திங்கள், 12 ஏப்ரல், 2010

சூரப்பன் வேட்டை

(சிறுகதை)

- சாங்கியன்

ஏமாளித் தேசம் கடும் வறட்சியில் திண்டாடியது. தேசத்தின் வயல்களெல்லாம் காய்ந்து பாளம் பாளமாக வெடித்திருந்தன. வறுமையில் மக்கள் நண்டு நத்தைகளைப் பிடித்துத் தின்றும், எலிக்கறி சாப்பிட்டும் நாளைக் கழித்தனர். பலர் பஞ்சம் பிழைக்க அண்டை நாடுகளை நோக்கிப் புறப்பட்டனர். சிலர் எந்த வழியும் புரியாமல் தற்கொலை செய்து கொண்டு மாண்டனர்.
ஏமாளித் தேசத்தின் மேற்கே ஏமாற்றுத் தேசம் இருந்தது. இந்த இரு தேசங்களையும் இணைத்து பழைமை மிகுந்த ஒரு ஆறு ஓடியது. இது ஏமாற்றுத் தேசத்தில் உற்பத்தியாகி, ஏமாளித் தேசத்துள் புகுந்து, பல்வேறு கிளைகளாகப் பிரிந்து ஏமாளித் தேசத்திற்க வளமூட்டிக் கடலில் கலந்தது. காலம் காலமாக இரு தேசங்களும் பகிர்ந்து கொண்டு வந்த இந்த ஆற்று நீரைச் சமீபத்தில் ஏமாற்றுத் தேசம் அணைக்கட்டுகள் பல கட்டியும் நீர்த் தேக்கங்கள் பல அமைத்தும் ஏமாளித் தேசத்திற்குச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது. இந்த அநியாயத்தைப் பலமுறை கேட்டும் ஏமாற்றுத் தேசம் எதற்கும் செவிசாய்க்காத நிலையில் ஏமாளித் தேசம் சிற்றரசுகளுக்குள் ஏற்பட்ட இப்பிரச்சினையைத் தீர்க்க வஞ்சகப் பேரரசிடம் முறையிட்டது. வஞ்சகப் பேரரசு நடவடிக்கை எடுப்பதாய்க் கூறி நாளைக் கடத்தியதே தவிர ஏமாளித் தேசத்திற்குரிய நீரைப் பெற்றுத்தர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஏமாளித்தேச மக்கள் தங்களுக்குள்ள நீரைப் பெற்றுத்தரவும், முறைப்படி நிர் கிடைக்காததால் வறட்சிக்கு நிவாரணம் கோரியும், பயிர்கள் காய்ந்து கருகிப் போனதால் வாங்கிய பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யக் கோரியும் ஏமாளித்தேச அரசையும் வஞ்சகப் பேரரசையும் வலியுறுத்தி போராட்டங்கள் தொடங்கினர்.
ஏமாளித் தேச ஆட்சியாளர்களோ மக்களைப் பார்த்து, கவலைப்படாதீர்கள் சூரப்பனை விரைவில் பிடித்து விடுவோம் என்றார்கள். சூரப்பனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம், சூரப்பனை இதில் ஏன் இழுக்க வேண்டும் என்று ஏமாளித் தேச மக்களுக்குப் புரியவில்லை என்றாலும் ஆட்சியாளர்கள் அவ்வப்போது இதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஏமாளித் தேசத்தையும், ஏமாற்றுத் தேசத்தையும் இணைக்கும் எல்லைப் பகுதியில் இரண்டு தேசத்தையும் உள்ளடக்கிப் பலகாத தூரம் நீண்ட மிகப் பரந்த காடு ஒன்று இருந்தது. பத்து தப்படிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு முட்புதர்களும், செடிகொடிகளும், மரங்களும் மண்டி வளர்ந்து அடர்ந்து கிடக்கும் காடு அது. இந்த வனப்பரப்பில் தான் சூரப்பன் வாழ்ந்து வருவதாகச் சொல்லப்பட்டது.
மலைப் பகுதிகளையொட்டிய ஒரு சிறுகுக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் சூரப்பன் பிறந்திருந்தாலும் சிறு வயதிலிருந்தே அவன் வன வாழ்க்கையை மேற்கொண்டு காட்டு வாசியாகவே மாறிவிட்டதில் காட்டில் கரடி வேட்டையாடி அதன் ரோமம் பல், தோல் முதலானவற்றைக் கள்ளத் தனமாகக் கடத்தியும் காட்டு மரங்களை கண்டமேனிக்கு வெட்டி வீழ்த்தியும், சூரப்பன் வாழ்ந்து வருவதாகவும், இதற்கு இடையூறாக இருக்கும் வனச் செவகர்களையும், காவலர்களையும் அவன் கொடூரமாகக் கொன்று போடுவதாகவும் காட்டின் இண்டு இடுக்கு, மூலை முடுக்குகளெல்லாம் அவனுக்கு நன்கு அத்துப்படியாகி விட்டதால், காட்டில் அவன் எங்கு இருப்பான், எங்கு இல்லாமலிருப்பான் என்று அறிய முடியாத படிக்கு மாயாவிபோல் திரிந்து வருவதாகவும் அவன் அசகாய சூரன்என்றும் எந்தக் கொம்பனாலும், எப்படிப்பட்ட காவல் படையாலும் அவனைப் பிடிக்க முடியாது என்றும் இதனாலேயே யார் கையிலும் பிடிபடாமல் அவன் திரிந்து இவற்றையெல்லாம் விற்று வருவதாகவும் ஆட்சியாளர்கள் சொன்னார்கள்.
மலைவாழ்ப் பகுதி மக்கள் கூற்றோ வேறு விதமாக இருந்தது. ஆட்சியாளர்கள் சொல்லுமளவுக்கு சூரப்பன் அவ்வளவு கொடுமையானவன் இல்லை என்றும், ஆட்சியாளர்களுக்குத்தான் கொடூரமானவனே தவிர, சாதாரண மக்களுக்கு அவன் நல்லெண்ண மின்ன பரோபகாரி என்றும் சொன்னார்கள். தவிர அவன் மலைவாழ் மக்கள் பால் பாசமும் பரிவும் கொண்டவனாக, அவர்களது இல்லங்களில் நடைபெறும் நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டு உதவுவதாகவும் சொன்ன அவர்கள் சூரப்பனைப் பிடித்து எங்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. என்றாலும் ஆட்சியாளர்கள் தான் தங்களுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் சூரப்பனைப் பிடித்து விடுவதாகச் சொல்வதுடன், ஆட்சியாளர்களால் சூரப்பனைப் பிடிக்க முடியாமலிப்பதற்குக் காரணம், நாட்டிலிருந்து கொண்டே அவனுக்கு உதவும் முக்கியப் புள்ளிகள் தான். சூரப்பனை இத்தொழிலுக்கு இழுத்து விட்டு, அதில் அவனுக்கு ஆசை காட்டி அவனைக் கருவியாக வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள்தான். இவர்களே சில வனச் சேவகர்களையும், காவலர்களையும் தங்கள் கையாட்களாக்கிச் சூரப்பனுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உதவி இருக்கும்வரை சூரப்பனைப் பிடிப்பது என்பது பகற்கனவாகவே இருக்கும் என்றுச் சொன்னார்கள்.
என்றாலும் சூரப்பனைப் பிடிப்பது பற்றியே ஆட்சியாளர்கள் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தார்கள். சூரப்பனைப் பிடிக்க முதலில் ஏமாற்றுத் தேசமும், ஏமாளித் தேசமும் தடாலடிப் படை என்கிற ஒரு படையை அமைத்தது. தடலாடிப்படை என்பது, சாதாரணக் காவல் படைகளுக்கு உள்ளது போன்ற கட்டுப்பாடுகளோ விதிமுறைகளோ ஏதுமின்றி எதையும் தடலாடியாகச் செய்யும் ஒரு படையாக இருந்தது. இப்படையாட்கள் குதிரை மீதேறி அதன் குளம்புகள் ஒலிக்க புழுதியைக் கிளப்பியபடியே, வனப்பகுதியின் பல இடங்களில் வலம் வந்தார்கள். சந்தேகப்படும் இடங்களில் குதிரைகளை நிறுத்தி, அப்படியே கூட்டமாக இறங்கி தோளில் மாட்டியதுப்பாக்கிகளுடன் தோல் காலணிகள் சடசடக்க நாலாபுறமும் ஒடுவார்கள். பிறகு வெறுங்கையோடோ அல்லது யாரையாவது பிடித்து இழுத்துக் கொண்டோ திரும்புவார்கள்.
தடாலடிப் படைக்கு சூரப்பனைப் பிடித்ததோ இல்லையோ, மலைவாழ்ப் பகுதிமக்கள் வளர்த்து வந்த ஆடு கோழிகளைப் பிடித்தது. மலைப் பகுதித் தயாரிப்பான கள்ளச் சாராணத்தைப் பிடித்து மூச்சு முட்டக் குடித்து கோழிக் குருமாவும் ஆட்டுக்கறி வறுவலும் தின்று திளைத்தது. சரக்க தினவெடுக்க வயது வித்தியாசமின்றி மலை வாழ்ப்பகுதிப் பெண்கள் பலரைத் தங்கள் பசிக்கு இரையாக்கியது. இது போக விசாரணை என்கிற பெயரில் இழுத்து வந்தவர்களை கொடுமையாகச் சித்ரவதை செய்தது. அல்லது ஈவு இரக்கமின்றிக் கொன்று போட்டது.
இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட தடாலடிப் படையினரை அவன் பதிலுக்குக் கொன்று போட்டான். தடாலடிப் படைப் பகுதிகளில் கண்ணி வெடி வைத்தான். இதனால் தடாலடிப் படையினரின் இம்சை மலைவாழ் மக்கள் பால் கூடுதலாகியது. தாங்காமல் சூரப்பன் நடமாட்டம் பற்றித் தங்களுக்குத் தெரிந்த தகவல்கள் சிலவற்றை மக்கள் தடாலடிப் படையினருக்குச் சொல்ல, காவவர்களுக்கு மக்கள் உளவு சொல்வதாக சூரப்பன் சந்தேகிக்க, சந்தேகப்பட்ட நபர்களைத் தன்வளையத்திற்குள் கொண்டு சென்று கொன்று போட மக்கள் என்ன செய்வது என்று புரியாமல் ‘இருதலைக் கொள்ளி’ எறும்பாய்த் தவித்தனர். தடாலடிப்படையின் அத்துமீறல் பற்றி அரசுக்கும் புகார் தெரிவித்தார்கள்.
இதற்கிடையில் ஏமாற்றுத் தேசத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரை அவர் வீட்டிலிருந்தே சூரப்பன் கடத்தி வந்து தன் காலடியில் வைத்து பல்வேறு கோரிக்கைகளுடன் ஏமாற்றுத் தேசம் ஏமாளித் தேசத்திற்கு உரிய நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கோரியதுடன் தடாலடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும்எ ன்று கோர அது இருதேச அரசுகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சந்தர்ப்பத்திலும் ஏமாளித் தேசத்தைத் சார்ந்த முக்கியப் பிரமுகர்களே சூரப்பனிடம் தூது போய் பேச்சுவார்த்தை நடத்தி அம்முக்கியப் புள்ளியை மீட்டு அவர் வீட்டில் விட்டு வந்தார்கள். சூரப்பனுக்கு ஏற்பட்ட தொரு கடும் நெருக்கடி காரணமாகவே இக்கடத்தல் நடத்தப்பட்டதாகவும் பெருந்தொகை இதில் கைமாறியுள்ளதாகவும் எங்கும் பேச்சு அடிப்பட்டது.
இருதேச அரசுகளுக்குமே இது பெருந்தலைவலியாகியது. சூரப்பன் உயிரோடு இருக்கும்வரை இந்தத் தலைவலி ஒயாது என்று கருதிய இரு தேச அரசுகளுமே சூரப்பனை எப்படியாவது ஒழித்துவிட முடிவு செய்து வஞ்சகப் பேரரசின் உதவியை நாடின. சிற்றரசுகளின் கோரிக்கையை ஏற்ற பேரரசும் தன் பங்கிற்கு ஒரு சிறப்புப் படையை அனுப்ப இந்த சிறப்புப்படை எப்படியும் சூரப்பனைப் பிடித்து வரும் என்று நம்பப்பட்டது.
நவீனரகப்போர் ஆயுதங்களையும் இரவிலும் தெளிவாகக் காணத்தக்க தொலை நோக்கிகளுடனும் சூரப்பன் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் முகாமிட்ட இச்சிறப்புப்படை இரண்டு மாதங்கள் கழித்து முகாமைக் காலி செய்து வஞ்சகப் பேரரசின் தலைநகர் நோக்கித் திரும்பியது. இது பற்றிச் செய்தி திரட்டுவோர் கேட்டதற்கு சூரப்பன் எங்கிருக்கிறான் என்று எங்களுக்குச் சொன்னால் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்திப் பிடிப்பதுதான் தங்கள் வேலையே தவிர, அவன் எங்கிருக்கிறான் என்று தேடுவது தங்கள் வேலையல்ல, எனவே சூரப்பன் எங்கிருக்கிறான் என்று கண்டு பிடித்து எங்களுக்குச் சொன்னால் நாங்கள் வந்து அவனைப் பிடித்துக் கொடுப்போம் என்றும் சிறப்புப் படையின் தலைவர் தெரிவித்ததாகச் சொன்னார்கள். இதற்கு மேல் சூரப்பனைப் பிடிக்க வஞ்சகப் பேரரசு மையப் படையை அனுப்பிவைக்குமா என்று கேட்டதற்கு மையப்படை என்பது நாடுகளுக்கிடையேயான போருக்குத் தான் பயன்படுத்தப்படுமே தவிர சாதாரண ஒரு குற்றவாளியைப் பிடிக்க அதைப் பயன்படுத்த மாட்டார்கள். இதற்கெல்லாம் மையப்படையைப் பயன்படுத்துவது அதன் தரத்தை தாழ்த்துவதாகி விடும். படையதிகாரிகளும் அதற்கு ஒப்ப மாட்டார்கள் என்றார்கள்.
ஆக, பேரரசுப் படையாலும் சூரப்பனைப் பிடிக்க முடியவில்லை என்கிற நிலையில் மீண்டும் சிற்றரசுகளே சூரப்பனைப் பிடிக்கும் முயற்சியைத் தொடர்ந்தன. தடாலடிப் படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முயற்சி மேற்கொள்ளாத நிலையில் சூரப்பனை உயிருடனோ பிணமாகவோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தடாலடிப் படையினருக்கும் சூரப்பனைக் கண்டதும் சுடவோ, சுட்டுப் பிடிக்கவோ கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு தடாலடிப் படைத் தலைவர்களையும் அரசு அவ்வப்போது புதிது புதிதாக நியமித்தது.
பொறுப்பேற்கும் ஒவ்வொரு அதிகாரியும் தாங்கள் எப்படியும் சூரப்பனைப் பிடித்து விடுவோம் என்று சூளுரைத்ததுடன் சூரப்பனை மிகவும் கிட்டத்தில் நெருங்கி விட்டதாகவும் இன்னும் இரண்டொரு தினங்களில் சூரப்பனைப் பிடித்து விடுவோம் என்றும்அறிக்கை விட்டு இதற்கான ஆதாரங்களையும் அவ்வப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
தேடுதல் வேட்டையின் போது ரம்மியமான காலைப் பகுதியில் வீசும் மெல்லிய இளம் காற்றில் இயற்கைக்கு மாறான ஏதோ ஒரு துர்நாற்றமும் கலந்து வருவதாக உணர்ந்த தடாலடிப் படைத்தலைவர் தன்னுடன் வந்த படையாட்களைப் பார்த்து யாராவது காலைக்கடன் முடிக்காமலிக்கிறீர்களா என்றார். எல்லோரும், இல்லை ஐயா முடித்து விட்டோம் என்றனர். அதிகாரி மீண்டும் தீவிர யோசனையுடன் சில தடவை மூக்கை உறிஞ்சி மோப்பம் பிடித்து இது ‘யார் விட்டதாய் இருக்கும்’ என்று சிந்தையில் ஆழ, சட்டென்று அவர் முகம் மலர்ச்சியடைந்தது. அடுத்த நாள் செய்தி யேட்டில் இது பற்றிய முழுவிவரமும் வெளியாகியிருந்தது. தேடுதல் வேட்டையின் போது தடாலடிப் படைத் தலைவர் உணர்ந்த துர்நாற்றம் சாதாரண காட்டு விலங்குகள் விட்டதாகச் சொல்ல முடியாது, மனிதர்கள் விட்டதாகவே இருக்க முடியும் என்றும், அதேவேளை இது பருப்பு சாம்பார் காய்கறி உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருபவர்கள் விட்டதாகவும் தெரியவில்லை. காடை, கௌதாரி, மான், முயல், உடும்பு அயிட்டங்களாகவே தெரிகிறது என்றும், மனிதர்களிலும் நாட்டில் வாழ்பவர்கள் இதுபோன்று விட சாத்தியப்படாது, தொடர்ந்து காட்டில் வாழ்பவர்களுக்கே இது சாத்தியம் என்றும் எனவே இது சூரப்பனோ அல்லது அவனது கும்பலைச் சேர்ந்தவர்களோ விட்டதாகத்தான் இருக்க முடியும் என்றும் சொன்ன அவர் இதை உறுதி செய்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட இந்த அயிட்டத்தை ஆய்வுக்காகக் கண்ணாடிக் குப்பியில் அடைத்து வல்லுநர் குழுவுக்கு அனுப்பி யுள்ளதாகவும், அது சூரப்பன் கும்பல் விட்டதுதான் என்பது உறுதியானால் இன்னும் ஆறுமாதத்திற்குள் அவனைப் பிடித்து விடுவது நிச்சயம் என்றும் அறிவித்திருந்தார்.
இவ்வாறே அடுத்தடுத்து வந்த அதிகாரிகளும் சூரப்பன் கும்பல் வெளியேற்றியதாக நம்பப்பட்ட நீர்ம, திண்மப் பொருட்களை, அஃதாவது காய்ந்த வனப் பகுதியில் திட்டுத் திட்டாகத் தெரிந்த ஈரப்பகுதியைப் பார்த்து, பிடித்து வைத்த பிள்ளையார் போல் கூம்பிய முனைகளுடன் ஆங்காங்கே இறக்கப்பட்டிருந்த சரக்குகளைப் பார்த்து இதுவும் சூரப்பன் கும்பலின் உபயமாய்த் தான் இருக்கும் என்று நம்புவதாகவும் இவை உறுதியாகும் பட்சத்தில் சூரப்பன் கும்பலைப் பிடிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இப்படியாகத் தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டிருக்க அடைமழை பெய்து கொண்டிருந்த ஒரு நாளின் நள்ளிரவில் ‘அரசு முரசம்’ அறையும் ஒலி கேட்டது. ஏதோ முக்கிய சேதி என்று மக்கள் திரள சூரப்பனும் அவனது கும்பலைச் சேர்ந்தவர்களும் சுட்டுக் கொல்லப் பட்டதாக அரசு அறிவித்தது. மக்கள் நம்ப மாட்டார்கள் வியந்தும் சந்தேகத்தோடும் கேள்விக்குறி தோன்றும் முகத்தோடும் ஒருவரை யொருவர் நோக்க தடாலடிப் படையினர் சூரப்பன் மரணத்தை உறுதிசெய்து வாணவேடிக்கைகள் நடத்தியும் பட்டாசுகள் கொளுத்தியும் சூரப்பன் மறைவையும் தங்கள் வெற்றியையும் கொண்டாடிக் காட்டினார்கள்.
தடாலடிப் படைத்தலைவர் தான் சூரப்பனைக் கொன்ற விதம்பற்றி செய்தியாளர்களுக்கு இவ்வாறு அறிக்கை தந்தார். சூரப்பன் சிலகாலமாகவே நோய் வாய்ப்பட்டிருக்க அக்கும்பலுக்குள் அடுத்து யார் தலைமைப் பொறுப்புக்கு வருவது என்று போட்டி நிலவியதாகவும், சூரப்பன் சிகிச்சைக்காக காட்டை விட்டு வெளியே வந்து மருத்துவம் பார்க்க முயன்றதாகவும், இதை உளவுப் பிரிவின் மூலம் அறியவந்த தடாலடிப் படைத்தலைவர் தம்படையாட்களை அனுப்பி அவனது நம்பிக்கையப் பெற்று அவர்களே பல்லாக்குத் தூக்கிகளாகக் இருந்து காட்டை விட்டு அவனை வெளிக் கொண்டு வந்ததாகவும், வெளிவந்த அவனைக் கரணடையக் கேட்டபோது அவன் கரணடையாமல் தடாலடிப் படையைப் பார்த்துச் சுடமுயன்றதாகவும் தற்காப்புக்காக தடாலடிப்படையும் சுட சூரப்பனும் அவனது ஆட்களும் குண்டடி பட்டு மாண்டு போனதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தடாலடிப்படையின் தன்னிகரற்ற சாதனையாக சூரப்பன் படுகொலையை, அரசு பாராட்டி மகிழ, செய்தியேடுகள் பலவும் ‘சூரப்பவதம்’ என்றும் ‘சூரப்ப சம்ஹாரம்’ என்றும் சித்தரித்து சூரப்பன் மறைவைக் கொண்டாடின.
ஏற்கெனவே ஆட்சி நடத்தியவர்கள்,நடத்தாதவர்கள் எனப் பாகுபாடியின்றி அனைத்து முக்கியபுள்ளிகளும் சூரப்பன் மறைவிற்கு தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.
சூரப்பனால் கடத்தப்பட்டு 108 நாட்கள் பிணைக் கைதியாக இருந்து வெளிவந்த போது சூரப்பன் தன்னை மிகவும் பண்போடு நடத்தினான் எனவும் சூரப்பன் மிகச் சிறந்த மனிதாபிமானி எனவும், அப்போது பாராட்டிப் பேசிய ஏமாற்றுத் தேச முக்கியப் புள்ளி அப்பாடா ஒரு மனித மிருகம் ஒழிந்தது. எனக்கு மிக மகிழ்சசி. இனி என்சொந்த வீடில் பயமின்றி வாழ்வேன் என அறிக்கை விட்டார்.
சூரப்பன் வேட்டையில் தன்கு கவெற்றிகிட்ட வேண்டும் என்றுஅம்மன் கோயிலுக்கு வேண்டுதல் செய்துகொண்டிருந்த தடாலடிப்படைத் தலைவர் தமது வேண்டுதல் படி அம்ன் கோயிலுக்குப் போய் கை நகங்களை வெட்டிக் காணிக்கைசெலுத்திவிட்டு வந்தார். அத்துடன் சூரப்பன் காட்டிலிருந்து ஏமாளித் தேசத் தலநகருக்குத் தன் படைபரி வாரங்களுடன் கால்நடையாகவே பாதயாத்திரை செல்பவராகவும் அறிவித்தார்.
சூரப்பனைச் சுட்டு வீழ்த்தி காகசம் நிகழ்த்தியமைக்காக தடாலடிப் படையினர் ஆயிரம் பேருக்கும் தலா ஆயிரம் பொற்காசுகளையும் அவர்கள் விரும்புமிடத்தில் ஒரு குடியிருப்பு மனையும் வழங்குவதாக ஏமாளித் தேச அரசு அறிவித்தது.
சூரப்பன் தேடுதல் வேட்டையில் தாங்களும் பங்களிப்புச் செய்துள்ளதாகத் தெரிவித்த வனச்சேவகர்கள், எங்களுக்கும் அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க அரசு அவர்களுக்கும் பரிசு அறிவித்தது.
இதையொட்டி காவல் பரிவுகள் பலவும் சூரப்பன் வேட்டையில்தஙகள் தங்கள் பங்களிப்பைச் சொல்லி, தங்களுக்கும் அரசு பரிசுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கத் தொடங்கின.
இவ்வாறு நாடெங்கும் அமர்க்களமாக சூரப்பன் கொலையில் பல மர்மங்கள் இருப்பதாகவும் சரணடைய விரும்பிய சூரப்பனை அநியாயமாகச் சுட்டுக் கொன்று விட்டதாகவும், அல்லது சூரப்பனை நான்கைந்து நாட்கள் முன்னதாகவே பிடித்து வைத்திருந்துசித்ரவதை செய்து கொன்று விட்தாகவும், அல்லது காவல் படையின் பிடியில் சிக்க விரும்பாமல் தானாகவே தற்கொலை செய்து கொள்ள இறந்துபோன சூரப்பனையே தடலாடிப் படை சுட்டுக் கொன்றதாகப் பொய் கூறி பெருமை பாராட்டிக் கொள்வதாகவுமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டதுடன், தடலாடிப் படைக்கு பொற்காசுகள் பரிசளிப்பதைத் தடைசெய்யக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
ஏமாளித்தேசம் எது பற்றியும் கவலைப்படாமல் தடலாடிப்படைக்கு விழா எடுத்து பாராட்டுப் பத்திரமும் பொற்கிழியும் பரிசாக வழங்கியது. டலாடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தங்களும் வழங்கப்படாத நட்ட ஈட்டிற்காக மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட் மக்கள் இடையில் பெய்த கடும் மழையால் பாதிக்கப்பட்டு வறட்சி நிவாரண நிதியோடு வெள்ள நிவராண நிதியும்கேட்டுக் கொண்டிருந்தனர். ஏமாளித் தேச அரசு எதற்கும் செவி சாய்க்காது. காவல் படையினருக்கு பதவி உயர்வுகள் வழங்கி, படைக்குப் புதிதாக ஆள் சேர்த்துக் கொண்டிருந்தது. ஏமாளித்தேச மக்கள் நீண்ட காலம் ஏமாளிகளாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

விசுவாசம்-

சிறுகதை
விசுவாசம்
- சாங்கியன்
சாமானிய மக்கள் வாழும் குடிசைகளின் பக்கமாகக் கேட்ட அந்தக் குரைப்புச் சத்தம் வித்யாசமாக இருந்தது. இதற்குமுன் எப்போதும் கேட்டறியாதது போன்ற ஒரு வசீகரத் தன்மை கொண்டு மக்களை ஈர்த்தது. முதலில் அது வழக்கமாக எப்போதும் கேட்டதுதான் என்பது போல மக்கள் அதைப் பொருட்படுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள். பின் சத்தம் வேறு மாதிரி இருக்கவே அது பற்றி ஆறிய ஆவல் கொண்டவர்களாகத் தங்கள் குடியிருப்புகளின் தட்டிப்படல்களையும், சாக்குப் படுதாக்களையும் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். ஒட்டிய வயிறுகளுடன் எலும்பும் தோலுமாய்ப் பஞ்சடைந்து கண்களோடு காட்சி தந்த அவர்கள் செவிக்கு சத்தம் மட்டும்தான் கேட்டதே தவிர அது எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை.
சத்தம் வரவர மிக அருகில் கேட்பதாக இருந்தது. தெருமுனையில் அதன் தோற்றம் தெரிய பலரும் அதை ஆவலுடன் பார்த்தார்கள். செம்பழுப்பும் கருமையும் கலந்த நிறத்துடனும் இவர்களைப் போலவே வத்தலும் தொத்தலுமாக மெலிந்த தோற்றத்துடனும் காட்சி தந்த அது அது பாட்டுக்கு தெருவே குரைத்துக் கொண்டு போனது. தலையை மட்டும் உயர்த்தி இருபுறமும் இருந்து, குடியிருப்புகளைப் பார்த்துக் குரைத்தது. அது என்ன குரைத்துக் கொண்டு போகிறது? ஏன் குரைத்துக் கொண்டு போகிறது? என்பது எவருக்கும் புரியவில்லை. என்றாலும் அதன் குறைப்பு எல்லோரையும் கவனிக்க வைப்பதாய் இருந்தது.
தினம் அது காலை மாலை இரண்டு வேளையும் வந்து குரைத்து விட்டுப்போனது. காலையில் மக்கள் அனைவரும் வேலைக்குப் போகும் முன்பும், மாலையில் வேலை முடிந்து திரும்பிய பின்னுமாக அது வந்து குரைத்து விட்டுப் போனது. முதல் சில நாட்கள் தெருவோடு குரைத்துக் கொண்டு போன அது பிறகு, வீடு வீடாக நின்று வீட்டிலுள்ளவர்களை நோக்கி ஏதோ சொல்ல முனைவது போல குரைக்கத் தொடங்கியது. மார்கழி மாதத்தில் வீட்டுக்கு வீடு வந்து சேதி சொல்லி விட்டுப் போகும் குடு குடுப்பைக் காரணப் போல இதுவும் வீடு விடாக ஏறி இறங்கிக் குரைத்து விட்டுப் போவதை மக்கள் விசித் திரத்துடன் பார்த்தார்கள். சிலர் இதன் குரைப்பில் ஏதாவது சேதி இருக்கலாம் என்றார்கள்.
அது எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது, இவ்வளவு காலம் எங்கே தங்கியிருக்கிறது? என்பது பற்றியெல்லாம் எவருக்கும் தெரியவில்லை, சிலர் இவ்வளவு காலமும் அது ஊர் முகப்பின் வண்டிப்பாதையோரம் இருந்த இலுப்பை மரத்தடியிலோ அல்லது இடிந்து போய்க் கிடக்கும் பொதுச் சாவடியின் குட்டிச் சுவர் ஒரத்திலோ படுத்துக் கிடந்ததாகச் சொன்னார்கள். வேறு சிலர் அது ஊர்ப்பொதுக் கழிப்பிடமாக விளங்கிய குளத்து மேட்டுப் புளியத் தோப்பிலேயே பலகாலம் திரிந்து கொண்டிருந்ததாகவும் பின் ஊருக்குப் புதிதாக வந்திருந்த தாடிக்கார சந்நியாசி தோப்புக்குச் சென்ற போதெல்லாம் இதுவும் உடன் சென்றதாகவும் அதிலிருந்துதான் ஏதோ அருள் வாக்குப் பெற்றது போல் ஊருக்குள் வந்து குரைத்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.
அதன் பூர்வீகம் என்னவாயிருந்த போதிலும் அதன் குரைப்பு சிறப்பாயிருப்பதாகப் பலராலும் பாராட்டப் பெற்றது. அதன் தோற்றத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாத கணீர்க்குரலில், சீரொழுங்கான ஓசைநயத்தில், ஆற்றொழுக்குப் போன்ற வெளிப்பட்ட அதன் குரைப்பு பலருக்கும் பிடித்திருந்தது. அதன் குரைப்பைக் கேட்பதற்கென்றே பலர் காலையில் கண் விழித்து தெருத் திண்ணையிலே அமர்ந்து அதன் வருகைக்காகக் காத்திருந்தார்கள். அதன் குரைப்பைக் கேட்ட பிறகே மற்ற தங்கள் அன்றாட வாழ்வின் அலுவல்களைத் தொடர்ந்தார்கள் அல்லது இரவு படுக்கச் சென்றார்கள்.
வீடுவீடாக நின்று குலைத்து விட்டுப்போன அது ஒருநாள் மாலை வேளையோடு வந்து குரைத்து வீட்டிலுள்ளவர்களின் ஆடையைப் பற்றித் தெருவுக்கு இழுத்தது. சிலருக்கு அது பிடிக்காமல் தங்கள் ஆடைகளை விடுவித்துக் கொண்டு அதை விரட்டினார்கள். சிலர் என்னதான் செய்கிறது பார்ப்போம் என்பது போல அதன் இழுப்புக்கு இணங்கி தெருவுக்கு வந்தனர். அது ஒவ்வொரு வீடாகப் போய் இப்படிப் பலரைத் தெருவுக்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியது. பிறது எல்லோரையும் பார்த்து மறுபடியும் குரைத்து சிலரின் ஆடைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு தெருவில் நடந்தது. முன்னே செல்லும் அதை பலரும் ஒருவருக்கொருவர் கேள்விக் குறியோடு நோக்கியபடி பின் தொடர்ந்தார்கள்.
எல்லோரையும் அழைத்துக் கொண்டு சென்ற அது ஊர்ப் பொது மைதானத்தின் அரச மரத்தை அடைந்து அங்கிருந்த மண்nடையில் ஏறியது. சுற்று முற்றும் எல்லோரையும் ஒரு முறை பார்த்து மீண்டு குரைப்பைத் தொடங்கியது. அதன் குரைப்பைக் கேட்டவர்கள் அது மிக அழகான, சிறப்பான குரைப்பு என்றும் சாமானிய மக்களின் நலனுக்காகவே அது குரைக்கிறது எஙனறு இதுபோன்ற குரைப்பை தாங்கள் யாரும் இதற்குமுன் எப்போதும் கேட்டதில்லை என்றும் பாராட்டினார்கள். அதோடு குரைப்பின் நடு நடுவே அடிக்கடி கை தட்டியும் விசிலடித்தும் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இப்படிப் பலரும் அதன் குரைப்புக்குச் செவிசாய்க்க நாளாவட்டத்தில் அக் குரைப்பைக் கேட்பதற்கான கூட்டம் பெருகியது. எங்கும் அதன் குரைப்பு பற்றியே பேச்சாயிருக்க அக்குரைப்பின் பேரால் மன்றங்கள் தொடங்கப்பட்டன. எல்லோரும் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் அதன் குரைப்புக்கு ஆட்பட்டு அதன் குரைப்பைக் கேட்பதிலேயே பித்தாய்த் திரிந்தார்கள்.
ஒருநாள் தன் குரைப்பை முடித்து கீழே இறங்கிய அது மறுபடியும் எல்லோரது ஆடையையும் பிடித்து இழுத்து விட்டு வேறொரு திசை நோக்கி நடக்கத் தொடங்கியது. மக்கள் முதலில் புரியாமல் நின்று திகைத்தாலும் பிறகு ஏதோ முக்கிய சேதியாகவே அது அழைப்பதாகக் கருதி அதன் அழைப்புக்குக் கட்டுப்பட்டவர்கள் போல எல்லாரும் பின்னால் நடந்தார்கள்.
சாமானியர்களின் குடியிருப்பையொட்டியிருந்த அறுவடையாகிக் காய்ந்த பொட்டல் வெளிகளையும் பண்படுத்தப்படாது கரம்பாய்க் கிடந்த அது பூங்கா போன்று குளிர்ந்த மலர்ச் செடிகளுக்கும் பசிய புல்தரைப் பரப்புக்கும் மத்தியில் சுற்றிலும் முள் கம்பிவேலியால் பாதுகாக்கப்பட்டு பிரும்மாண்டபமான தோற்றத்தோடு தெரிந்த அடுக்குமாடி பங்களா நெருங்கியது. எல்லோரும் தன்னைப் பின்தொடர்ந்து வருகிறார்களா என அடிக்கடி திரும்பிப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டபடியே நடந்து வந்த அது பங்களாவின் முகப்பை நெருங்கி ஆவேசமாகக் குரைத்தது.
பிறந்ததிலிருந்து எப்போதுமே இந்தப் பக்கம் வந்தறியாதவர்கள், அப்படியே வந்திருந்தாலும் இந்த பங்களாவை நிமிர்ந்து பார்த்தோ, அல்லது அதை எதிர்த்தோ ஒரு சிறு முணுமுணுப்பைக் கூட வெளிப்படுத்தாதவர்கள், அது இப்படித் துணிந்து பங்களாவை நோக்கிக் குரைப்பதை அச்சத்துடன் பார்த்தார்கள். வயிற்றுத் தோல்கள் எம்பிஎம்பி ஒட்ட எலும்புகள் புடைக்க குரைத்துக் கொண்டிருந்தது. அது அடிக்கடி இவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லோரும் பின்னால் கட்டுக் கோப்பாய்த் திரண்டிருப்பதைப் பார்க்க அது முன்னிலும் தீவிரமாகக் குரைக்கத் தொடங்கியது.
நீண்ட நேரம் எந்த அரவமும் இல்லாது அமைதியாயிருந்த பங்களாவின் உட்புறமிருந்து திடீரென குலைபதறச் செய்யும் வகையில் பயங்கரக் குரைப்புச் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பங்களாவின் உட்புறக் கதவு திறக்கப்பட வாட்ட சாட்டமான தோற்றம் கொண்ட நான்கு பிராணிகள் முன்புற வரவேற்பு அதை வழியாக இவர்களை நோக்கிப் பாய்ந்தன.
நன்கு வளர்ந்த கன்றுக் குட்டியின் உயரத்துக்கு மினுமினுக்கும் சருமத்தோடு கொழுகொழுவென்று தோற்றத்தில், பிளந்த வாயோடும், இரைக்கும் மூச்சோடும் பாய்ந்த அவைகளைக் கண்டு மக்கள் அதிர்ந்து பின்வாங்கி ஒட யத்தனித்தார்கள். பிறகு நல்ல வேளையாக அவை சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதைக் காண ஆறுதலடைந்தாலும் நடுக்கத்தோடே நின்றாhகள். கூடவே தங்களைத் திரட்டிக் கொண்டு வந்த அது என்ன ஆயிற்றோ என்றும் பதற்றதோடு அதைத்தேட அது அவர்களின் கால்களுக்கிடையே புகுந்து ஒளிந்து பீதியுடன் நோக்கியது. வாலைப் பின்னங்கால்களுக்கிடையே இடுக்கிக் கொண்டு, உடம்பைக் கூனிக் குறுகியபடியே இவர்களைப் பார்த்து மொறுமியது. அதன் தோற்றத்தைக் காண இவர்களுக்குப் பரிதாபமாயிருந்தது.
வரவேற்பு அறையில் நுழைந்த பங்களாப் பிராணிகள் அங்குள்ள பஞ்சுமெத்தை இருக்கைகளில் ஏறி கம்பிரமாக அமர்ந்து அவ்வப்போது இவர்களைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தன. சும்மாயிருக்கக் கூடாது என்பதற்காக பேருக்கு இதுவும் பதிலுக்குக் குரைத்தாலும் அதன் குரைப்பில் முன்னே மாதிரித் தெம்போ ஆவேசமோ இல்லை. இரண்டொரு முறை லேசாகக் குரைத்து விட்டு அது சமானியர்களின் குடியிருப்பை நோக்கித் திரும்பியது.
பின்னால் வந்த சாமானியர்கள் அதைப் பரிதாபத்தோடு பார்த்தார்கள். இந்த நிலையிலேயே இருந்தால் எந்த நாளிலும் அதால் பங்களாப் பிராணிகளுக்கு ஈடு கொடுக்க முடியாது என்றும் அவற்றுக்குச் சமமாக இதை வளர்க்க வேண்டுவத மிகவும் அவசியம் என்றும் கருதினார்கள். எனவே குரைப்பு முடிந்தாலும் வழக்கம் பால் இனி தனியே போக விடாமல் அதைத் தங்கள் பொறுப்பில் வைத்துப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் முடிவு செய்தார்கள். என்றாலும் தங்களைப் போலவே வெறும் கூழ், கஞ்சி, பழைய சோறு முதலானவைகளை மட்டுமே உண்டு வந்தால் அதைப் பங்களாப் பிராணிக்கு நிகராக உருவாகக்க முடியாது என்பதால் பொது நிதியொன்று திரட்டி அதற்கு சுறிசோறு, பிஸ்கோத் முதலானவைகளை வாங்கித் தரவும் திட்டங்கள் விடுத்து அது தங்குவதற்கும் ஒரு சிறு குடிலை ஏற்பாடு செய்தார்கள்.
இவ்வாறு சாமானிய மக்கள் தந்த ஊட்டத்திலும் ஆதரவாளர்கள் தந்த நிதியிலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது அது. தோற்றமும் படிப்படியாக பங்களாப் பிராணிகளுக்கு நிகராக மெருகேறியது.
இந்த மாற்றத்திற்குப் பிறகு அது மீண்டும் சாமானியங்களைத் திரட்டிக் கொண்டு போய் பங்களாவை நெருங்கி தன் குரைப்பைத் தொடங்கியது. வரவேற்பு அறையில் போடப்பட்ட மெத்து மெத்தான இருக்கைகளில் இருந்தபடியே பங்களாப் பிராணிகளும் இதைப் பார்த்தன. இதன் தோற்றம் அவைகளுக்கு எப்படியிருந்ததோ முதலில் அவை நேச பாவத்தோடு இதைப் பார்த்து வாலை ஆட்டி மொறுவின. ஆனால் இது அதைச் சட்டை செய்யாமல் தன் குரைப்பைத் தொடங்க பதிலுக்கு அவைகளும் குரைக்கத் தொடங்கின. இப்படி இது குரைக்க, அவையும் குரைக்க மாற்றி மாற்றி இந்தக் குரைப்புப் போர் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பின் பங்களாவின் உட்புறமிருந்து ஒரு கனத்த குரல் அதட்டல் போட்டு அவைகளை அடக்கியபடியே வெளியே வர இதுவும் அடங்கித் திரும்பியது.
இப்படியாக அவ்வப்போது இந்தக் குரைப்புப் போர் நடைபெற இது பகுதியெங்கும் பிரபலமாகியது. பத்திரிகைகளும் இதுபற்றி எழுத சமானிய மக்கள் மேலும் மேலும் இந்தக் குரைப்புப் போரைக் காண ஆவல் கொண்டு திரண்டதுடன் இதற்கு ஆதரவாக பொருளுதவியும் செய்தார்கள். நாளுக்குநாள் திரளும் மக்கள் கூட்டம் பங்களாவையே முற்றுகைக்குட் படுத்தியது போல் இருந்தது. பங்களா வாசிகளுக்கு இது எப்படியிருந்ததோ குரைப்புப்போர் நடந்து கொண்டிருந்த ஒரு நாளில் பங்களாவின் பொறுப்பாளர் வெளியே வந்தார். பங்களாப் பிராணிகளைப் பார்த்து ஒரு அதட்டல் போட்டு அடக்கி விட்டு இதை நோக்கி “த்தோ... த்தோ...” என்று அன்பொழுகும் குரலில் ஓர் அழைப்பு விடுத்தார்.
பட்டென்று ஒரு கணம் தன் குரைப்பை நிறுத்திய இது, தன்னைச் சுற்றியிருந்த சமானிய மக்கள் அனைவரையும் ஒரு முறை பார்த்தது. பிறகு அது முன்னிலும் வேகமாக அவரைப் பார்த்து குரைக்கத் தொடங்கியது. பங்களாவாசி முயற்சிகை விடாமல் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியைச் சுற்றியிருந்த சாமானியர்கள் பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். பங்களாவாசியே நேரில் வந்து அழைத்தும் அதைச் சட்டை செய்யாமல் தன் பாட்டுக்கு குரைத்துக் கொண்டிருந்த அதன் கொள்கை உறுதியையும் மனத் திட்பத்தையும் மக்கள் மிகவும் பாராட்டினார்கள். குரைப்பு முடிந்து குடியிப்புகளுக்குத் திரும்பிய பிறகு சமரசமற்ற அதன் நேர்மையைப் புகழ்ந்து அதற்கு விழாக் கொண்டாடி பூரிப்பும் மகிழ்ச்சியும் பொங்க அதற்கு மாலை அணிவித்தார்கள்.
இந்தச் சம்பவத்திற்கு பிறகு சாமானியர்களுக்கு அதன் மேல் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. தங்களுக்காக குரல் கொடுக்கவும், தங்கள் வாழ்வை வளமாக்கவும் அது தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதாகக் கருதி அதை மேலும் கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தார்கள். என்றாலும் இனி அது போகுமிடமெல்லாம் தாங்களும் கூடவே போக வேண்டிய அவசிய மில்லை என்றும் கருதினார்கள். இதுவும் முன்னைப் போல எப்போதும் இவர்களை அழைத்துக் கொண்டில்லாமல் அதுபாட்டுக்கு அவ்வப்போது தனியே போய்க் குரைத்து விட்டு வந்தது.
அன்று வழக்கத்துக்கு மாறாக அது வெகுநேரம் குரைப்பதைப் பார்த்த பங்களாவாசி எழுந்து வெளியே வந்தார். ஏற்கெனவே பலமுறை அதை அழைத்துப் பார்த்து அலுத்துப் போன அவர் சிறிது நேரம் நின்று அதையே பார்த்துவிட்டு உள்ளே சென்றார். திரும்பி வரும்போது அவர் கையில் பெரிய இறைச்சித் துண்டு இருந்தது. நேரே அதைக் கொண்டு வந்து, விடாமல் குரைத்துக் கொண்டிருந்த அதன் முன் வைத்தார். இதைப் பார்த்த பங்களாப் பிராணிகள் கோபமடைந்தவை போல் சங்கிலிப் பிடிக்குள் பாய்ந்தன.
குரைப்பைச் சற்று நிறுத்தி தன் முன்னே வைக்கப்பட்ட இறைச்சித் துண்டையே சிறிது நேரம் பார்த்த இது அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தன் குரைப்பைத் தொடங்கியது. எப்படியாவது அதைச் சமாதானப் படுத்த வேண்டும் என்றும் பங்களாவாசி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலிப்பதாய்த் தெரியவில்லை. சிறிது யோசனை செய்து மீண்டும் உள்ளே சென்ற அவர் மேலும் இறைச்சித் துண்டுகளோடு வெளியே வந்து அவற்றைப் பங்களாப் பிராணிகளின் முன் போட்டார்இ அவை மிகுந்த ஆர்வத்தோடு ஆவேசத்தோடும் அவ்விறைச்சித் துண்டுகளைக் கடித்துக் குதறி சுவைத்து உண்பதைக் காண இதன் நாக்கில் நீர் ஊறியது. குரைப்பதைச் சற்று நிறுத்தி இறைச்சித் துண்டையே சிறிது நேரம் பார்த்தது. கூடவே சற்று முற்றும் திரும்பி சாமானியர்கள் யாரும் தென்படுகிறார்களா என்றும் ஒரு நோட்டம் விட்டது. பிறகு உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே மெல்ல காலால் அதைத் தன் பக்கம் இழுத்து. அதையே சற்று நேரம் பார்த்து மீண்டும் சுற்றிமுற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு அவ்விறைச்சித் துண்டை முன்னங்கால்களில் அழுத்தியபடியே வாயால் கடித்து இழுத்து ருசித்து தின்னத் தொடங்கியது.
ஒரு வெற்றிப் புன்னகையோடு உள்ளே சென்ற பங்களாவாசி மேலும் சில இறைச்சித் துண்டை சுத்தமாய்க் கடித்து விழுங்கிய பிறகு அது சுற்றுமுற்றும் பார்த்து மீண்டும் குரைக்கத் தொடங்கியது. அதைப் பார்த்து சிரித்த பங்களாவாசி அடுத்த துண்டைப் போட்டார்.
இதன் பிறகு அது அடிக்கடியோ அல்லது வழக்கத்திற்கு முன்னதாகவோ வந்து குரைக்கத்தொடங்கியது. தன்னோடு எப்போதாவது வரும் ஒரு சில சாமானியர்களும் கலைந்து போகும் வரைக்கம் காத்திருந்து இறைச்சித் துண்டுகளுக்காகக் குரல் கொடுத்தது. முதலில் இறைச்சி வரத் தாமதமானால் முன்னிலும் வேகமாகக் குரைத்தது. இதற்கு இப்படி இறைச்சித் துண்டுகள் போடுவதைப் பார்த்து, அது தங்களுக்குப் போட்டியாக வந்து விட்டது போல் கோபத்தோடும் ஆத்திரத்தோடும் குரைத்த பங்களாப் பிராணிகள் நாளடைவில் அதைத் தங்கள் சக பிராணிபோலக் கருதி ஏற்றுக் கொள்ளத் தொடங்கின. இருந்தாலும் அதற்கான கவனிப்பு மட்டும் வெளி முற்றத்திலேயே நடந்தது.
குரைக்கிற நாட்களில் போடுகிற இறைச்சித் துண்டுகளை மட்டும் வயிறாரத் தின்று சென்று கொண்டிருந்த அது அன்று தின்று முடித்த பிறகும் போகாமல் வரவேற்பு அறையையே பார்த்துக் குரைக்கத் தொடங்கியது. சிறிது நேரம் அதன் குரைப்புக் காரணம் புரியாது குழம்பிய பங்களாவாசி அதன் பார்வை நிலை குத்திய இடத்தைப் பார்த்து அதைப் பார்த்து மெல்லச் சிரித்தார். அறையில் பங்களாப் பிராணிகள் கம்பீரத்தோடு அமர்ந்திருந்த மெத் மெத் என்ற இருக்கைகளின் பக்கத்தில் காலியாகவும் சில கிடந்தன.
இது உறுதியான பிறகு அவர் தன் பணியாளர்களை அழைத்து எதுவோ சொன்னார். அவர்கள் உரிமையோடு வந்து இதைத் தட்டிக் கொடுத்து எழுப்பி பங்களாவின் பின்புறம் அழைத்துச் சென்றார்கள்.
இதுவும் எதிர்ப்பு எதுவும் காட்டாமல் நீண்ட நாள்கள் அவர்களோடு பழக்கப்பட்டது போல வாலை ஆட்டியும் குழைந்தும் நேச பாவத்தோடு உடன் சென்றது. பணியாளர்கள் வெது வெதுப்பான நீரில் நன்கு சோப்புப் போட்டுக் கழுவி அதைக் குளிக்க வைத்தனர். இரண்டு மூன்று முறை இப்படிக் கழுவி அதன் கடந்த கால அழுக்குகளைப் போக்கியதாகத் திருப்தியற்ற பின் பிறகு கடைசியில் அதை நோய்க்கிருமிகள் அண்டாத மருந்து நீரில் குளிப்பாட்டி தேங்காய்ப் பூ துவாலையால் துவட்டினர். பிறகு அதன் மீது வாசனைத் திரவியங்கள் அடங்கிய நீர்மம் பூசப்பட்டது. எல்லாம் முடிந்த பிறகு பணியாளர்கள் ஏற்கெனவே எண்ணெய் போட்டுத் துடைத்துப் பளபளப்பாக்கி சுவரில் மாட்டியிருந்த சங்கலிகளுள் ஒன்றை எடுத்து அதன் கழுத்தில் மாட்டினார்கள். இவ்வாறாக அது “ஞானஸ்நானம்” அளிக்கப்பட்டது போல் அனைத்தும் முடித்து அழைத்து வரப்பட்டு முன்புறம் வரவேற்பு அறையில் ஏற்கெனவே பங்களாப் பிராணிகள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்குப் பக்கத்தில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்த்தப்பட்டது.
ஏதோ தன் வாழ்க்கை இலட்சிய நிறைவேறிவிட்டது போன்ற பூரிப்புடனும் மகிழ்ச்சியுடனும் பட்டுப்போன்று வழவழக்கும் வெல்வேட் இருக்கையில் மெத்து மெத்தென்ற பஞ்சு மெத்தையில் கழுத்தில் மாட்டிய சங்கிலியோடு அமர்ந்து அது சக பிராணிகளைப் பெருமையோடு பார்த்தது. சக பிராணிகள் எதுவும் புரியாது முதலில் அதற்கு எதிர்ப்புக் காட்டினாலும் பங்களாவாசி வந்து அவற்றையும் தடவிக் கொடுத்து சமாதானம் செய்த பிறகு அவை ஏதோ எல்லாம் புரிந்தது போல் சகஜ பாவத்துக்கு வந்து அதனோடு நட்பு பாராட்டின. இதற்குப் பிறகு இதுவும் பங்களாப் பிராணிகளுள் ஒன்றாகவே பாவிக்கப்பட்டு அதற்கேற்ப எல்லா சவரட்சணைகளும் அதற்கும் நடந்தன. அதுவும் கழுத்தில் மாட்டிய சங்கிலியோடு எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக ஏற்று முறைப்படி வரவேற்பு அறை இருக்கையில் வந்து அமர்ந்து மற்றப் பிராணிகளைப் போலவே அதுவும் தன் கடமையை ஆற்றத் தொடங்கியது.
கொஞ்சநாளாய்த் தங்கள் குடியிருப்பு பக்கமே வராமல் எங்கோ அது காணாமல் போயிருப்பதைக் கண்டு சாமானிய மக்கள் அது எங்கே போயிக்கும் என்று முதலில் குழம்பினார்கள். ஒரு வேளை பங்களாவாசிகள் அதை ஏதும் செய்திருப்பார்களோ என்றும் இவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இந்த அச்சத்தில் அதைத் தேடவும் அது பற்றி செய்தியறியவுமான முயற்சியில் அவர்களுக்குக் கிடைத்த தகவல் திகைப்பூட்டுவதாக இருந்தது.
பங்களாவில் உள்ள காவல் பிராணிகளின் எண்ணிக்கை ஒன்று கூடியிருப்பதாகவும், அதன் தோற்றம் இதேபோன்று இருப்பதாகவும் இதுவும் அப்பிராணிகளோடு சேர்ந்து மெத்திருக்கைகளில் அமர்ந்து அவ்வழியாகப்போவோர் வருவோரையெல்லாம் குரைத்துக் கொண்டிருப்பதாகவும் சிலர் சொன்னார்கள். முதலில் நிச்சயம் அது இதாயிருக்காது என்று கருதிய அவர்கள், தொடர்ந்து பலபேரும் இவ்வாறே வந்து சொல்லவே நம்பமாட்டாமல் எதற்கும் நேராகத்தான் போய்ப் பார்த்து விட்டு வருவமே என்று எல்லோரும் ஒன்றாய் திரண்டு சென்றார்கள்.
முன்கம்பி வேலிக்கு இருப்பால் இருந்த முகப்பு வாயிலை இவர்கள் நெருங்கியதுமே வரவேற்பு அறையிலிருந்து குரைப்புச் சத்தம் பலமாகக் கேட்டது. அறையில் வரிசையாகப் போடப்பட்ட இருக்கைகளிலிருந்து எல்லாம் குரைத்துக் கொண்டிந்தன. அவற்றுக்குப் பக்கத்தில் இதுவும் கம்பீரமாய் அமர்ந்து அவற்றைப் போலவே குரைத்துக் கொண்டிருந்ததைக் காண இவர்களுக்க அதிர்ச்சி ஏற்பட்டது. அடையாளமே தெரியாமல் முற்றும் அவற்றைப் போலவே மாறியிருந்த அல்லது மாற்றப்பட்டிடிருந்த அதைத் கண முதலி அதுவா இது என்று இவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டாலும் அதுதான் இது என்று உறுதியாய் அறிய இவர்கள்ஆத்திரமடைந்தார்கள்.
தங்களை அடையாளம் தெரியாமல் குரைப்பதாகக் கருதிச் சிலர் தங்களை அடையாளம் காட்டவோ அல்லது பழைய நட்பை வெளிப்படுத்தவோ அதை மேற்கொண்ட முயற்சிகளோ அல்லது நோக்கி ‘த்சோ த்சோ...’ என்று அழைத்ததோ எதுவும் அதனிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அது ஏற்கெனவே முன்பின் பழக்கப்பட்டதாகவோ வத்தலும் தொத்தலுமாகத் தெருவேயும் வீடு வீடாகவும் குரைத்துக் கொண்டு போனதாகவோ எந்த நினைவையும் காடட விரும்பாததைப் போலப் பார்க்கப் போனால் அப்படியெல்லாம் எதுவுமே நிகழவில்லை என்பது போல எல்லாவற்றோடும் சேர்ந்து தீவிரமாகக் குரைத்துக் கொண்டிருந்தது அது.
இவர்களுக்க வயிறு உடம்பெல்லாம் நமநமவென்று எதுவோ ஏற ரத்தம் சூடாவதைப் போலிருந்தது. கையில் கிடைக்கும் எதைக் கொண்டாவது கொண்டு அதைத் தாக்கி அழிக்க வேண்டும் என்று ஆவேசம் பொங்கியது. ஆத்திரம் தீரும் அந்த முனைப்பில் இவர்கள் குனிந்து கற்களைத் தேடி எடுத்து அதை நோக்கி வீச அது முன்னிலும் மூர்க்கமாகக் குரைத்தபடியே இவர்களை நோக்கிப் பாய்ந்தது. பங்களாப் பிராணிகளும் அதற்குத் துணையாக அதனோடு சேர்ந்து பாய்ந்து கொண்டிருந்தன.

கரசேவை-

கரசேவை
- இராசேந்திரசோழன்
“தோழரே... தோழரே”
இரண்டாவது முறையும் குரலைக் கேட்க அதிர்ச்சியுற்று எழுந்தான். கட்டிலில் அமர்ந்தபடியே சுற்று முற்றும் பார்த்தான். தெரு வெறிச் சென்றிருந்தது. பக்கத்தில், தொலைவில், கட்டிலுக்கடியில், வீட்டு முகப்பில் எங்கும் எவரையும் காணவில்லை. மனதில் கிலிபடர பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு என்பதெல்லாம் கேள்விக் குறியாகி விடுமோ என்கிற குழப்பத்தோடு மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னா தோழர் பயந்துட்டீங்களா”.
இவனுக்கு என்ன சொல்தென்று தெரியவில்லை. பேசாமலிந்தான்.
“உங்களோட உங்க ஒடம்புல ஒரு உறுப்பா இருந்தும் எங்களையெல்லாம் ரொம்ப நாளா மறந்துட்டீங்களே” என்று கேட்டது கை.
இவனுக்குப் புரியவில்லை.
“மறந்துட்டனா. என்ன சொல்ற”
“நீங்க ஏன் தோழர் இப்ப முன்ன மாதிரி மாநாடுங்கள்லாம் நடத்தறதில்ல..”
“மாநாடா..”
“அதான் தோழர், கோரிக்கை மாநாடு, எழுச்சி மாநாடு, ஆதரவு மாநாடு, எதிர்ப்பு மாநாடுன்னு அடிக்கடி நடத்துவீங்களே”
“ஆமா. அதுக்கென்னா...”
“அந்த மாதிரி மாநாடெல்லாம் இப்ப நீங்க நடத்தறதில்லண்றத்தான் எங்க கொறையே...”
“கொறையா..”
“ஆமா தோழர். அடிக்கடி இப்பிடி மாநாடு நடந்துக்னு இருந்தாதான் எங்களுக்கும் வேல இருக்கும். மனுசுக்கும் ஒரு உற்சாகம் இருக்கும். அதஉட்டுட்டு நீங்க பாட்டுனு இப்படி மாசக் கணக்கா எந்த மாநாடும் நடத்தாம சும்மா இருந்தா எங்க கதி என்னா ஆவுறது சொல்லுங்க”
இவனுக்கு புதிராயிருந்தது. “உங்களுக்கென்னா கொறை இதுல”
“என்னா தோழர் இப்பிடி கேட்டுட்டீங்க. மாநாட்டுல எங்களோட பங்கு ரொம்ப முக்கியமில்லியா”
“ஒங்களோட பங்கா”
“சரியாப் போச்சி போங்க. கை அலுத்துக் கொண்டது. “எப்பவுமே கூட இருக்கிறதப் பத்தி தெரியாது அதன் அரும, இல்லாட்டி போனாத்தான் தெரியும் அதன் பெருமன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரிதான் இருக்குது நீங்க கேக்கறது”
“என்னா பெரும”
“எங்களோட பெரும கைகளோ பெரும. இதும் பெரும என்னான்னு இன்னும் பலபேருக்கு சரியா தெரியாமலே இருக்குது. நாங்க இல்லண்ணாதான் தெரியும். எங்க பெரும”
கை வருத்தத்தோடு சொல்வது போல் தோன்றியது. இவனுக்கும் ஏதோ குற்றவுணர்வு ஏற்பட “உங்க பெரும தெரியாமலா இருக்கிறோம்” என்றான்.
“என்னா தெரியும். சொல்லுங்க பாப்பம்” என்றது கை.
இவன் இப்போது தான் முதன்முறையாக கைகளின் பயன்பாடு பற்றி யோசிக்கத் தொடங்கினான். “உண்ண, உடுக்க, எடுக்க, பிடிக்க, குடிக்க, புகைக்க, கழுவ, துடைக்க, வணங்க, வரவேற்க, வழியனுப்ப, கைகுலுக்க, டாடா காட்ட, அடிக்க, அணைக்க, இடிக்க, வெட்ட, குத்த, தாக்க, தடுக்க, முழக்கமிட முஷ்டியை உயர்த்த இப்படி கைகளால் தான் எத்தனை பயன்... நினைக்க நினைக்க இவனுக்கே மலைப்பாயிருந்தது. அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னான்.
எல்லாவற்றையும் கேட்ட கை சற்று ஏளனமாய்ச் சிரித்தது. “இதெல்லாம் தினப்படி அன்றாடப் பயன்பாடுகள் தோழர். குறிப்பாக மாநாடுங்கள்ல எங்களோட பயன் என்னான்னு சொல்லுங்க”
“மாநாட்டுலயா” யோசித்தான் தட்டிகட்ட, விளம்பரம் எழுத, சுவரொட்டி ஒட்ட, துண்டறிக்கை விநியோகிக்க, உண்டி குலுக்க, துண்டு ஏந்த, மேடை போட, பந்தல் அலங்காரம் செய்ய, தோரணம் கட்ட, தலைவர்களை அழைக்க, ஒலிபெருக்கி அமைக்க, மைக் பிடிக்க.. இப்படி எவ்வளவோ பயன்பாடுகள் நினைவுக்கு வர ஏதோ மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தியது போன்ற பெருமிதத்துடன் ஒவ்வொன்றாகச் சொன்னான்.
இருந்தும் கை திருப்தியடையவில்லை.
“எல்லாம் சரிதான் தோழர், ஆனா முக்கியமான ஒண்ண உட்டுட்டீங்களே”
“எத...”
“நீங்க சொன்னதெல்லாம் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஆனா. மாநாடு நடக்கும்போது அதுல எங்களோட பங்கு என்னா அதச் சொல்லுங்க...”
“இவனுக்குப் புரியவில்லை”
“நல்ல யோசனைப் பண்ணிப் பாத்து சொல்லுங்க தோழர். மைக்வரிக்கும் வந்துட்டிங்க. அதைத்தாண்டி வாங்க” கை புதிர் போட்டது.
“மைக்கைத் தாண்டியா” எதுவும் பிடிபடாமல் குழப்பத்துடன் யோசனையில் ஆழ்ந்தான்.
கை “க்ளு” கொடுத்தது. “மைக்க புடிச்;ச என்ன தோழர் பண்ணுவாங்க”
“பேசுவாங்க...”
“அவங்கள யார் பேச வக்றது”
“வாய் பேசப் போவுது” என்றான் இவன். இதுல கைக்கு என்னா வேல”. சில பேர் கைய ஆட்டி, சொழட்டி, முழக்கி, பாவன பண்ணி பேசவாங்க அதச்சொல்றியா”.
“ஐயோ அது இல்ல தோழர்” கை அலுத்துக் கொண்டது “என்னா தோழர் இது கூட தெரியாம இருக்கிறீங்க”
“எத...”
“கை தட்டறத தோழர், கை தட்றது தெரியாது. மாநாடு நடக்கும் போது தலைவர்கள் பேசும் போது அப்பப்ப கை தட்டுவாங்களே. இந்த கை தட்டல் இல்லாம எந்த மாநாடாவது நடந்தது உண்டா”
“ஓ.. அதுவா” என்றான்.
“என்னா தோழர் அவ்வளோ அலட்சியமா சொல்லிட்டீங்க. கை தட்டலோட அருமை என்னா, அதன் முக்கியத்துவம் என்னான்னு புரியாம பேசறிங்க நீங்க” என்றது கை.
நேரம் என்ன இருக்கும் என்ற தெரியவில்லை. நல்ல உறக்கத்தில் எழுப்பி இப்படி ஒரு விசாரணையில் ஈடுபடுத்தியதில் உற்சாகமின்றி கம்மென்று குந்தியிருந்தான்.
பொதுவாக கைத்தட்டல்கள் பற்றி இவனுக்கு அவ்வளவாக நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. இதனால் கைதட்டல்களே இவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. கை தட்டல்கள் சிறப்பாகப் ஏதாவது பாராட்டப் படவேண்டிய இடங்களில் அரிதாக மட்டும அமைந்தால் பரவாயில்லை. அல்லாது எதற்கெடுத்தாலும் கை தட்டுவது அல்லது அற்ப விஷயங்களுக்கெல்லாம் கை தட்டுவது என்பதில் இவனுக்கு உடன்பாடு இல்லை. எடுத்துக்காட்டாக “தமிழர்கள் மானம் காக்கும் மறவர்களாக வீறு கொண்டு எழுவார்கள்” என்றாலும் கைதட்டல் “அவர்கள் சூடு சொரணையற்ற இளித்தவாய்ச் சோதாக்களாகத் திரிகிறார்கள்” என்றாலும் கை தட்டல்” தங்கத் தம்பி தாண்டவராயன் என்றாலும் கைதட்டல் “அருமை அண்ணன் அம்பலவாணன” என்றாலும் கைதட்டல் என இப்படி எடுத்ததற்கெல்லாம் கைத்தட்டல்கள் மலிந்திருந்த சூழல் கைத்தட்டல்கள் மேல் இவனுக்கு ஒரு மரியாதைக் குறைவை ஏற்படுத்தியிருக்க சுவாரஸ்யமின்றி” அப்படியா” என்றான்.
கை லோசகக் கோபடைந்தது போல் தோன்றியது பற்றி இவ்வளவு இளப்பமான கருத்து கொண்டிருக்கிறாய். சின்ன வயதில் கைத்தட்டல்கள் பற்றி படித்தில்லையா நீ” என்றது.
“சரியாய் நினைவில்லை...” என்றான்.
“இதற்குள்ளாகவா எல்லாவற்றையும் மறந்து விட்டாய்” என்ற கை
“கல்விக்கழகு
கசடற மொழிதல்
செல்வர்க்கழகு
செழுங்கிளை தாங்குதல்
உண்டிக்கழகு
விருந்தோடு உண்டல்
கைகளுக்கழகு
கரவொலி எழுப்பல்”
என்று ஏதோ ஒரு செய்யுளைச் சொல்லி “படித்ததில்லையா” என்று கேட்டது.
முதல் மூன்று வரிகளை மட்டும் படித்ததாக ஞாபகம், நாலாவது தொடர்பற்றி ஏதும் நிச்சயமில்லை. இருந்தாலும் எதற்கு சர்ச்சை என்று “ம்” என்றான்.
“இதையெல்லாம் படித்திருந்துமா கைத்தட்டல்கள் பற்றி அக்கறையில்லாமல் இருக்கிறாய்” என்று கேட்டது.
“பேசுவது வாய்தானே இதில் கைகளுக்கென்ன பங்கு இருக்கிறது என்று கைத்தட்டல் பற்றி பொறுப்பில்லாமல் இருக்கிறாய் நீ. ஆனால் அந்த வாய்களைப் பேசவைப்பதும் பேச விடாமல் முடக்கிப் போடுவதும் எல்லாம் இந்தக் கைகள் தான் என்பதை மறந்து விடாதே” என்றது கை. கூடவே கைத்தட்டல்களின் பெருமைகள் சாகசங்களின் அதன் வகைப்பிரிவுகள் பற்றியெல்லாம் பிராபலிக்கத் தொடங்கியது.
“தட்டுவது கைகளையோ கைகளாலோ எப்படியும் நிகழலாம். எனில் கைகளால் தட்டுவது சட்டமன்றம், கைகளைத் தட்டுவது கவியரங்கம், மாநாடு, பொதுக் கூட்டம், பட்டி மன்றம், சில சமயம் கடைத்தெருவும் “கடைத்தெருவில் எதற்கு” என்றான்.
“நண்பர்கள், தெரிந்தவர்கள் போனவர்களை அழைக்க, தெருவோடு செல்கிறவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்க, பல சமயம் சம்பந்தப்படாதவர்களையும்....” என்றது கை.
“கைத்தட்டல்களுக்கு பல வல்லமையுண்டு, மாநாடுகளில் அவை பேச்சாளர்களுக்குப் போதையூட்டி பேச்சின் போக்கையே திசைமாற்றும். முதலில் பேசுகிறவர் பெறும் கைத்தட்டல் அடுத்துப் பேச இருப்பவதைத் திணற அடிக்கும். திகைப் பூட்டும், கஷ்டப்பட்டுத் தயாரித்து வந்த குறிப்புகளையெல்லாம் காணா மலாக்கும். கிடப்பில் வீழ்த்தும் போட்டிக்கு நிற்கும் பள்ளி மாணவனைப் போல கைத்தட்டலுக்காக பாயிண்டுகளைத் தேடித் தவிக்கவைக்கும், திணற அடிக்கும் திண்டாடச் செய்யும் ஏங்கி அலைய வைக்கும். சிற்றுரையோ, பேருரையோ சுவை குன்றா வரிகளுக்க சொற்சிலம்ப சதிராட வசியம்வைத்துக் களம் இறக்கும். எதிர்பார்த்த கைத்தட்டல் கிட்டாத போது சோர்வூட்டும், கவலைப்படுத்தும், விரக்தியளிக்கும் சில சமயம் தற்கொலைக்குத் தூண்டுவது முண்டு. மாநாடுகளில் மட்டுமல்ல பொதுக்கூட்டம் கருத்தரங்கம், கவியரங்கங்களிலும் கைகளின் பங்கு இவ்வாறே.
இவன் களைப்போடு கேட்டுக் கொண்டிருந்தான். வேறு யாராவதாயிருந்தால் விடைகொடுத்து வழியனுப்பி வைக்கலாம் அல்லது விலகி அப்பால் செல்லலாம். உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்பது போல் உடம்பின் ஒரு உறுப்பாகவே இருந்து உயிரை எடுத்தால் மீள வழியின்றி பார்த்துக் கொண்டிருந்தான்.
கை தொடர்ந்து “தட்டும் கைகளிலும் பல வகையுண்டு. தட்டும் வாய்ப்பிற்காகவே காத்து தவம் கிடக்கும் கைகள். கிடைத்த வாய்ப்பை தழுவ விடாது காற்றுள்ள போதே தூற்றி மகிழும் கைகள், நமைச்சலெடுத்தவன் சொரியவது போல் தட்டுவதையே தொழிலாகக் கொண்ட கைகள், தட்டித் தட்டியே உரமேறி காப்புக் காய்த்த கைகள். “பழக்க தோஷத்தால் ஒலிப்பான்களை அழுத்தும் வாகன ஓட்டிகள் போல் நொடிக்கொருதரம் தட்டுவதே வாடிக்கையாய் வழக்கப்பட்டுப் போன கைகள், உடையவன் விருப்பமின்றியே அனிச்சை செயலாய் தானாக இயங்கி தவணை முறையில் விட்டு விட்டுத் தட்டித் தீர்க்கும் கைகள், தட்டும் சந்தர்ப்பங்களுக்காகவே எப்போதும் தயாராய்த் தலைதூக்கிக் காத்து விழித்திருக்கும் கைகள். இப்படி கைகளில் தான் எத்தனை வகை” என்றது கை. “கூடவே கைத் தட்டலின் வகைகளை விவரிக்கவா” என்றது.
பல மாநாடுகளில் பார்த்ததுதான். இது என்பதானால் ‘வேண்டாம்’ என்றான்.
“சரி, ஆனால் கைகளைப் பற்றி இளப்பமான மதிப்பீடு மட்டும் கொள்ளாதே. கைகளுக்கும் தன்மான சுயமரியாதை உணர்ச்சிக்ளெல்லாம் உண்டு” கை சொன்னது.
எப்படி என்று இவனுக்குக் கேட்கத் தோன்றவில்லை.
கை அதுபாட்டுக்குத் தொடர்ந்தது. “கைகளக்குக் காதுகளுமுண்டு. கிளர்ச்சியூட்டும் உரைகளுஙககாகவே செவிகளைத தீட்டி வைத்து காத்திருக்கும் கைகள், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களையே அழங்காத சவத்துப்போன உரையைக் கேட்டு அலுத்த கடுப்பாய் உடையவனையே கேட்கும் ‘வேலையற்ற இடத்திற்கெல்லாம் என்னை எதற்கடா அழைத்து வந்தாய முட்டாளே’ நீ மட்டும் வந்து தொலைவதுதானே என்று”
நடந்து முடிந்த மாநாட்டு நிகழ்ச்சிகள் பல மனக்கண் முன் ஓட இவன் மெல்ல சிரித்துக் கொண்டான்.
கை முடிவாய்ச் சொன்னது...”எனவே தோழரே மாநாடுகளுக்கு கைதட்டல்கள் முக்கியம். மாநாடுகளை கட்ட, நிகழ்ச்சிகளுக்கு உயிர் கூட்ட கேட்போர் களி கொள்ள அரங்கு அதிர விண்ணைப் பிளக்கும் தரவொலிகள் மிக மிக முக்யிம். தவிர கைகளின் பிறவிப் பேறும் அது”
மங்கிய நட்சத்திர வெளிச்சத்தில் அமைதியாயிருந்தது. கை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க மௌனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தான். கை இறுதியாய்ச் சொன்னது.
“அதுதான் தோழரே. இதனால் கைகளுக்கு அஞ்சி யாரும் அதை வீட்டில் வைத்து விட்டு வந்து விடக்கூடாது என்பதால் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் கட்சிகள் கைகளின் முக்கியத்துவம் கருதி அதற்கும் தனியாக சிறப்பு அழைப்பு அனுப்ப வேண்டும்”.
இவன். “சரி” என்றான்.
கை ஒரளவு திருப்தியடைந்தது போல் தோன்றியது. பிறகு சற்று யோசனையோடு அது கேட்டது.
“ஆமாம் அடுத்த மாநாடு எப்போது”
“கூடிய விரைவில் இருக்கலாம் இன்னும் தேதி நிச்சயமாகவில்லை” என்றான்.
“தேதி முடிவானதும் மறக்காமல் தெரிவி” என்று பழைய நிலைக்கு சுருண்டது கை.
சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் படுத்தான். கனவு போல் நடந்து முடிந்த இந்நிகழ்வின் பாதிப்பில் ஏதோதோ யோசனைகளோடு கிடந்தவன் எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. காலை வழக்கம் போல் விழிப்பு கண்டு எழுந்து பல் துலக்கி செய்தித் தாளை விரிக்க ஒரு சின்ன அதிர்ச்சி. 7 ஆம் பக்கம் உலகச் செய்திகள் இடம் பெறும் பகுதியில் ஒரு தகவல் ‘கை தட்டினால் ஆயுள் கூடும். ஆராய்ச்சியாளர்கள் முடிவு’ என்கிற தலைப்பில் “கைத்தட்டல் இரத்த ஓட்டத்தை சுறு சுறுப்பாக்குகிறது, இதயத்தை வலுப்படுத்துகிறது ஆகவே நீண்ட ஆயுளோடு வாழ தாராளமாக கைதட்டுங்கள்” என்று தெரிவித்திருந்தது.
பலகாலம் முன்பு சிரிப்பு பற்றி இப்படி ஒரு செய்தி வந்து, சிரிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அது பதட்டத்தை தணிக்கிறது. மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது ஆகவே தாராளமாக மனம்பிட்டு சிரியுங்கள் என்றெல்லாம் மருத்துவர்கள் கூறியிருந்ததை இதழ்கிள்ல பார்த்திருந்தான். கைத்தட்டலுக்கும் இப்படி ஒரு பலன் இருக்கிறது என்று அறிய இவனுக்கு விசித்திரமாயிருந்தது. நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பயக்கும், உடலுக்கும் மனத்திற்கும் ஊட்டம் அளிக்கும் கைத்தட்டல் பற்றி இவ்வளவு காலமும் குறைவான மதிப்பீடு கொண்டிருந்ததற்காக வருத்தமடைந்தான்.
அடுத்து வரக் கூடிய மாநாடுகளிலிருந்தாவது இனி கைத்தட்டலுக்கு உரிய முக்கியத்துவம் தரவேண்டும் என்று கருதினான்.
இனிவரும் மாநாட்டிற்கான திட்டமிடல் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் போது ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து சுவரொட்டி போடும்போது இப்படி போடச் சொல்லி கருத்து தெரிவிப்பது பொருத்தமாயிருக்கும் போல் தோன்றியது.
“அணி அணியாய்த் திரண்டு வருக! அலைகடலென ஆர்ப்பரித்து வருக! மாநாடு சிறக்க வேனெடுத்து வருக. மறக்காமல் உங்கள் கைகளுடனும்....”