கதை
பேதைமை
முன்பின் உங்களுக்கு எந்த வகையிலும் அறிமுகமில்லாத, உங்களுக்கு எந்த வகையிலும் தீங்கிழைக்காத யாராவது ஒரு நபரை அப்படியே அடித்து நொறுக்கி விடவேண்டும், நரநரவென்று கடித்து மென்றுவிடவேண்டும் என்று உங்களுகு ஆத்திரம் வந்திருக்கிறதா? எனக்கு வந்திருக்கிறது.
நீங்கள் அன்றாடம் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து பணிக்குப் போய்த் திரும்புபவரா? அல்லது பல்வேறு பணிகளாக மாநகரப் பேருந்தில் அன்றாடம் பயணிப்பவரா? அப்படியானால் உங்களால் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
சென்னை மாநகர வரிவாக்கப் பகுதிகளில், சமீபத்தில் வேளச்சேரி பகுதியைப் போன்ற நெரசல் வேறெங்கும் இருக்கமுடியாது என்று சொல்லலாம். காலையில் பேருந்து பிடித்து பணிக்குப் போகிறவர்களும், பள்ளிக்குப் போகிற மாணவர்களும், அதேபோல் மாலையில் பணி முடிந்து, பள்ளி முடிந்து வீடு திரும்புகிறவர்களும் என கூட்டம் விரிய, நண்பகல் சிறிது நேரம் காற்றாப் பேருந்துகள் பயணிக்கும் என்பதைத் தவிர மற்றபடி கூட்டம், கூட்டம், நெரிசல், நெரிசல் என தொத்தல் பயணம்தான்.
மாலை மங்கி தெரு விளக்குகள், கடை, வணிக நிறுவனங்கள், ஒளி வீசுகிற நேரம். 5ஏ பேருந்தில் சைதாப்பேட்டையில் ஏறினேன். தி.நகரில் புறப்படுகிற போதே அமர்விடங்கள் நிரம்பி நிற்போர்களுடன் வருகிற பேருந்து ஆயினும் கூட்டமாகவே நெரித்து முண்டியடித்து ஏறி இடுக்குகளில் நுழைந்து ஆண்கள் இருக்கை ஓரமாக நின்று கொண்டேன்.
இதுமாதிரி சந்தர்ப்பங்களில் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களின் முகங்களை அசைவுகளை எடை போட்டு அவர்களில் யாரும் இறங்குகிற அறிகுறி தென்படுகிறதா எனப் பார்த்து அவர்கள் பக்கமாக போய் நின்று கொள்வதும், அவர்கள் இறங்க யத்தனிக்கும்போது பக்கத்திலிருப்பவர்கள் வழிக்குப் புகுந்தோ பார்ப்பதோ கிடைத்ததை கைப்பற்றுவது ஒரு சாகசம்.
சிலர் இதற்கு எளிமையாய் வழி ஒன்றை வைத்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் தோளில் அல்லது கையில் இருக்கும் பையையோஉட்கார்ந்திருப்பவர்களின் தந்து விடுவார்கள். அவர்கள் இறங்குமபோது அந்தப் பையைத் தாங்கள் அமர்ந்திருக்கிற இடத்தில் வைத்துவிட்டு இறங்குவார்கள். இதனால் அந்த இடம் பையின் சொந்தக் காரருக்கு உரியதாக ஆகிவிடும். அதாவது அந்த இடத்தில் யார வந்து அமர்வது என்பதை இறங்குபவர் தீர்மானிப்பதாக ஆகிவிடும். பக்கத்திலிருப்பவர்கள் எல்லாம் பரிதாபமாகப் பார்க்க, நாலு இருக்கை தள்ளி உள்ள நபர் தொகுதியில் வென்ற வேட்பாளர் போல மந்தமாகப் புன்னகையோடு வந்து அமர்ந்து கொள்வார்.
வேறு சில சந்தர்ப்பங்களில் இருவர் இருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் எதாவது ஒரு நிறுத்தத்தில் இறங்க, இடம் காலியாகிறதே என பக்கத்தில் நிற்கும் நீங்கள் அமர முயன்றால், தடுத்து இடத்தைப் பிடித்துக் கொண்டு நாலு இருக்கைத் தள்ளியிருக்கிற தனது நண்பரை, உறவை அழைத்து அதில் அமர வைப்பர். அதாவது இருவர் இருக்கையில் ஒருவராக இவர் அமர்ந்திருக்கிறார் என்பதனாலேயே, பக்கத்து இருக்கையையும் யாருக்குத் தருவது என்று தீர்மானிக்கும் உரிமையைப் பெற்று விடுகிறார். நீங்கள் பரிதாபமாக அசடு வழிய நிற்க வேண்டியதுதான். இதெல்லாம் என்ன நியாயம் என்று யாருக்கும் தோன்றுவதில்லை. தோன்றித்தான் என்ன ஆவப்போகிறது? சம்மந்தப்பட்டவரிடம் சண்டை வாங்கலாம். அடுத்து பத்துப் பதினைந்து நிமிடங்களில் நிறுத்தம் வந்து எதோ ஒரு இடத்தில் இறங்கப் போகிறவர்களுக்குள் எதற்கு சண்டை. அதுவும் தற்காலிகமாக அமரப் போகும் ஒரு இருக்கைக்காக என்று தாராள மனசோடு இருந்து விட வேண்டியதுதான்.
யார் முகத்திலாவது இறங்குகிற குறி தென்படுகிறதா என்று பார்த்துக கொண்டிருந்தேன். சின்னமலை நிறுத்தம் தாண்டி ஆளுநர் மாளிகைத் திருப்பத்தில் கையில் சுருட்டி மடக்கிய மாலை நாளேட்டுடன் நடுத்தர வயதைத் தாண்டிய ஒருவர் சற்று பரபரப்போடு வெளியே இப்படியும் அப்படியமாக பார்த்துக் கொண்டு வந்தார். சரி, நகருக்கு புதுசு போலிருக்கிறது, இறங்க வேண்டிய இடம் தவறிவிடுமோ என்கிற பதட்டத்தில் பார்த்துக் கொண்டு வருகிறார் போலிருக்கிறது என்று அனுமானித்து, சாதுர்யமாக சிலரை விலக்கி அவர் இருக்கைக்குப் பக்கமாக போய் நின்று கொண்டேன். பேருந்து கி.ஆ.பெ. சாலை வளைவில் திரும்பி, மேம்பாலம் பக்கம் இணைப் பக்கமும் திரும்பி இறக்கத்தில் ஓடியது. அவர் இன்னும் சற்று பரபரப்போடு எதிர் இருக்கைக் கம்பியைப் பிடித்தார். சரி கிண்டி இறங்கப் போகிறார் போலிருக்கிறது என்கிற தெம்போடு, அந்த இடத்தைப் பிடிக்க நான் தயாராகிக் கொண்டிருந்தேன்.
கிண்டி நிறுத்தம் வந்தது. பயணிகள் இறங்கினர், ஏறினர். இவர் கம்பியைப் பிடித்தபடி இறங்குகிற பயணிகளைப் பார்த்து வலப்புறம் கிண்டி ரயில் நிலையத்தையும் பார்த்து பழையபடியே சாவகாசமாக அமர்ந்து கொண்டார்.
சரி, இந்த இடம் இல்லை போலிருக்கிறது, அடுத்த இடமாக இருக்கலாம் என்று சமாதானம் செய்து கொண்டேன். எங்கே இறங்கப் போகிறீர்கள் என்று அவரைக் கேட்கலாமா என்று தோன்றியது. என்றாலும் சகுனம் பார்க்கிற ஆளாயிருந்து ஏதாவது காரியமாகப் போகிறதாயிருந்தால், நாம் கேட்டதால்தான் கெட்டது என்கிற அவப்பெயர் எதற்கு என்று ‘என்ன போனால் அடுத்த நிறுத்தம் இறங்கத்தானே போகிறார்’ என்று சமாதானம் செய்து கொண்டு, அடுத்த நிறுத்தத்திற்காகக் காத்திருந்தேன்.
அவர் சாவகாசமாக பின்புறம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நாளேட்டைப் புரட்டத் தொடங்கினார். செக் போஸ்ட் நெருங்க அங்கும் இதே மாதிரி கம்பியைப் பிடித்து உடம்பை முன்னே தள்ளி இருபுறமும் பார்த்து விட்டு வண்டி புறப்பட பழையபடியே சாய்ந்து கொண்டார்.
முதலில் இடம் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாரோ என்று அவர் மேல் பரிதாபப்பட்ட எனக்கு போகப் போக அவரது நடவடிக்கைகள் எரிச்சலைத் தர ஆரம்பித்தது. அவர் அடிக்கடி வெளியே பார்ப்பதும், சட்டைப் பையில் கைவிடுவதும் அதிலிருந்து ஒரு முகவரி அட்டை எடுத்துப் பார்ப்பதும், பிறகு இடத்தை உறுதி செய்து கொண்டவர் போல் தாளை பழையபடியே பையில் போட்டுக் கொண்டு முன்புறம் சாய்வதும், மறுபடி பின்புறம் சாய்வது, வேட்ட சுருக்கங்களை நீவி விட்டுக் கொள்வதும், கையில் இருந்த கைக்குட்டையால் முகத்தை அழுந்தத் துடைப்பதும், அவரது ஒவ்வொரு அசைவும் ஏதோ எல்லாம் முடிந்து இறங்கத் தன்னைத் தயார் செய்வது போல் தோன்ற, ஒவ்வொரு நிறுத்தத்திலும் அவர் இதோ இறங்குவார், அதோ இறங்குவார் என்று எதிர்பார்க்க ஆனால் அவர் எங்குமே இறங்காமல் தன் சேட்டைகளை மட்டும் தொடந்து வர, எனக்கு கொதிப்பு எகிறியது. குருதிக் கொதிப்பு.
ஏற்கெனவே 100-150 இருந்து உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி முதலான பல ஆலோசனைகளுடன் எதிலும் அதிகம் உணர்ச்சி வசப்படாதீர்கள் என்று சொல்லியிருந்தும் அதையும் மீறி ‘மவனே, டேய், நீ எங்கதாண்டா எறங்கப் போற’ என்கிற கேள்வி வார்த்தைகளில் வெளிப்படாமல், உள்ளூறவே குமுறியது. ‘நீ எங்கேயோ எறங்க, ஆனா பேசாம உக்காந்துக்குனு வா. எதாவது சேட்ட பண்ண கடிச்சிக் கொதறிடுவேன் என்ன’ என்று பாய மனம் துடித்தது.
இடை இடையே புத்தி கொஞ்சம் வேலை செய்து அந்த ஆள் பாட்டுக்கு அந்த ஆள் பயணம் போகிறார். அவர் எப்படியோ, எதையோ செய்து கொண்டு போகிறார், அதை விட்டு நாமாக அவனுடைய செய்கைகள் பற்றி ஒன்றை கற்பனை செய்து கொண்டு அவன் மேல் ஆத்திரப்படுவது என்ன நியாயம் என்று புத்தி சொன்னாலும், மனசு ஆறுவதாயில்லை. பொருமிக் கொண்டே யிருந்தது. இவனுக்கெல்லாம் ஒரு பஸ் ஒரு பயணம், அவன் மூஞ்சியும் மொகரையும், பஸ்சுல எப்படி உக்காந்துக்கனு வரணும்னு கூடம் தெரியாம. இருக்கிறவங்களையெல்லாம் கடுப்பேத்திக்னு’ என்று பொரிந்து கொண்டே...
கடைசீ வரை அந்த ஆள் இறங்கவே இல்லை. எதற்குத்தான் இம்மாதிரி சேட்டைகள் செய்து கொண்டு வந்தான் என்பதும் தெரியவில்லை. என் நிறுத்தம் வர சபித்துக் கொண்டே வந்தேன்.
சங்கதி இத்தோடு முடிந்து போயிருந்தால் நான் இந்தக் கதையை எழுத வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. நாலு நாள் கழித்து ஒரு சம்பவம்.
இந்த முறையும் தடம் எண் 5ஏ பேருந்துதான். ஆனால் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திய வேகத்திலேயே முண்டி மோதி இடம் பிடித்து தி.நகரிலேயே ஏறி அமர்ந்து விட்டதால் இடப் பிரச்சினை இல்லை என்கிற நிம்மதி. அக்காடா என்று என் பையை மடியில் வைத்து, நான் தொடர்ச்சியாய் வாங்குகிற வாரமிருமுறை இதழைப் பிடித்துப் படித்துக் கொண்டிருந்தேன். வண்டி சி.ஐ.டி. நகர், சைதை, சின்னமலை என்று கடந்து ஓடிக் கொண்டிருந்தது. பஸ் ஒவ்வொரு நிறுத்ததில் நிற்கும் போதும் தலையை நிமிர்த்தி எங்கு நிற்கிறது, எந்த நிறுத்தத்தைக் கடக்கிறது என்று பார்த்துக் கொண்டே போவேன். லேசாய் அசதி ஏற்பட, படித்த வரைக்கும் போதும், மீதி இறங்கிப் போய் படித்துக் கொள்ளலாம் என்று இதழை மடித்து பையில் வைத்து, கண்ணாடியைக் கழற்றி சட்டைப் பையில் வைத்து, பின்னால் தலை சாய்க்க வாகாக என்னைச் சாய்த்து சரி செய்து கொண்டேன். அந்த நேரம் ஒரு நிறுத்தம் வர என் பக்கத்திலிருந்தவர் எழ, வேறொருவர் வந்து அங்கு அமர்ந்தார்.
ஆனால் என் பக்கத்திலிருந்து எழுந்தவர் இறங்கவில்லை. பக்கத்திலேயே நின்றார். அப்போதுதான் அவரை முழுசாகப் பார்த்தேன். நடுத்தர வயது. ஆனாலும் கட்டு மஸ்தான கரிய தோற்றம். நறுக்கு மீசை. பொதுவில் அன்றாடம் சரக்கடிக்கிறவர்களுக்கு உள்ளது போன்ற லேசாய் சிவந்த மயக்கம் தோய்ந்த கண்கள். நல்ல நிதானத்தில்தான் இருந்தார். இப்படிப்பட்ட தோற்றத்துள்ளும் அடுத்தவருக்கு இடம் தரவேண்டும் என்கிற நல்ல இதயமா... அடடா முள்ளில் ரோஜா, கல்லுக்குள் ஈரம், சேற்றில் செந்தாமரை என்று அவரை மனதுக்குள் வாழ்த்திக் கொண்டிருந்தேன்.
அவர் என்னைப் பார்த்து ‘நீங்க எறங்கலையா’ என்றார். நான் இல்லை என்றேன். ‘நீங்க எறங்கப் போறிங்கன்னு நெனச்சிதான் நான் எழுந்து அவருக்கு எடம் கொடுத்தேன்’ என்றார். ‘அடடா நீங்க ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே, சொல்லியிருப்பேனே’ என்றேன். எங்களுக்குள் இந்த உரையாடலைக் கேட்ட பக்கத்தில் இருந்தவர் கரை வேட்டியைப் பார்த்து ‘அப்ப நீங்க உக்காரிங்களா’ என்றார். அதற்கு கரை வேட்டி பெருந்தன்மையுடன் ‘பரவால்ல, உக்காருங்க’ என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து முறைத்தார். இதேதடா வம்பு என்று தோன்றிய எனக்கு தலை சாய்க்கிற எண்ணம் தொலைந்து போய் மனம் சங்கடப்பட, பழையபடியே பையைத் திறந்து இதழை எடுத்து, கண்ணாடியை எடுத்து மாட்டி படிக்கத் தொடங்கினேன். படிப்பில் மனம் லயிக்கவில்லை. இடச்சிக்கல் பற்றிய இதனையே மனதை இடர்ப்படுத்திக் கொண்டு வந்தது. அது பற்றிய யோசனையுடனே சிறிது நேரம் ஆளாயிருந்தேன். பிறகு இதழை மடித்து பையில் போட்டு, கண்ணாடியைக் கழற்றி பையில் வைத்து, அவ்வப்போது நழுவும் பையை சரி செய்து இழுத்து இழுத்து மடியில் அமர்த்தியபடியே, பயணித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு கட்டத்தில், பையை அடிக்கடி நழுவாமல் மடியில் சரியாய் பொறுத்த, சற்று நிமிர்ந்து என்னைச் சரி செய்து கொண்டிருக்க, அந்த நேரம் ஒரு நிறுத்தம் வந்தது. ஒரு சிலர் இறங்க பலர் ஏறினார்கள். பக்கத்தில் இருந்த கரைவேட்டி, கண்கள் சிவக்க என்னைப் பார்த்து ‘என்னா எறங்கலையா’ என்றார். நான் ‘இல்ல’ என்றேன். சிறிது நேர பயணத்தில் அடுத்த நிறுத்தமும் நெருங்க நான் பழைய படியே பையைச் சரிசெய்து கொண்டு அமர்ந்து பஸ் புறப்பட கரை வேட்டி ஏனோ ஆத்திரத்தின் உச்சிக்குப் போய் என்னைப் பார்த்துக் கத்தினார் ‘மவனே இனிமே பையில கை வச்ச. உன்னைக் கொல பண்ணி போட்டுடுவேன். நீ எங்க வேணா எறங்கு. ஆனா பேசாம வா. நீ எறங்குவன்னு நான் இருந்த எடத்தையும் உட்டுட்டு நின்னுக்னு வரேன். நீ என்னா வேடிக்கை காட்டிக்னு வரியா...’
***