவர்கள் நிலமை என்ன? சோற்றுக்கு எப்படி வழி? என்பதை நினைக்க இவனுக்குத் துயரம் மேலிட்டது. தான் மூன்றுவேளை எந்தக் குறையும் இல்லாமல் சாப்பிட வாய்ப்பு பெற்றிருப்பதே ஏதோ குற்றச் செயல் போல் மனசை உறுத்த, வழக்கம் போல் சாப்பிட இயலாமல் அரை குறை யாகவே எழுந்தான்.
சாயங்காலம் அலுவலகம் விட்டு வந்ததுமே காபி குடித்து அறைக்குப் போய் முகத்தைக் கழுவி தலைவாரி வேட்டிக் கட்டிக் கொண்டு வந்து விட்டால் இப்படியே இருந்து இப்படியே சாப்பிட்டு அறைக்குப் போய் விடலாம் என்று நினைத்துக் கொண்டான்.
மாலை நான்கு மணியிலிருந்தே பந்தல் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்து கொண்டிருந்தது. சிறுவர், சிறுமிகள் ஒலிபெருக்கிப் பாடலைக் கேட்டு தாளத்திற்கேற்ப ஆடியும் குதித்தும் கும்மாளமிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண் டிருந்தனர்.  பொழுது சாய பட்டுப் புடவைகள், சலவை வேட்டிகள் சரசரக்க சற்று மேல் தட்டு மக்களின் வருகை தொடங்கியது.
இவன் ஒரு கம்பத்தில் சாய்ந்த வாறு ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்தான்.  பிரகாசமான ஒளி வெள்ளத்தில் பந்தலுக்குள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேடையை சாமி படங்களை வைத்து அலங்கரித் திருந்தார்கள்.  ருத்ராட்ச மாலை அணிந்த யாரோ ஒரு பெரியவர் ஒலி வாங்கி முன் அமர்ந்து சொற்பொழிவாற்றிக் கொண் டிருந்தார். கீழே விரித்த சமுக்காளங்களில் பக்தகோடிகள் அமர்ந் திருந்தார்கள்.  தாய்மார்களுக்குத் தனியிடம்.
ஏறக்குறைய எல்லார் கவனமும் மேடை மீதே இருக்க, இவன் பெண்கள் பக்கமாகப் பார்த்தான். ஒருமுறை, இரு முறை முழுவதும் பார்த்த பிறகு, கூட்டத்தில் சேராமல் கொஞ்சம் ஒதுங்கிய வாக்கில் நின்று கொண்டிருந்த பெண் களுக்காக மீண்டும் பார்த்தான்.  பக்க வாட்டில், கோவிலுக்குச் சென்று வருபவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வழியில் நின்று வந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்தான். எங்கேயும் அவளைக் காணவில்லை. ஏற்கெனவே வந்து போய் விட்டாளா, இல்லை இனிமேல்தான் வருவாளா என்பதும் தெரியவில்லை.
அடிக்கடி நுழைவாயிலையே பார்த்துக்  கொண்டிருந் தான்.  சொற்பொழிவு  நீண்டு கொண்டேயிருந்தது.  நடு நடுவே ராகம் போட்டு இழுத்த பாடல்களோடு பாலும், பனங்கல் கண்டும் சாப்பிட்ட கனத்த தொண்டையில், சளைக்காமல் பேசிக் கொண் டிருந்தார்  சொற்பொழிவாளர். இவன் லேசாய் அலுப்புற்று கடிகாரத்தைப் பார்த்தான்.  மணி எட்டே முக்கால் ஆகிப்போயிருந்தது.  ஒன்பது மணிக்கு மேலே போனால் ஒன்றுமிருக்காது இவன் சாப்பிடுகிற உணவகத்தில். போய் சாப்பிட்டு வந்து விடலாமா என்று நினைத்துப் புறப்பட்டான்.
இவன் முகப்பை நெருங்க, அவள் தோளில் தூக்கிய குழந்தை யுடன், பக்கத்தில் அவள் அம்மா வயதுக்குத் தோற்றமளித்த மூன்று பெண்மணிகள், கௌன் போட்ட சிறுமி சகிதம் வந்து கொண்டிருந்தாள்.  இவனுக்கு குதூகலம் ஏற்பட்டது. சட்டென்று திரும்பி நல்ல வெளிச் சத்தில் யாரையோ எதிர் பார்ப்பனவனைப் போன்ற தோற்றம் கொடுக்க அவள் கண்ணில் படுகிறா மாதிரி நின்றான்.  அவள் குழந்தையைச் சீண்டி வண்ண விளக்குகளைக் காட்டிய படியே உடன் வந்தவர்களோடு உள்ளே நுழைந்தாள்.
இவனைப் பார்த்தாளா இல்லையா என்பது தெரிய வில்லை.  கட்டாயம் பார்த்திருப்பாள்.  பார்த்து விட்டுத்தான் அதை மறைக்க அப்படி குழந்தைக்குப் பராக்கு காட்டிக் கொண்டு போனாள் என்று சொல்லிக் கொண்டான்.  முகப்பிலேயே நின்று அவள் எங்கே செல்கிறாள், எங்கே அமர்கிறாள் என்பதை உறுதிசெய்து கொண்டு சாப்பிடப் போனான்.  அவள் அநேகமாய் சாப்பிட்டு விட்டுத் தான் வந்திருப்பாள். ஒரு மணி நேரமாவது இருந்து கச்சேரி கேட்டு விட்டுத்தான் போவாள் என்று நினைத்தான். என்றாலும் திடீரென்று அவள் எழுந்து போய்விட்டாலும் விடலாம் என்கிற அச்சத்தில் அவசர அவசரமாகச் சாப்பிட்டு வெளியே வந்தான். ஒரு சிகரெட்டைக் கொளுத்தி வெடுக் வெடுக் கென்று இழுத்தப்படியே முகப்பை நெருங்கி கடைசீ தம்மையும் இழுத்துப்போட்டு மிதித்து வாயை நன்றாய் ஊதி முழுப்புகையையும் வெளியே விட்டு உள்ளே நுழைந்தான்.
அவள் உள்ளேயிருக்கிறாள் என்கிற நினைப்பே இவனுக்கு மகிழ்ச்சியூட்டுவதாயிருந்தது.  பரபரப்படை யாமல் நிதானத்தோடு அவள் அமர்ந் திருந்த இடத்தை நோக்கி நடந்தான்.  அவளையோ, உடன் வந்த பெண்கள் யாரையுமோ அங்கு காணவில்லை.  வேறு யார் யாரோ அமர்ந்திருந்தார்கள். இவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அதற்குள் எங்கே போயிருப்பாள். நிச்சயம் வீட்டுக்குப் போயிருக்க முடியாது.  அப்படி உடனே திரும்பு கிறவர்களாயிருந்தால் இப்படி இடம் பார்த்து வசதியாய் அமர்ந்திருக்க மாட்டார்கள்.  ஒருவேளை ஏதாவது மறந்து வைத்தோ அல்லது குழந்தை ஏதாவது தொந்தரவு செய்தோ கிளம்பி விட்டார்களோ.. குழப்பத்துடன், பெண்கள் பகுதியில் உட்கார்ந்திருப் பவர்களைப் பார்த்துக் கொண்டு வந்தான். கத்திரிப்பூப் போட்ட ரோஸ் நிற வாயில் தாவணி, மஞ்சள் கௌன் போட்ட குழந்தை உடன் வந்த பெண்மணிகள்.. நிதானத்தோடு தேடினான்.  இரண்டு மூன்ற முறை கண்கள் அலை பாய்ந்த பிறகு ஒரு வழியாக அவள் தென் பட்டாள்.  இவனுக்கு அப்பாடா என்று இருந்தது.  மேடையின் வலப்புறம் கூட்டம் அதிகமில்லாத இடத்தில், அதாவது வந்தவர்களெல்லாம் முன் புறமே முண்டியடித்தார்களே தவிர, அப்படி சுற்றிப்போய் தாராளமாக அமர்வோம் என்று முயலாத பகுதியில், அவள் உடன் வந்த பெண்மணிகளோடு கடைசீ வரிசையில் அமர்ந்திருந்தாள். முகம் மேடையை நோக்கி யிருந்தது.
இவன் யாரும் வித்யாசமாய் உணராத வகையில் கச்சேரியை நெருக்கத்தில் நின்று காண விழைபவனைப்போல் கூட்டத்தைச் சுற்றி அவள் அமர்ந்திருந்த பக்கமாகப் போனான்.  பின்னால் நின்று கொண்டிருந்த சிலரோடு இவனும் போய்ச் சேர்ந்து நின்று இயல்பாய் நேர்வது போல லேசாய்த் தொண்டையைச் செறுமினான்.  அவளுக்கு அது கேட்டதா இல்லையா என்பது தெரியவில்லை.  கேட்டாலும் அதைப் பொருட்படுத்திக் கொண்டு திரும்பிப் பார்ப்பாளா என்பதும் நிச்சயமில்லை. எனினும் அவள் திரும்புவாள், சுற்றுமுற்றும் பார்ப்பாள், தன்னைத் தேடுவாள் என்று எதிர் பார்த்தான்.
அவள் மேடையைப் பார்த்து அடிக்கடி குழந்தைக்காகக் குனிந்து வண்ண விளக்கு அலங்காரங்களைச் சுட்டி பராக்கு காட்டவே, ஒருவேளை தான் அறைக்குப் போய்விட்டோம் என்று நினைத்துக் கொண்டு விட் டிருப்பாளோ என்றும் நினைத்தான். இருக்காது. தான் அறைப்பக்கம் போகாது உணவகம் பக்கம் போனதை அவள் பார்த்திருப்பாள் என்று சொல்லிக் கொண்டான். என்றாலும் தான் திரும்பி வந்து விட்டோம்.  இங்கேதான் நின்று கொண்டிருக் கிறோம் என்பதை எப்படி அவளுக்கு உணர்த்துவது என்பது தெரிய வில்லை. இருந்து இருந்து பார்த்து அலுத்தவனுக்கு கடைசியாய் ஒரு யோசனை தோன்றியது.
யாரும் சந்தேகிக்காத வகையில் வலது காலிலிருந்த செருப்பை மெல்ல கழற்றி விட்டு, கால்களாலேயே நெருடி விரலிடுக்கில் சின்னதாக ஒரு பொடிக் கல்லைத் தேடி எடுத்து, முழங்காலில்  ஏதோ நமைச்சலெடுத்து சொரிய முனைபவனைப் போல் குனிந்து அதைக் கையில் எடுத்துக் கொண்டான்.  இது ரொம்ப அல்பமானதும் மட்ட மானதுமான காரியமாகவே இவனுக்குப் பட்டது.  இருந்தாலும் வேறு வழியில்லை.  ஆனால் ரொம்ப கவனமாகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எசகுபிசகாக வேறு ஏதாவது விபரீதமாக ஆகிவிடும். அப்படி ஏதும் ஆகி விட்டால் அதைவிடக் கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது.
பொடிக்கல்லை விரல்களில் நெருடியபடியே சந்தர்ப்பத் திற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.  யாரும் கவனிக்க வில்லை என்று இவன் நம்பிய ஒரு தருணம் வேறு எங்கோ பார்ப்பவன் மாதிரி பார்த்துக் கொண்டே விரலிடுக்கில் இருந்த கல்லை சிகரெட்டைச் சுண்டி விடுவது மாதிரி நேராய் அவளை நோக்கி சுண்டிவிட்டான்.  குறி தப்பாமல் அவள் தோள்பட்டையில் பட்டு விழுந்தது.  அவள் சட்டென்று திரும்பி பின்னால், பக்கவாட்டுகளில் சுற்று முற்றும் எங்கெங்கோ பார்த்தாள்.  பக்கத்திலிருந்த அம்மா எதுவோ கேட்டிருக்க வேண்டும். இவள் பதிலுக்கு என்னமோ சொன்னாள்.  அம்மாவும் மகளும் சுற்று முற்றும் பார்த்தார்கள். இவனுக்கு உடம்பெல்லாம் பதட்டத்தில் குப்பென்று  வியர்க்க அந்த நொடியே அங்கிருந்து எங்காவது காணாமல் போய்விட வேண்டும் போலத் தோன்ற லேசாய் பக்கவாட்டில் நகர்ந்து சட்டத்துக் கிடையில் தன்னை மறைத்துக் கொண்டான்.
அவள் குழப்பம் தெளியாமல் அவ்வப்போது சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  இவன் பக்கமாகவும் வந்தது பார்வை. இவன் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்கி இருந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான்.  அவள் தன்னைப் பார்த்து விட்டிருப்பாளோ என்று இருந்தது. ஆனால் பார்வையில் அப்படி எதுவும் தென்பட வில்லை.  ஏதும் குறி யற்றவளாகவே இருந்தது அவள் பார்வை.
இவன் இந்த சதுர்த்தியைப் பற்றி எவ்வளவோ கற்பனை செய்திருந்தான்.  அவளை எப்படியும் தனியே சந்தித்து விட லாம், பேசி விடலாம், ஒரு தொடர் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம், கூட்டத்தில் இவனைப் பார்த்ததுமே அவள் ஏதாவது சாக்கு சொல்லி இவனைச் சந்திக்க தனியே எழுந்து வந்து விடுவாள் என்று.  ஆனால் அவள் வரவில்லை. இவனைப் பார்த்தாளா இல்லையா என்பதைக்கூட உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.  ஒரு வேளை அம்மா வெல்லாம் இருப்பதால் எங்கடி போற என்று கேட்பார்களோ என்பதற்காகத் தயங்கி பேசாமல் உட்கார்ந்திருக்கிறாளா என்பதும் தெரியவில்லை.
பத்து மணிக்கு மேலே பிரசங்கம் எல்லாம் முடிந்து கச்சேரி ஆரம்ப மாகியது.  இன்னிசைக் கச்சேரி. முதலில் விநாயகர் துதியாக ஒரு பக்திப்பாட்டு, அப்புறம் சில திரைப்படப் பக்திப் பாடல்கள் என்று தொடங்கி பிற திரை இசைப்பாடல்களில் பயணித்தது.  இசை ரசனைக்கு ஏற்ப பழைய கும்பல் கொஞ்சம் கலைய, ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சிலர் வாய்ப்பாக இடம் தேடி அமர்ந்து கொண்டார்கள்.  புதியதாக வந்த கும்பலில் உணவகத்தில் வேலை செய்யும் பரிமாறுநர்கள், மளிகைக் கடைப் பசங்கள், கடைத் தெருவில் பணி பார்ப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள் அதிகம் இருந்தார்கள். அவள் கச்சேரியில் வியந்து உன்னிப் போடு கேட்டுக் கொண்டிருந் தாள்.  இவனும் கிடைத்த வாய்ப்பில் சற்று பக்கவாட்டில் நகர இப்போது இவன் நின்ற இடத்திலிருந்து அவளுக்கு நன்றாகத் தெரிய இருந்தான்.
அவள் சுற்று முற்றும் பார்த்து பக்கத்திலிருந்த அவள் அம்மா விடம் எதுவோ சொல்லிக் கொண்டு எழுந்தாள்.  ஒரு கிளர்ச்சியில் இவனுக்கு மனசு பதைபதைத்தது.  இவன் நின்றிருந்த இடத்தை விட்டு விடுவிடுவென வேகமாக நடந்து பந்தலின் பின்புறம் வெளியேறும் திசைக்காக அவள் பார்வையில் படுமாறு வந்து நின்று கொண்டாள்.  அவள் கூட்டத்தை விலக்கி லேசாய் வழி தேடியபடியே வெளியே வந்தாள்.  ஒரு கணம் தயங்கி நின்று சுற்று முற்றும் பார்த்து பந்தலுக்குச் சற்றுத் தொலைவில் சந்திப்பின் இரும்புக் கிராதியோரம் இருந்த மங்கலான இருட்டுப்பகுதியை நோக்கி நடந்தாள்.
இவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.  பார்த்தாளா இல்லையா என்பதும் தெரியாதிருந்தது. பார்வை யில் எந்தக் குறிப்பும் இல்லை.  எல்லாவற்றையும் மொத்தமாகப் பார்த்தது போல் இருந்தது.  ஒருவேளை கும்பலில் எப்படிப் பார்ப்பது என்று தயங்கியிருப்பாளோ.. தான் பின்னால் வரவேண்டும் என்பதை ஒரு குறிப்பால் உணர்த்தத்தான் அப்படித் தயங்கி நின்று அந்த இருட்டுக்காகப் போயிருப் பாளோ.. என்று குழம்பிக் கொண்டிருந்தான்.
கொஞ்சம் பொறுத்து தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்து இவனும் அந்த இருட்டுப் பக்கமாக போனான்.  அந்த மங்கிய இருளில் அவள் பாவாடையைப் பரப்பி, தரையில் படாமல் இரண்டு கையாலும் பின்புறம் தூக்கிப் பிடித்து தலையைக் குனிந்து குந்திக் கொண்டி ருந்தாள். இவன் மேலே போகத் தயங்கி அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றான். நிற்க என்னவோ மாதிரியிருந்தது. இவனும் வேட்டியை மடித்துக் கட்டி அவளுக்குச் சற்றுத் தூரத்தள்ளி வேறு ஒரு திசையை நோக்கி குத்துக் காலிட்டு அவளையே பார்த்தபடி  அமர்ந்து கொண்டிருந்தான்.
அவள் எழுந்திருக்க இவனும் சட்டென்று எழுந்து தன் இருப்பைக் காட்டிக் கொள்ளும் வகையில் அவள் பந்தலை நோக்கித் திரும்பும் வழியில் நின்றான்.  அவள் பாவாடையை உதறித் தொங்கவிட்டு தொடைகளுக்கிடையே  கையைக் கொடுத்து பாவடையோடு சேர்த்து நன்கு அழுத்தித் துடைத்து விட்டுக் கொண்டு எங்கே பாட்டு போய் விடுமோ என்பதைப் போல அவசர அவசரமாக ஓடினாள்.
இவன் சோர்ந்து நின்றான்.  அவள் ஓடுவதையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு வெறுமை தட்டியது.  பிடிப்பற்று நடந்து வந்தவன் மீண்டும் வந்து அதே இடத்தில் நின்றான்.  அவள் எதுவுமே நடக்காதது போல் முன்னைப் போலவே ஆர்வத்துடன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.
இவன் நின்று நின்று பார்த்து கால்நோக அலுப்படைந்து கச்சேரி முடியும் முன்பே அறைக்குத் திரும்பினான். இரவு முழுவதும் தூக்கம் பிடிக்காமல் கச்சேரிப் பாடல்களே காதில் உழன்று கொண்டிருந்தன.  இருளில் அவள் அமர்ந்திருந்ததும், அழுந்தத் துடைத்துக் கொண்டு ஓடியதும் எல்லாமே  ஒரு கனவைப் போல  மயங்கிக் கலங்கியது.
இரண்டு நாள் கழித்து சதுர்த்தி நடந்த இடம், கோவில், சுற்றியுள்ள பகுதி எல்லாமுமே சுத்தமாய் எந்த சுவடுமே தெரியாமல் வெறிச் சோடிப் போயிருந்தது.  பந்தல் அலங்காரங் களையெல்லாம் பிரித்து கழிகளையெல்லாம் பிடுங்கி விட்டிருந்தார்கள்.  அதற்கடுத்த நாள் இவன் அலுவலகம் போய்க் கொண்டிருக்கையில் விநாயகர் கோயி லருகே பெருங்கூட்டம் கூடி யிருந்தது.  மேம்பாலத்தின் மீது தூர நடந்து வரும்போதே பார்த்தான். கிட்டத்தில் நெருங்க சந்திப்பின் சுற்றுச் சுவர்களுக்கருகே கார்களும், ஜீப்பும், காவல் வேனும் நின்று கொண் டிருத்தன.  என்னவென்று தெரியவில்லை.  அருகிலிருந்தவர்களை விசாரிக்க “என்னாண்ணு தெரியல. நாங்களும் இப்பத்தான் வர்றோம்” என்றார்கள்.
இவன், காவலர்கள் தடுத்து நிறுத்தியிருக்க சுற்றி நின்று முந்திக்கொண்டிருக்கும் கூட்டத்துக்கு மேலே எட்டிப் பார்த்தான். யாரோ வெள்ளை சட்டை போட்ட கனத்த உடம்போடு கூடிய ஒருவரும், காவல் துறை அதிகாரி ஒருவரும் நாற்காலி போட்டுக் குந்தி யிருந்தார்கள்.  இரண்டு துணை ஆய்வாளர்கள், ஒரு ஆய்வாளர், காவல் தரப்பிலும், பத்திரிகைத் தரப்பில் சிலரும் கோவில் மேடையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தும், நடு நடுவே அர்ச்சகரை எதுவோ கேட்டும், கையிலிருந்த தாள்களில் குறிப் பேடுகளில் எழுதிக் கொண்டும், புகைப்படம் எடுத்துக் கொண்டும் இருந்தார்கள்.
கழுத்து வலிக்க எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவன், பக்கத் திலிருந்தவர்களை விபரம் கேட்க அவர்களும் எதுவும் தெரியாமல் அதைத் தெரிந்து கொண்டு போகத்தான் வந்ததாகச் சொல்ல கழுத்தை இழுத்துக் கொண்டு திரும்பினான்.  திரும்பியவனுக்கு ஒரே ஆச்சர்யம். அவள் எப்போதும் உடன் வரும் சக தோழிகளுடன் சீருடையில் நெஞ்சில் அழுத்திய புத்தகங்களோடு உள்ளே எக்கி, எக்கிப் பார்க்க முயன்று கொண்டிருந்தாள்.
இவன் சற்றுத் தள்ளி வந்து, அவள் திரும்பினால் அவள் பார்வை யில் படும்படி நின்று கொண்டிருந்தான்.  அவள் உள்ளே பார்க்கும் முயற்சியிலேயே இருந்தாள்.  தட சந்திப்பு  ஓரம்,   லாக் அடிக்கிற அரைக் கால் டிரௌசர் விடலைகளில் அழுக்குமுண்டா பனியனுடன் தோன்றிய  ஒருவன் அவள் கிட்டத்தில் நெருங்கி உள்ளே வேடிக்கை பார்க்கிற சாக்கில் அவள் மீது படுக்காத குறையாக தாவிச் சரிந்த  வாக்கில்  பின்புறத்தை முட்டிக் கொண்டு நின்றான்.
இவன் பதைபதைப்போடு தாங்க முடியாமல் தவித்தான்.  எப்படி இதைப் பொருட் படுத்தாமல் அவளால் இருக்க முடிகிறது என்று நினைத்துக் கொண்டான். கொஞ்சம் யோசித்து அவள் கிட்டத்தில் நெருங்கினான். இவனும் வேடிக்கை பார்க்கிற சாக்கில் இடுக்கில் நுழைந்து அவள் மீது சரிந்து நின்றவனை மெல்ல விலக்கி அந்த இடத்தில் எதேச்சையாக நேர்வதைப் போல இவனும் உரசிக் கொண்டு நின்றான்.  தன்னுணர்வாய்த் திரும்பிய அவள்  தன் மேல் இடித்துக் கொண்டு நிற்கும் இவனை எரிச்சலுடன் பார்த்தாள்.  ‘வாடி அந்தப் பக்கமா போய் பாப்பம்’ என்று உடன் நின்ற தோழிகளை அழைத்துக் கொண்டு அப்பால் நகர்ந்தவள் இவனைத் துச்சமாக ஒரு முறைப்பு முறைத்துவிட்டுச் சென்றாள். இவன் அதிர்ந்துஅவள் சென்ற திக்கையே விரக்தியோடு பார்த்துக் கொண்டு நின்றான்.
கூட்டத்தில் இவனுக்குச் சற்றுத்தள்ளி நின்றிருந்த யாரோ இரு பெரியவர்கள் பேசிக்கொண்டது இவன் காதுகளில் சுரத்தின்றி ஒலித்தது ‘எப்படி தெரிஞ்சுதாம்’ என்றார் ஒருவர்.  “காலைல வழக்கம் போல பூஜ பண்ண அர்ச்சகர் வந்துர்க்காரு.  அவருதான் பூட்டு ஒடைச்சிட்டிருக் கறப் பாத்துட்டுப் போய் தர்மகர்த்தாகிட்ட சொல்லியிருக்காரு”  “அடடா” அப்ப ராத்திரிதான்  நடந்திருக்கணும்” “ஆமாமா நேத்து பொழுது வரிக்கும் நல்லாதான இருந்து. அர்ச்சகர் வந்து பூஜல்லாம் பண்ணிட்டுத்தான  போயிருக்காரு.”
இவன் குழப்பத்தோடு அவர்களைப் பார்த்தான். பக்கத்திலிருந்த யாரோ ஒருவர் ‘என்னாங்க’ என்றார்.   “விநாயகர் துதிக்கைய  ராத்திரி யாரோ திருடிப் பூட்டாங்களாம்” என்றார் பெரியவர்.
***