ஞாயிறு, 21 மார்ச், 2010

புள்ளி ராஜா விளம்பரமும் ஆணாதிக்க எய்ட்சும்

- இராசோ
சமீப காலமாக எங்குப் பார்த்தாலும் மக்கள் கண்களில் பட்டு கேள்வியை எழுப்பி வரும் ஒரு விளம்பரம் “புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா?”
யார் இந்த புள்ளி ராஜா? தெரியாது. தெரியாமல் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் மக்களது கவனத்தை இதை நோக்கி அதாவது எயிட்ஸ் விழிப்புணர்வை நோக்கித் திருப்ப வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு விளம்பரம் தருவதாகச் சொல்லப்படுகிறது.
தவிர ‘புள்ளி’ யைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் அவர் ரொம்பப் பெரிய ‘புள்ளி’, அவர் மேலிடத்துப் ‘புள்ளி’, எனப் புள்ளி என்பது ஒரு தனித்துவத்தை உணர்த்துவதனால் ராஜாவுக்குப் புள்ளி அடைமொழியாகச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் சிலர் விளக்கமளிக்கிறார்கள்.
‘எயிட்ஸ்’ தீராத ஒரு கொடிய நோய், அதுபற்றி மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்நோய் பரவாமல் தடுக்க வேண்டும், அதற்கான விளம்பரம் பத்தோடு பதினொன்றாக ஆகிப் போய்விடாமல் மக்களின் கவனத்தை ஈர்ப்பதாகத் தனித்துவத்தோடு இருக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான்.
ஆனால் அந்த உத்திக்காகக் கையாளப்படும் சொல்லாடல்களும் அதன் பின்னேயுள்ள கருத்தாக்கமும் தான் நமக்கு கேள்வியாகிறது.
‘புள்ளி ராஜா’ விளம்பரத்தை யொட்டித் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் “இது புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வருமா” என்கிற கேள்விக்கான பதில். “புள்ளி ராஜா தண்ணி அடிச்சிட்டுப் போதையில ஆணுறை போடாம பொம்பள கிட்ட போனான்னா அவனுக்கு எயிட்ஸ் வரும்”.
குடும்பத்தோடுதொலைக்காட்சி பார்க்கும் வழக்கமுள்ள பெரும்பாலான இல்லங்களில், இந்த விளம்பரம் வரும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் குழப்பங்களும் சந்தேகங்களும் என்ன செய்வதன்று தெரியாமல் நெளியும் முதியோர்களும் ஆன சங்கடங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.
அது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி வேண்டுமா வேண்டாவா என்பதோடான தனிப்பிரச்சனை. அதை இங்கே நாம் விவாதிக்கப் போவதில்லை. விளம்பர வாசகங்களை மட்டும் பார்ப்போம்.
“போதையில ஆணுறை போடாமல் பொம்பளகிட்ட போனா எயிட்ஸ் வரும்”.
அதாவது எயிட்ஸ் என்பது பொம்பளகிட்ட போனா வரும் ஒரு நோய். பொம்பளதான் இந்த நோயின் ஊற்றுக்கண், பிறப்பிடம். பொம்பள தான் இந்த நோயை எல்லோருக்கும் பரப்புகிறார்கள் என்கிற கருத்துத் தெரிந்தோ தெரியாமலோ இதன்மூலம் பரப்பப்படுகிறது.
இரண்டாவது பொம்பள என்பவர் யார். அம்மாவா, அத்தையா, அக்கையா, தங்கைகளா? யார் இந்தப் பொம்பளை? இது விலைமாதர்களை மனத்திலிருந்து அதைப் பொதுச் சொல்லான ‘பொம்பளை’ என்பதன் பேரால் குறிப்பிடுகிறது. இதன் மூலம் இது பெண் குலத்தையே இழிவுப்படுத்திப் பொம்பளை பற்றிய ஒரு கேவலமான கருத்தை உருவாக்குகிறது.
இந்தப் பொம்பளைக்கு பதில் விலைமாது என்கிற சொல்லாடலையே அங்கு வைப்பதாகக் கொள்வோம். அப்படியானால் இந்த விலைமாதுக்கு எயிட்சைத் தந்தது யார். விலைமாதர்களெல்லாம் பிறக்கும் போதே எயிட்சோடு பிறக்கிறார்களா, அல்லது குறிப்பிட்ட பருவம் வந்ததும் எயிட்ஸ் அவர்களுக்கு குறிப்பிட்ட பருவம் வந்ததும் எயிட்ஸ் அவர்களுக்கு அருளப்படுகிறதா. எயிட்ஸ் வந்து விலைமாதர்களாகிறார்களா அல்லது விலை மாதராகி எயிட்சைச் சம்பாதித்துக் கொள்கிறார்களா?
உண்மையில் இவர்களுக்க எயிட்சைத் தருபவர்களே ஆண்கள்தான். இந்த ஆண்களுக்கு எப்படி எயிட்ஸ் வருகிறது. யாராவது நோயுள்ள விலைமாதிடம் போய் அல்லது ஓரினச் சேர்க்கையில் அல்லது வேறு ஏதாவது வழிகளில்.
எயிட்ஸ் என்பது மருத்துவத்துக்கு அல்லது இரத்த பரிசோதனைக்குக் குத்தும் ஊசிமூலம், ஏற்கெனவே எயிட்ஸ் நோயுள்ள ஒருவருக்குப் பயன்படுத்திய கருவியை அப்படியே ஆரோக்கியமான ஒருவருக்குச் செலுத்துவதன் மூலமும் பரவலாம்.
எயிட்ஸ் என்பது தண்ணீர் மூலம், காற்று மூலம், தொடுகை மூலம் பரவும் ஒரு தொற்று நோய் கிடையாதே தவிர, இரத்தத்தின் மூலம் பரவும் தொற்று நோய்.
இது பெரும்பாலும் பாலுறவின் வழி பரவுவதுதான் அதிகம் என்றாலும், மற்ற காரணங்களினாலும் பரவச் சாத்திய முண்டு என்பதுதான் மருத்துவச் சோதனைகள் காட்டும் உண்மை.
அப்படி இருக்க இதைவிட்டு எயிட்ஸ் என்பதே ஏதோ பாலுறவின் வாயிலாக மட்டுமே பரவும் நோய் என்பது போலச் சித்தரிப்பதும் விளம்பரம் செய்வதும் எயிட்ஸ் பற்றிய தவறான புரிதல்களையும் அதுபற்றிய மூடநம்பிக்கைகளையும் தான் வளர்க்குமே தவிர அதுசார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தாது.
இப்படி உடலுறவின் மூலமாக மட்டுமேதான் எயிட்ஸ் ஏற்படுகிறது என்கிற நம்பிக்கையின் அடிப்படையிலானதுதான் ‘மனைவியை மட்டுமே நேசி. எயிட்ஸ் வருமா நீ யோசி’, ‘மனைவி தரும் சுகங்கள் இருக்க மற்றவர் தரும் சுகங்கள் எதற்கு’ முதலான விளம்பர வாசகங்கள்.
இதிலும் மறைமுகமாகப் பெண்ணே எயிட்சின் ஊற்றுக் கண்ணாய் அதைப் பரப்புவளாய் இருக்கிறாள் என்கிற அரதப் பரப்புவளாய் இருக்கிறாள் என்கிற அதே கருத்துதான் அடிநாதமாய் இருக்கிறது. தவிரச் சமூகத்தில் ஆணே தலைமகன் அவன் நலனே முக்கியம். பெண் என்பவள் இரண்டாம் பட்சம். ஒரு போகப் பொருள் மட்டுமே என்பதான கருத்தும் நிலவுகிறது.
இந்த விளம்பரமெல்லாம் யாரை நோக்கி முன் வைக்கப்படுகிறது. யோசியுங்கள். ஆணை நோக்கி. ஆண் நலமாக இருக்க வேண்டும். அவனுக்கு எயிட்ஸ் வராமல் பாதுகாக்க வேண்டும். அவனை எயிட்ஸ் அபாயத்திலிருந்து மீட்க வேண்டும் என்கிற நோக்கில் பெண் அவள் எக்கேடும் கெட்டுப் போகலாம். அவளுக்க எயிட்ஸ் இருக்கலாம். இல்லாமல் போகலாம். வரலாம். வராமல்போகலாம். ஆனால் ஆண் மட்டும் ஆணுறை அணிந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற வகையில்தானே.
இதற்காகப் பெண்களையும் பாதுகாக்க வேண்டும் என்று இவ்விளம்பரங்கள் பெண்களை நோக்கியதாகக் ‘கணவனை மட்டும் நேசி, எயிட்ஸ் வருமா நீ யோசி’, ‘கணவன் தரும் சுகங்கள் இருக்கக் கண்டவர்கள் தரும சுகம் எதற்கு’ என்றெல்லாம் மாற்றாக விளம்பரம் செய்ய வேண்டும் என்று நாம் குறிப்பிடவில்லை.
இன்றுள்ள சமூகச் சூழல், இது பெண்களைப் பாதுகாக்கும், பெண்களிடையே விழிப்பூட்டும் விளம்பரமாகக் கொள்ளப்படுவதை விடவும், இது ஏதோ பெண்களைத் தவறானவர்களாகச் சித்தரிப்பதாகக் கொச்சையாய்ப் புரிந்து கொள்ளப்பட்டுப் பெண்களெல்லாம் நாங்கள் என்ன ஒழுக்கக் கேடானவர்களா, ஊர் மேல் போகிறவர்களா என்று ஆத்திரப் படுவதாகவே அந்த நோக்கில் இதற்குக் கண்டனம் தெரிவிப்பதாகவே முடியும்.
ஆகவே இவ்விளம்பரங்களை ஆண் என்றும், பெண் என்றும் பாகுபாடு செய்யாமல் பெரும்பாலும் தவறிழைப் பவர்கள் ஆண்களாகத் தானே இருக்கிறார்கள். எனவே ஆண்களை நோக்கியதாகத் தானே இவ்விளம்பரங்கள் இருக்கும் என நியாயமும் படுத்தாமல் இவ்விளம்பரங்கள் இருபாலாருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுவது பற்றி யோசிக்கலாம். அதோடு எயிட்ஸ் ஏதோ தகாத உடலுறவினால் மட்டுமே வந்துவிடும் என்கிற தவறான புரிதல்களிலிருந்து விழிப் பூட்டுவதாகவும் இதை அமைக்கலாம்.
அதையெல்லாம் விட்டுத் தற்போது செய்யப்படும் விளம்பரம், விலைமாதர்களையும், அவர்களிடம் போகும் ஆண்களை மட்டுமே கணக்கில் கொண்டதாக அதன்மூலம் ஆண் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு பெண் இனத்தையே இழிவுபடுத்துவதாகப் பெண்களை வெறும் போகப் பொருளாக மட்டுமே நோக்கும் கருத்தாக்கம் கொண்டதாக அதையே மேலும் வலுப்படுத்துவதாகவே உள்ளது.
“புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா” என்னும் விளம்பரம் ஏன் “புள்ளி ராணிக்கு எயிட்ஸ் வருமா” என்று கேட்பதில்லை என்பதை நாம் சிந்திக்கவேண்டும். புள்ளி ராணிக்கு எயிட்ஸ் வந்தால் பரவாயில்லை என்று பொருளா, அல்லது புள்ளிராணிக்கு எயிட்சே வராது அவள் எல்லாவற்றக்கும் அப்பாற்பட்டவள் என்று பொருளா?
இரண்டில் எதுவானாலும் இரண்டுமே தவறானவை. இரண்டுமே மூடநம்பிக்கைக்கு நிகரானவை. புள்ளி ராணி எக்கேடு கெட்டால் என்ன, புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வராமலிந்தால் சரி. அவனை அது பாதிக்காமலிருந்தால் அது சரி என்கிற நோக்கமுடையது.
இப்படிப் பெண்ணினத்தை இரண்டாம் பட்சமாக்கி இழிவுபடுத்தும் ஆணாதிக்கக் கட்டமைப்பின் கடைக் காலிலிருந்து வெளிப்படுத்தும் இவ்விளம்பரம் குறித்துப் பெண்ணிய அமைப்புகள் இதுவரை ஏன் சிந்திக்கவில்லை? அல்லது எப்படி இதைச் சகித்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் விசித்திரமாயுள்ளது.
எனவே, எயிட்ஸ் நோயை ஒழிக்க முயலும் அதே நேரத்தில் இந்தப் பெண்ணடிமைத்தன ஆணாதிக்கக் கருத்தாக்க எயிட்ஸை ஒழிப்பது பற்றியும் நாம் விழிப்போடிருக்க வேண்டியது அவசியம் என்று சொல்லத தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக