வியாழன், 20 மே, 2010

ஆனால், நாட்டில் உள்ள வேறு எந்த மதத்தினரும் இதை எதிர்க்காத நிலையில் இசுலாமிய மதத் தலைவர்கள் மட்டும் இதை எதிர்த்துள்ளனர். பிற எல்லா மதத்தவரையும் போல இன்றுள்ள நவீன வாழ்க்கை வசதிகளை, அறிவியல் முன்னேற்றங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டு, 1200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட குரானை, இன்றைக்கும் அப்படியே வரி பிசகாமல் பின்பற்றிக் கொண்டு வாழ முடியுமா, வாழ முயல்வது நியாயமா என்பதை இசுலாமியர்கள் சிந்திக்க வேண்டும். ஆதிக்க மதமும் அடிமைப்பட்ட மதமும் மோதும் போது அடிமைப்பட்ட மதத்தின் பக்கம் நிற்பது நியாயமானதுதான். ஆனால் மத உரிமையும், மனித உரிமையும் மோதும்போது மனித உரிமையின் பக்கம் நிற்பதே நியாயமானது. இந்த நியாயத்தை இசுலாமியர்கள் உணரவேண்டும். கட்டாயத் திருமணப் பதிவு ஆணையை எதிர்ப்பின்றி ஏற்கவேண்டும்.

தாகம் sirukathai

சிறுகதை
தாகம்
- சாங்கியன்
வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும் டீ, காபி சாப்புட்றவங்கள்லாம் சாப்புடலம்”
நல்ல நண்பகல் வெய்யில். இந்த நேரம் பயணிகள் டீ, காபி சாப்பிடுகிறார்களோ இல்லையோ உணவு விடுதிப் பையன் பழக்கத்துக்கு ஆட்பட்டவன் போல பேருந்தின் பக்க வாட்டுகளைத் தட்டி சன்னலோரமாக சொல்லிக் கொண்டே போனான்.
பயணிகள் அவரவர் பொருட்களையும் பத்திரப்படுத்தி வைத்தோ, பக்கத்திலிருப்பவரிடம் சொல்லியோ பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். இவன் மடியில் வைத்தருந்த ரெக்சின் பையை எடுத்து சீட்டில் வைத்து முன்பின் பக்கவாட்டு இருக்கைகளைப் பார்த்தான். எல்லாம் காலியாக இருக்க கொள்ளச் சொல்ல வாய்ப்பின்றி பையைத் தோளில் மாட்டிக் கொண்டே திரும்பியவன் இருக்கையை யாராவது பறிமுதல் செய்டு விடுவார்களோ எனகால்சட்டைப் பையிலிருந்த கைக்குட்டையை எடுத்துஅடையாளமாக வைத்துவிட்டு கீழே இறங்கினான்.
கீழே புழுதி பறக்கும் மண்பரப்பில் ஏற்கெனவே வந்து நின்ற பேருந்துகள் எதிரும் புதிருமாக நிறுத்தப் பட்டிருந்தன. தள்ளி கீற்று வேய்ந்த தலைகீழ் ‘ப’வடிவில் அமைக்கப்பட்ட தனியார் உணவு விடுதி. ஒரு பக்கம் தேநீர், ஒரு பக்கம் குளம்பி, ஒரு பக்கம் மரநிழலில் இளநீர் என்ற கூட்டம் தனித்தனியாக முண்டியடிக்க வியாபாரம் பரபரத்துக்கொண்டிருக்கிறது.
சுற்றிலும் வேடிக்கை பார்த்தவாறு பேருந்து ஓரமிருந்த நிழிலில் நின்றபடியே என்ன சாப்பிடலாம் என்பவனைப் போல சிறிது நேரம் யோசனை செய்தான். வழக்கமாக இவன் தேநீர் தான் குடிப்பான் என்றாலும் இந்த முறை குளிர்பானங்கள் பக்கமாக இவன் கவனம் திரும்பியது.
இந்த குளிர்பான விளம்பரங்களை, பாட்டிலைத் திறந்ததும் நுரையோடு பொங்கி வழிகிற மாதிரி, நீச்சல் உடையில் கடற்கரையில் பெண்ணும் ஆணும் சுவைத்துப் பருகி கும்மாளம் அடிக்கிற மாதிரி, சோர்ந்து களைத்தவர்கள் இந்த பானத்தைக் குடித்து புத்தணர்ச்சி பெறுகிற மாதிரி தொலைக்காட்சியில், செய்தித் தாள்களில், இதழ்களில் இவன் பலமுறை பார்த்திருக்கிறான்.
அப்போதெல்லாம் ஒருமுறையாவது இதைக் குடித்துப் பார்த்து விட வேண்டும் என்று நினைத்ததுண்டு என்றாலும் வேலைவெட்டி எதுவுமில்லாமல் அவ்வப்போது எதற்காவது மனுப்போட வேண்டுமென்றாலே பெற்றோரிடம் காசு வாங்கி செலவு செய்து கொண்டிருக்கும் நிலையில் எங்கே 8 ரூபாய் 10 ரூபாய் கொடுத்து இதை வாங்கிக் குடிப்பது என்று அதுபற்றி பொருட்படுதயீதக் கொள்ளாமல் கடைகளில பாட்டில்களைப் பார்ப்பதோடு பேசாமல் இருந்து விடுவான்.
ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. சொந்த கிராமத்திலிருந்து ஒரு 100மைல் தள்ளியிருந்த நகரத்தில் சொற்ப சம்பளத்தில் கொஞ்சம் சுமாரான வேலை. வீட்டிற்கு கொடுக்குமளவுக்கு இல்லை என்றாலும் வீட்டை எதிர்பார்க்காமல் வாழலாம் என்கிற நிலை. முதல் மாதம் சம்பளத்தில் அம்மா அப்பாவுக்கு புடவை,வேட்டி, தங்கச்சிக்கு சுடிதார் தினபண்டங்கள் வாங்கி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். இந்த ஒரு முறை இதன் ருசி எப்படியிருக்கிறது என்று குடித்து பார்க்க மட்டும் இதற்காகச் செலவு செய்வதில் தவறில்லை என்று நினைத்துக் கொண்டான்.
பாக்கெட்டிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டுகிட்டே நெருங்கினான். கருப்புத் திரவம் நிரப்பியிருந்த ஒரு பாட்டிலைக் காட்டி நோட்டை வாங்கிப்போட்டு சில்லென்று ஐஸ் பெட்டியிலிருந்து பாட்டிலை எடுத்து திறந்து அதில் உறிஞ்சியைச் செறுகி நீட்டிய கடைக்காரன், வடவே தந்த மீதி சில்லரையைப் பார்த்தவனுக்குஆச்சரியமாக இருந்தது. நியாயமான மீதிக்கு மேலே சில்லரை கூடுதலாக இருப்பதைப் பார்த்து கடைக்காரன் எதுவும் ஞாபக மறதியாகத் தருகிறானோ என்று யோசித்தான். கடைக்காரனைக் கேட்பதா அல்லது கிடைத்த வரைக்கும் லாபம் என்று போட்டுக் கொளவதா என்கிற ஒரு கணம் தயங்கினான். மனச்சாட்சி இடம் கொடுப்பதாயில்லை. “என்ன கூடுதலா இருக்குது” என்றான்.
அதுவா என்று சிரித்த கடைக்காரன் சலுகை விலை. “ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ்” என்று சொன்னான். இவன் திகைத்து துணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருள்களில் தான் இப்படி இருப்பைக் காலி செய்ய தள்ளுபடிவிலையில் தருவார்கள். குளிர்பானத்தில் கூடவா இந்த விலையில் என்றால் அவ்வப்போது குடிக்கலாமே என்று மகிழ்ச்சியுடன் சில்லறையை சட்டைப் பையில்போட்டுக் கொண்டு திரும்பினான்.
சில்லென்று கையில் உறையும் பாட்டிலுடன் கூட்டத்தை விட்டு விலகி ஓரம் ஒதுங்கியவனுக்கு ஏதோ மகத்தான வாழ்க்கை லட்சியமே நிறைவேறியது போல மனதில் ஒருபெருமிதம் தோன்றியது. மெல்ல உறிஞ்சியில் உதட்டை வைத்து வாய் கொள்ளுமளவுக்கு இழுத்தான். வாய் முழுவதும் நிரம்பிய பானத்தில் சுவையும் கரியமிலா வாயுவின் இதமான நெடியும் அசாதாரண உற்சாகத்தையும், நிறைவையும் அளிக்க, அதன் சுவையை அனுபத்தைபடியே கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி அதை உள்ளே இறங்கினான். இந்த இறக்கத்தில் இவனுக்குள் ஒரு அசாதாரண குதூகலம் தோன்றியது. விளம்பரங்களில் வரும் ஆடவர்கள் போலவே இவனும் அந்தக் குளிர்பானத்தைக் குடிக்கிறான். இவன் கையிலும் இக்குளிர்பானம் இருக்கிறது. இவனும் அந்தக் குளிர்பானக் கூட்டத்தில் ஒருவனாக மாறிவிட்டான். இவனுக்கு பெருமையும் சந்தோஷமும் பிடிபடவில்லை. இந்த பூரிப்பில் அடுத்த மிணறை உறிஞ்ச இவனுக்கு மனம் இடம் தரவில்லை.
கையில் குளிர்பானப் பாட்டிலோடு நிற்கும் இவனை, இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்துவைக்க இவனுக்குத் தெரிந்து அங்கு யாருமேயில்லை என்பது திடீரென்று இவனுக்கு வருத்தத்தைத் தந்தது. இவனும் இந்த குளிர்பாத்தைக் குடிக்கிறான் என்பது யாருக்குமே தெரியாமல் எந்தப் பதிவுமே இல்லாமல் போய்விடும் போலிருந்தது. இவன் இந்த குளிர்பானம் குடித்தான் என்பதற்கு எந்த சாட்சியமே இல்லாமல் போய்விடும் என்பதை நினைக்க இந்த உற்சாகமே கரைந்தது மாதிரியிருந்து. யாராவது ஊர்க்காரர்கள், தெரிந்தவர்கள், போனவர்கள், நண்பர்கள் இந்த நேரம் வந்தால் தேவலாம் என்று நினைத்தான்.
பார்க்கிறவர்கள் ஊர்போய்ச் சொன்னால் இவன் குளிர்ப்பான குடித்ததற்கு ஒரு பேறு இருக்கும். இவனும் குளிர்பானம் குடித்தான் என்று ஒரு பதிவும் இருக்கும், ஊரிலும் இவன் மதிப்பு உயரும். எல்லோரும் இவனை பெருமையோடு பார்ப்பார்கள்.
ஆனால் அப்படி எந்த முக்கியத்துவம் இல்லாமல் எல்லாம் வீணாகப் போய்விடும் போல் அல்லவா இருக்கிறது.
கையில் பிடித்த பாட்டிலுடன் ஏக்கத்தோடு சுற்று முற்றும் பார்த்தான் பிறகு பாட்டிலைப் பார்த்து ஈடுபாடு இல்லாமல் மீண்டும் ஒரு மிணறு குடித்தான். அதற்கு மேல் இவனுக்கு குடிக்கப்பிடிக்கவில்லை. இருக்கிற கொஞ்சத்தையும் குடித்து பாட்டிலை காலியாக்கிவிட்டால் அப்புறம் இவன் இந்த குளிர்பானம் குடித்ததற்கு யார்தான் சாட்சி இவனாகப் போய் தான் குளிர்பானம் குடித்ததை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? சென்னால்தான் நம்புவார்களா..? வேண்டியதை வாங்கிக் கொண்டு திரும்பும் விற்பனை மையங்களில், நெருக்கமாய் அடைத்து நிற்கும் பேருந்துகளில், புதிதாக வந்து நிற்கும் பேருந்திலிருந்து இறங்கும் மனிதர்களில் இவன் தெரிந்த முகங்களுக்காகத் தேடிக் கொண்டிருந்தான்.
காத்திருப்பதில் நேரமாகி இவன் வந்த பேருந்துகிளம்பி விடப்போகிறது என்று எச்சரிக்கையுடன் அதையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தவன் நம்பிக்கையிழந்து அடுத்த மணறை உறிஞ்சக் குனிந்தபோது “டாய் ரகு” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான்.
பன்னிரண்டாம் வகுப்புவரை கூடப் படித்த சொந்த ஊர்க்கார நண்பன் தற்போது வெளியூரில் உயர் படிப்பு படித்துக்கொண்டிருப்பவன் இவனை மாதிரியே தோளில் மாட்டிய பையும் கையில் வெட்டி சுரண்டிப் போடப்பட்ட இளநீர்வழுக்கையுமாக நின்றான்.
நண்பனைப் பார்க்க இவனுக்குள் பிடிபடாத பெருமையும் நிறைவும் பொங்கியது. பாட்டிலை சற்று நெஞ்சு உயரத்துக்கு நண்பனுக்கு நன்கு தெரிகிற மாதிரித் தூக்கிப் பிடித்தப்படியே “நீ எங்க ஏது” என்று குசல விசாரிப்பான உரையாடலின் ஊடே சட்டென்று நண்பன் குறுக்கிட்டான்.
“ஐயய்ய... இதெல்லாமா வாங்கிக் குடிக்கிற ஏற்கெனவே இதெல்லாம் கெமிக்கலு, ஒடம்புக்குக் கெடுதி, யாரும் வாங்கிக் குடிக்காதீங்கன்னு டாக்டருக்கல்லாம் சொல்ல, இப்ப சமீபத்துல போன வாரம் வேற, இந்த குளிர்பானத்துல பயிர் பாசனங்களுக்குத் தெளிக்கிற பூச்சி மருந்தெல்லாம் வேற அளவுக்கு அதிகமா இருக்குதுன்னு ஆராய்ச்சியில சொல்லியிருக்கிறான். அதப் போய் வாங்கிக் குடிக்கிற...” என்றான்.
இவனுக்கு முகம் மாறியது. இதுவரை நிலவிய பெருமிதமெல்லாம் நொறுங்கிச் சிதறிய மாதிரியிருந்தது. நண்பன் கண்ணில் படாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. என்ன செய்வது என்று புரியாது குழப்பதுடன் நிற்க நண்பன் சொன்னான்.
“குடிச்ச வரிக்கும் போதும் மொதல்ல அத கீழஊத்து. நம்ப ஊர் தண்ணிய எடுத்து நம்ப கிட்டயே விதது அவன் காசாக்கறது இல்லாம பணம் குடுத்து சூனியம் வச்சிக்கிற மாதிரி நம்பளா காசு குடுத்து வாங்கி ஏன் நாம்பளா நம் ஒடம்ப கெடுத்துக்கணும்” என்று ‘இந்தா’ என்று வழுக்கையை இவன் பக்கமாக நீட்டினான்.
முன்னாடியே குடித்துத் தொலைத்திருந்தாலும் யார் கண்ணிலும் படாமலாவது போயிருக்கும் இப்போது காசையும் அழுது பானத்தையும் குடிக்க முடியாமல் கீழே ஊற்ற நேர்ந்ததாக வருத்தப்பட்டு நின்றான்.
இவன் வந்த பேருந்தின் ஒட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்து ஒலி எழுப்ப குழப்பத்துடன் நான் வந்த வண்டி எடுக்கறான். ஊர்ல வந்து பார்ப்பம்” என்று சொல்லி புறப்படயத்தனித்தவன் நண்பன் வற்புறுத்த கொஞ்சம் வழுக்கையை எடுத்து வாயில் போட்டபடியே பேருந்தை நோக்கி நடந்தான்.

சனி, 1 மே, 2010

கிட்டுதல்

(சிறுகதை)

- சாங்கியன்

நண்பரது கடிதம் வீட்டி ,ந்த அளவு பெரிய எதிர்பார்வை உண்டு பண்ணும்என்று இவன் எதிர்பார்க்கவில்லை.

நண்பர் தில்லிக்காரர். அடிக்கடி சென்னை வந்து போகக் கூடியவர். தமிழ் ஆர்வம் உள்ளவர். எப்போதாவது கவிதைகள் எழுதுவது, வானொலி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் என்று இருப்பவர். சமீபத்தில் வெளி வந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் ஒரு காட்சியில் அவர் மருத்து வராக நடித்திருக்கிறாராம். அநேகமாய் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் ஒளிபரப்பாகலாம். அவசியம் பார்க்கவும் என்று எழுதியிருந்தார்.

கடிதத்தைப் படித்த மனைவி “கதிரவன் தொலைக்காட்சியெல்லாம் நமக்கு எங்கங்க வருது, நமக்கு வர்றது வெறும் சன், ஜெயா, விஜய், ராஜ்தான்” என்றாள்.

“கதிரவன்னா சன் டி.விதான் அததான் அப்பிடி தமிழ்ல எழுதியிருக்கிறார்” என்றான் இவன்.

“காரிக்கெழமன்னு எழுதியிருக்கறாரே, அது என்னா கெழம”

“காரிக்கெழமன்னா சனிக்கிழம. அதுகூடத் தெரியாதா ஒனக்கு. ஒண்ணொன்ணையும் ஒனக்கு வெளக்கணம்”

“ஆமா, அவரு எல்லாருக்கும் புரியறா மாதிரி எழுத வேண்டித்தான. உங்களுக்கு மட்டும் புரியறா மாதிரி எழுதிட்டா”

“கடிதம் எனக்குத்தான் எழுதியிருக்காரு. அதனாலதான் அப்படி எழுதியிருக்காரு”

“எல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் மட்டும் புரிஞ்சா போதும். மத்தவங்களுக்குப் புரிஞ்சா என்னா? புரியாட்டா என்ன?”

“இப்பிடி புதுசு புதுசா எதுனா வரும்போது தான் எதியும் தெரிஞ்சிக்க் முடியும். இப்ப புதுசா ரெண்டு வார்த்தகத்துக்ன இல்ல. இல்லாட்டா தெரியுமா..”

“சனிக்கெழமன்னா” என்று ஒரு கணம் யோசித்த மனைவி “இண்ணைக்கி வியாழன் நாளன்னிக்கிதான்” என்றாள். பின்பு கடிதத்தைப் பார்த்து “நண்பகல். மத்தியானமா. ஆமா. ஏதோ ஒரு சீரியல் ஓடுதுன்னு பக்கத்து ஊட்டம்மா கூடச் சொன்னாங்க. யாரு இதல்லாம் தொடர்ந்து உக்காந்து பாத்துக்னு இருக்கிறாங்க. எப்ப என்னா ஓடுதோ அப்பப்ப எதியாவது பாத்துக்க வேண்டியது. சும்மா ஒரு பெராக்குதான். இத அவசியம் பாத்துட வேண்டியது தான்” என்றாள்.

இவனும் தொலைக்காட்சித் தொடரெல்லாம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடியவன் அல்ல. ஒரு நடுத்தரக் கிராமத்தில் குடியிருந்து கொண்டு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருபவன் இவன். காலையில் எழுந்து செய்தித்தாள் பார்த்து, சிற்றுண்டி சாப்பிட்டு மதியத்துக்கும் எடுத்துக் கொண்டு ஒன்பதரை மணிவாக்கில் அலுவலகம் போனால் மாலை ஆறரை மணிக்கோ, ஏழுமணிக்கோ வீடுதிரும்பினால் சாப்பிட்டு முடித்து ஏதாவது சிற்றேடுகளையோ புத்தகங்களையோ எடுத்து வைத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்து விடுவான். இடையே செய்தி வரும் போது மட்டும் ஒரு அரைமணி நேரம். மற்றபடி தொலைக்காட்சிப் பெட்டிப் பக்கம் அதிகம் வருவதில்லை. வீட்டில் மனைவி குழந்தைகள் மட்டும், நிகழ்ச்சிகளை மாற்றி மாற்றி வைத்து அந்தந்த நேரம் எது பிடிக்கிறதோ அதை மட்டும் பார்த்து மகிழ்வார்கள். நண்பர் இவ்வளவு தூரம் மெனக் கெட்டு எழுதிவிட்ட பிறகு அதைப் பார்க்காமல் இருந்தால் சரிப்படாது. அடுத்த சந்திப்பில் நண்பர் கேட்டு அதைப் பார்க்கவில்லை என்றுசொல்வதெல்லாம் மரியாதையாக இருக்காது. ஏதாவது சாக்கு சொல்வதற்கும் மனச்சாட்சி இடம்கொடுக்காது. குறிப்பிட்ட அந்தக் காட்சியை மட்டுமாவது பார்த்து விடுவது என்ற முடிவு செய்து கொண்டான்.

சனிக்கிழமை வந்தது. மத்தியானமும் வந்தது. மனைவி அக்கம்பக்கத்து வீடுகளிலெல்லாம் தன் கணவரின் நண்பர் இன்று மத்தியானம் தொலைக்காட்சித் தொடரில் டாக்டராக வர இருப்பதைத் தண்டோரா போடாத குறையாகச் சொல்லி அவசியம் பார்க்க வேண்டும் என்ற அறிவித்திருந்தாள். தொ.கா. பெட்டி இல்லாத பக்கத்து வீட்டு அம்மாள் அவ்வப்போதைக்கு எந்த வீடு வாய்க்கிறதோ அந்தந்த வீட்டில் போய்ப் பார்த்துக் கொள்பவர். எப்போதாவது அந்த அம்மாள் சந்தர்ப்பம் தெரியாமல் உட்காந்திருப்பதைப் பார்த்து முகம் சுளிக்கும் மனைவி இன்று மத்தியானம் மட்டும் இங்கே வந்து பார்த்துக் கொள்ளும்படி சிறப்பு அனுமதி தந்திருந்தாள்.

தொடர் ஆரம்பிக்க ஒரு பத்து நிமிடம் முன்னதாகவே சமையல் கட்டிலிருந்து வெளியே வந்த மனைவி வியர்வையைத் துடைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே சொன்னாள்.

“எல்லா வேலையும் முடிச்சாச்சு, இன்னும் வத்தல் மட்டும் தான் பொரிக்கணம். அது சாப்டும் போது பொரிச்சிக்காலாம்னு உட்டுட்டேன். சீரியல் பாத்துட்டு அப்புறம் பாத்துக்கலாம்”

வெளி வாரந்தாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவன் “சரி சரி. நீ ஏன் இப்படிக் கெடந்து பறந்துக்னு இருக்க, வரும்போது பாக்கப் போறம். பாத்துட்டு சாப்டப் போறம். அதுக்கு நீ ஏன்இப்படி கெடந்து தம் கட்டுவ” என்றான்.

“உங்களுக்கென்னா சொல்லாத. ஒரு காட்சின்னா எம்மாம் நேரமோடக்குனு வந்து, டக்குனு போயி மிஸ் ஆயிடுச்சின்னு வச்சிக்கோங்க அப்பறம் என்னா பண்றது” என்றாள்.

பிறகு கொஞ்சம் யோசித்து “ஏங்க அவர் கொஞ்சம் வயசானவரா தெரிய மாட்டாரு” என்றாள்.

“ஆமா. அதுக்கென்னா. வயசானா டாக்டராவரக் கூடாதா”.

“அதுக்கில்ல. மேக்கப் எதுனா போட்டுக்னு வருவரா. இல்ல அப்படியே வருவரான்றதுக்காக கேட்டேன். ஏன்னா, மேக்கப் கீக்கப் போட்டுக்னு வந்து அடையாளம் தெரியாமப் போயிடப்போவுது”

“வயசான டாக்டர்னா அப்பிடியே வருவாரு. இல்ல இளமையான டாக்டர்னா மேக்கப் போட்டுக்னு வருவாரு. எப்படி வந்தா ஒனக்கென்னா டாக்டர்னா டாக்டர்தான்” என்றான்.

“ஒரு டாக்டர் மட்டும் வந்தா பிரச்சினஇல்ல. ரெண்டு மூ™ டாக்டரா வந்துட்டாங்கன்னா இவர எப்படி அடையாளம் கண்டு புடிக்கறதுன்ற துக்காக கேட்டேன்.”

“எல்லாம் கண்டு புடிச்சிக்லாம். கவலப்படாத என்றான்”.

அவள் நிறைவடையவில்லை முன்னதாகவே பெண்ணை மடக்கிப் போட்டவள் பையனை தேடினாள்.

“இந்த பொடி வேற எங்க போச்சின்னே தெரியல. அப்பா ஃபிரண்டு டாக்டரா வரப்போறாராம் மத்தியானத்துக்கு இருந்து பாருடான்னேன். எங்கியோ ஓடிட்டிருக்குறான் பாருங்க ஆட்டம் போடறதுக்கு” என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் மனைவி.

“சரி. அவன் வரும்போது வரட்டும் மணி ஆயிடுச்சி. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிச்சுடுவான்”

“நீ போய் உக்காந்து பாததுக்னு இரு. ஆரம்பிக்கும் போதுசொல்லுவரேன்”.

“போன கொஞ்ச நீரத்திலீஈ மனைவி உள்ளேயிருந்து கரல் கொடுத்தாள் ஏங்க. ஆரம்பிக்கப் போறான்”.

இவன் புத்தகத்தை அடையாளமாக மூடி வைத்துவிட்டு உள்ளே போனான். மனைவியும் நான்காம் வகுப்பு படிக்கிற பெண்ணும், பக்த்து வீட்டு அம்மாளும் மிகவும் பொறுப்போடு தரையில் அமர்ந்து சின்னத் திரையை நோக்கிக் கொண்டிருந்தனர்.

திரையில் எழுந்து ஓடிக்கொண்டிருந்தது.

“அவர் போ போடறானா பாப்பம்” என்றாள் மனைவி.

“சும்மா ஒரு காட்சி வர்ரதுககெல்லாம் பேர் போடமாட்டான்”

“ஏன் போடமாட்டான் மின்ன உங்க இன்னொரு ஃபிரண்டு சேட்டு ஊட்டு வேலைக்காரன் ரோல்ல வந்து ஐயா ஊட்டுல இல்லீங்க. வெளிய போயிருக்காருன்னு சொல்லிட்டுப் போனதுக்கே பேர் போடலியா.”

“பாப்பம்.. ஒவ்வொரு இயக்குநர் ஒவ்வொரு மாதிரி. சிலர் எல்லார் பேரையும் போடணம்னு நெசப்பாங்க சிலர் முக்கியமான ரோல்ல வர்ரவங்க மட்டும் போடுவாங்க”

தொழில் நுட்பக் கலைஞர்களின் பெயர் ஓடி முடிய அப்புறம் திடீரென்று திரைக்கதை வசனம் இயக்கம்..

“நடிகர்கள் பெயரையே போடக் காணம்” என்றான்.

“ஒரு வேள மொதல்லியே போட்டுட்டானோ என்னுமோ” என்றாள் மனைவி.
“இங்கதான இருக்கற நீ பாக்கலியா..”

“ஒங்களக் கூப்டுட்டு, தோ ரசம் கடுத்துடப் போவுன்னு எறக்கி வச்சிட்டு வாரனே அதான். நான் வேற எங்க போனேன்.”

“ஆமா. போ. எல்லாம் நீ வாயலா பேசதான் லாயக்கி”

“என்னா. ரசத்த எறக்கி வச்சிட்டு வாரதுக்குள்ளவா பேரப் போடுவான்.”

“இல்ல. இல்ல. நீ எறக்கி வச்சிட்டு வர்ர வரிக்கும் நிறுத்தி வச்சிருந்துட்டு அப்பறமா போடுவான்.”

“அதற்குள் பெண், நண்பர் பெயரைச் சொல்லி அந்த மாதிரிப்பேரே எதுவும் போடலிங்கப்பா” என்றாள்.

“ஒரு வேள புனைபெயர்ல எதுனா நடிச்சிருக்கறரோ” என்றான் இவன்.

“சரி. சரி. பேசாம நாக்காலில உக்காந்து படத்தபாருங்க. பேர உட்டா மாதிரியே அவரியும் உட்டுடப் போறம். மொதல்ல எடுத்ததுமே வந்துட்டுப் பூடப் போறாரு” என்றாள் மனைவி.

“நீ சொன்னா மாதிரிதான் இருக்கும் போலருக்குது. எடுத்ததுமே பெரிய பெரிய கட்டடமா காட்டறான். ஆஸ்பத்திரி மாதிரிதான் தெரியுது. மொதல்லியே வந்துட்டார்னா பரவால்ல பாத்துட்டு போயிடலாம். பூரா சீரியலையும் பார்க்க வேண்டிய அவஸ்த இருக்காது.

“இது ஆஸ்பத்திரி இல்லிங்க. ஸ்கூலு. டீச்சரம்மா வர்றாங்க பாருங்க”
“டீச்சரம்மவா, நர்ஸா நல்ல பாரு என்று யோசனையோடு இழுதத்வன் ஆமா. ஸ்கூலுதான் பசங்கள்லாம் வருது” என்றான்.

தரையில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. டீச்சரம்மாவந்தார்கள். அழுகிற குழந்தையைப் பார்த்து ஏன் அழுகிறாய் என்றார்கள். வேறு ஒரு டீச்சரம்மா அடித்ததாகக் குழநதை சொல்ல. ஏன் அடித்தார்கள் என்று இந்த டீச்சரம்மா கேட்கிறார்கள். அந்த டீச்சர் அம்மா அப்பான்னு சிலேட்டுல எழுத சொன்னாங்க டீச்சர். நான் எழுதலன்னு அடிச்சிட்டாங்க. ஏன் உனக்கு எழுதத் தெரியாதா. தெரியும் டீச்சர். ஆனா எனக்கு அம்மா அப்பா யாருமே இல்ல டீச்சர் அதனால அனாதைன்னு எழுதிட்டேன் டீச்சர் என்கிறது குழந்தை. டீச்சரின் கணகள் கொப்பளிக்க என் கண்ணே என்று குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொள்கிறாள் டீச்சர். இதற்கு மேல் இந்த உணர்ச்சிப் பிழம்பைக் காணப் பொறுக்காமல் நான் வெளிய இருக்கறேன். அந்தசீன் வரும்போது கூப்டு என்று பழைய படியே வெளியே வந்து உட்கார்ந்து புத்தகத்தை விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்.

தெருவில் எதிர்ப்புறம் ஒரு வீடு தள்ளியிருந்த பருத்தவேப்ப மரத்து நிழலில் அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் கட்டம் போட்டு சில்லு விளையாடிக் கொண்டிருந்தன. வாரம் பூராவும் வெறிச் சோடிக் கிடக்கும் வேப்பமரம் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வந்தால் மட்டும் களை கட்டும். அடர்ந்து ஏங்கிக் காத்துக் கிடக்கும் அந்த நிழலுக்கே அப்போது தான் ஒரு உயிர்ப்பு வந்தது மாதிரியிருக்கும். ஆடுபவர்களும், வேடிக்கை பார்ப்பவர்களுமாக இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். ரெட்டை சடை போட்டு மடித்துக் கட்டியிருந்த நாலாவது வீட்டுச் சிறுமி சடை துள்ளத்துள்ள எல்லாக் கட்டங்களிலும் சில்லு போட்டுத் தெத்தித் தெத்திக் கடந்து விட்டு மலையேறிக் கொண்டிருந்தாள். நெற்றியில் சில்லை வைத்துக் கண்களை மூடி அண்ணாந்து கால்களைப் பரப்பி, சில்லு விழாமல், கீழே கோட்டை மிதிக்காமல் சரியா, சரியா என்று கேட்டவாறே கட்டங்களைக் கடந்து கொண்டிருந்தாள்.

உள்ளிலிருந்து திடீரென்று மனைவியின் அலறல் சத்தம் கேட்டது “ஏங்க சீக்கிரம் வாங்களேன்”.

சூழ்நிலையையே மறந்தவனாகப் பதறியடித்துக் கொண்டு எழுந்தான். இவன், வெளி மூலையில் எப்போதும் அவசரத்துக்குத் தயாராய் சாற்றி வைத்திருந்த நீளத்தடியோடு உள்ளே நுழைந்து “எங்க” என்றான்.

வீடு புதியதாய்க் கட்டிய வீடு. கிராமத்தின் விரிவாக்கப் பகுதியில் இவனை மாதிரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின் வாரியப் பணியாளர்கள் எனச் சில நடுத்தரக் குடும்பங்கள் லோன் போட்டுச் சொந்தமாய் மண் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். இவன் வீடு இன்னும் பூச்சு வேலை கூட முழுமையாக முடியவில்லை. சுற்றிலும் கொல்லைமேடு. செடிகொடிகள் புதர்கள் மண்டிய கரம்புகள் என்பதால் அடிக்கடி பூச்சி பொட்டு நடமாட்டங்கள் உண்டு. கோடைமுடிந்து ஆடீ மழையில் உழ ஆரம்பித்துவிட்டால் நடமாட்டம் கொஞ்சம் கூட இருக்கும் நல்லது, சாரை, விரியன், நட்டுவ்hக்களி என ஏதாவது வரும். போன வாரம் கூடப் பொழுதுபோன வேளையில் அம்மிக்கல் இடுக்கில் நல்லது ஒன்ற இருந்து அடித்தது. அப்படித்தான் ஏதோ என்று பரபரப்போடு நுழைந்து போருக்குத் தயாரானவன் போல நின்ற இவனை மனைவி வியப்போடு பார்த்து “என்னங்க” என்றாள்.

இவன் “எங்க இருக்குது” என்றான்.

மனைவி வியப்போடு “எது” என்றாள்.

“எதுவா. எதுக்கு இப்படி கத்தன...”

“ஒரு அம்மா இருமிக்னு இருந்தாங்க. டாக்டர் வந்தாலும் வருவாருன்னுதான் கூப்புட்டேன்.”

“கிழிஞ்சிது போ. அதுக்கா இப்படி கத்தன. நான் என்னுமோ ஏதோ வாங்காட்டியும்னு பயந்திட்டேன்”

“ஆமா. நீங்க எப்பவும் அதியே நெனச்சிக்னு இருங்க. எதையாவது ஒண்ணை நெனச்சிக்னு எதையவாது ஒண்ணை செய்யறதுக்கு” என்றாள் மனைவி.

பொதுவாகவே அற்ப பிஷயத்துக்கெல்லாம் கூட “ஏங்க.. ஏங்க” என்று அலறும் சுபாவமுடையவள் மனைவி. காலையில் வழக்கமாக வரும் பேப்பர்காரப் பையன் வந்து பேப்பர் போட்டுவிட்டுப்போனால் கூட அவன் ஏதோ பேட்ரோல் பாம் வீசி விட்டுப் போனது போன்ற குரலில்தான் அதை அறிவிப்புச் செய்வாள். அந்த கடுப்பில் இவன் “சும்மா ஒரு செத்த அசஞ்சா கூட நமக்கு என்னமோ மாதிரி இருக்குது. நீ என்னான்னா அது அதுக்கும் இப்படி ஊடே தூக்கிக்னு போறா மாதிரி அலறிக்னு இரு” என்றான்.

“ஆமா நீங்க ஒண்ணுகெடக்க ஒண்ணு ஏதாவது செய்துட்டு எல்லாத்துக்கு எளச்சவ நானுன்னு எம்மேல எகிர்றிங்களா. உங்க ஃபிரண்டு வருவாரேன்னு கூப்புட்டேன். நீங்க பாத்தா பாருங்க பாக்காட்டி போங்களேன். எனக்கென்னா. நாங்களா அவருக்கு பதில் சொல்லப் போறம்”

“சரி. உடு. டாக்டர் வந்தாரா இல்லியா” என்றான் இவன்.

மனைவி பதில் சொல்லுமுன்
“ஏங்க உங்களுக்கு ஒடம்பு சரியில்லையா எங்கிட்ட சொல்லவே இல்லியே” என்று எடுத்துப்போட்ட மாதிரியே கேட்டாள் பக்கத்து வீட்டு அம்மாள்.

“எனக்கு ஒடம்புக்கு ஒண்ணும் இல்லியே நல்லதான இருக்கறேன்” என்றாள் மனைவி.

"பின்ன எதுக்குடாக்டர் வரச்சொல்லி இருக்கீங்க.”

“அது இல்லீங்க. நான் சொல்லல. இவரு பிரண்டு டாக்டரா நடிச்சிருக்காருன்னு அதக் கேக்கறாரு”

“அதுவா. நீங்க மருத்துவர்னுதான சொன்னீங்க மருத்துவர்ன்னுதும் நான் நாட்டு வயித்தியர்னு நெனச்சிக்னேன்.”

“ரெண்டும் ஒண்ணுதாம் பாட்டி. இங்கிலீஷ்ல டாக்டர்னா தமிழ்ல மருத்துவர். நாம்ப எவ்வளவோ விஷயம் தமிழ்ல தெரிஞ்சிக்க வேண்டியிருக்குது”. ஏதோ பெரிய கண்டுபிடிப்பு போல சொன்னாள் மனைவி.

“நானும் அதாம்மா சொல்றேன். இங்கிலீஷ் வயித்தியம் பாத்தா டாக்டரு. தமிழ் வயித்தியம் பாத்தா மருத்துவரு” என்றாள் பக்கத்து வீட்டம்மாள்.

இதுவேறவா என்று முனகியவன் “நான் வெளிய இருக்கறேன். வந்தா சொல்லு!” என்று வராந்தாவுக்கு வந்தான்.

ரெட்டை சடைப் பெண் ஒரு கட்டத்தில் பழம் போட்டுக் கிழிந்திருந்தாள். பாப் வெட்டியமற்றொரு சிறுமி சில்லு போட்டுக் கட்டங்களைக் கடந்து மலை ஏறிக்கொண்டிருந்தாள். இவளுக்கு உள்ள சங்கடம் ரெட்டைப் பின்னல் சிறுமி பழம் போட்டு கோடு கிழித்த கட்டத்தில் கால் வைக்கக் கூடாது சில்லை நெற்றியில் ஏந்திக் கண்ணை மூடி அண்ணாந்து “ரைட்டா.. ரைட்டா..” என்று நகர அவ்வப்போது கோட்டில் கால் வைத்து “அவுட்” ஆகீக்கொண்டிருந்தாள்.
உட்புறமிருந்து நெக்ஸ்ட் கேஸ் என்கிற குரலைக் கேட்கச் சரக் கென்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு வழுந்தான். அதற்குள் மனைவி பதறிக் கொண்டு வெளியே வந்து நின்று என்னங்க என்றாள்.
“டாக்டர் வந்துட்டாரா” என்றான்.

“வந்தா சொல்ல மாட்டனா”

“இப்ப ஏதோ நெக்ஸ்ட் கேசுன்னு கொரல் கேட்டுது”.

“அதுவா அது மருந்து விளம்பரம். விளம்பர டாக்டர்.”

“அப்படியா அதக் கேட்டதும் நான் நம்ப டாக்டர்தான் வந்துட்டாராங்காட்டியும் நெனச்சிக்னேன்.”

“அதுக்கா இப்படி நாற்காலிய டர்ர்ருனு தள்ளிக்னு எழுந்திரிப்பீங்க. நான் என்னுமோஏதோவாங் காட்டியும்னு பயந்துட்டேன்.”

“ஆமா. நீ எப்பப் பார்த்தாலும் அதியே நெனச்சின்னு இரு.”

“ம்...” என்று முறுக்கினாள் மனைவி.” இப்பிடி அமக்களம் பண்ணா யாருக்குதான் இதுவா இருக்காதாம் நான் நல்லதுதான் எவோ வந்துடுத்தாம் காட்டியும்னு நென்சிக்னு ஓடியாறேன்.”

“சரி. சரி. நீ உள்ள போயி இரு. திடீர்னு வந்துடப் போறாரு. இவ்வளோ நேரம் காத்துக்னு இருந்துட்டு கடைசில கோட்ட உட்டுடப் போறம்.”

“விளம்பரம்தான் போய்க்னு இருக்குது. வந்தா கூப்புட்றம் வாங்க” என்றாள் மனைவி. சற்று யோசித்து “இல்லண்ணா பேசாம கொஞ்ச நேரம் உள்ளதான் வந்து உக்காந்து பாததுடுங்களேன். எதுக்கு வெளில உக்காந்துக்னு இந்த மாதிரி அமக்களம் பண்ணிக்னு இருக்கீங்க..”

‘நாங்க அமக்களம் பண்றமா நீ பண்றியா.. பேசாம உள்ளபோய் உக்காந்து பாரு”
இவன் மீண்டும் புத்தகத்தைப் பிரித்து படிக்க யத்தனித்தான். மனம் வயிக்கவில்லை. சில்லு விளையாடும் குழந்தைகளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். “ரைட்டா.. ரைட்டா” என்று கேட்டபடியே கோட்டை மிதிக்காமல மலையேறி வருகிறாள் கிராப் சிறுமி என்றாலும் பின்புறம் திரும்பிப் பார்க்காமல் எதிர்ப்பக்கம் பார்த்து அனுமானமாய் வீசச் சில்லு கோட்டில் பட்டுவிகிறது. ஏமாற்றத்தோடும சோர்வோடும் குனிந்து சில்லியை எடுத்துக் கொண்டு அடுத்தவளுக்கு வழி விட்டு நிற்கும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரத்தில் தலையை அள்ளிக் கொண்டை போட்டபடி வெளியே வந்தாள் மனைவி. கூடவே கைகளை உயரே தூக்கி திமிர் விட்டபடி பெண்ணும் “போங்கப்பா வெளயாடப் போயிருந்தாலும் போயிருப்பேன்” என்றாள்.

“என்ன ஆச்சி’ என்றான்.

“முடிஞ்சி போச்சி”

“டாக்டர் வரவேயில்லியா”

“யாரோ ஒரு டாக்டரம்மாதான வந்தாங்க. டாக்டர் வரல” என்றாள் மனைவி.

“ஒரு வேள டாக்டர் இந்த வாரம் லீவு போட்டுடாரோ என்னமோஞ
“ஆமா உங்களுக்கு இந்த நெட்டுல ஒண்ணும் கொறச்சல இல்ல”.

“வரலண்ணா உடு. அடுத்த வாரம் வரப்போறாரு பாத்துக்கலாம்”

“அடுத்த வாரம் எங்க. நாம தான் சித்ரா கல்யாணத்துக்குப் போவப்போறமே. அந்த மத்தியான நேரம் எங்க இருக்கிறமோ. பெரும்பாலும் பஸ்&ல பயணத்துல இருப்பம்”

“ஆமா...” என்று அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தவன் போல இழுத்தான் அவன்.

“நானும் தொடர்ந்து பாக்கறங்க, நாம எதனா பாக்கணம்னு உக்காந்தா அண்ணைக்குத்தான் சோதனையா எதுனா ஒரு வேல வரும். இல்லன்னா நிகழ்ச்சி மிஸ் ஆவும். சும்மா கெடக்கற நேரமெல்லாம் கரண்ட் இருக்கும். நாம் எதுனா பாக்கணம்னா அண்ணக்கி பாத்து கரண்ட் போவும். எததினி புரோக்ராம் இந்த மாதிரி. அன்னைக்கு ஒரு நாள் காலையில யாரோ உங்க ஃபிரண்டு கவிஞரோட பேட்டின்னீங்களே அன்னைக்கு அப்படித்தான் பேட்டின்னு அறிவிச்சான் பொசுக்குன்னு கரண்ட் போச்சு. அப்படியே தோண்டி தொலங்கி கரண்ட் இருந்தாலும் பாத்துக்னு இருக்கும் போதே பாதில நிக்கும். எத்தினி படம் பழைய படம் இந்த மாதிரி பாதில போயிருக்குது. இன்னைக்கி எல்லாம் இருந்தும் அவரக்காணம். அடுத்த வாரம் வர்ராறோ என்னுமோ அப்பிடியோ வந்தாலும் நாம் இருக்க மாட்டோம்.”

“அதுக்கென்னா பண்றது. வாழ்க்கையில எவ்வளவோ விஷயங்கள் இந்த மாதிரி. நாம்ப நெனைக்கிறது எல்லாம் மேவா நெறைவேறுது நெறைவேறின வரைக்கும் பார்த்துக்னு போவ வேண்டியதுதான்”

“அவராவது எந்த வாரம் வர்ரேன்னு கராக்டா எழுதயிருக்கலாம்”

“அவருக்கே சரியா தெரியாததுனாலதான் ரெண்டு வாரத்துல எதுனா ஒரு வாரம்னு எழுதியிருக்காரு. ஏதோ ஒரு வாய்ப்பு கெடச்சி நடச்சி இருக்கறாரு. அத நண்பர்கள் பாக்கணும்னு விரும்பி எழுதியிருக்கறார். வாய்ப்பு இருந்தா பார்க்கப் போறம். முடியலைன்னா அதக்காக என்னா பண்றது. செவுத்திலயா போய் முட்டிக்க முடியும்..”

“அக்கம் பக்கத்துல இருக்கறவங்கள்ல்லாம் வேற எல்லாரும் கேட்பாங்கசார் ஃபிரண்டு வருவாருன்னீங்க. வரவேயில்லியேன்று..’

“இது கவலையா ஒனக்கு இந்த வாரம் அவரு லீவு போட்டுட்டாராம். அடுத்த வாரம் கட்டாயம் வந்துடு வாருன்னு” சொல்லு.


“ஆமா எல்லாம் உங்களுக்கு கிண்டல்தான்”.

“கிண்டல் என்னா கெடக்குது இதுல. சீரியசாவே தான் சொல்றேன். அடுத்த வாரம் கட்டாயம் வந்துடு வார்னு சொல்லு” என்று இவன் வேப்பமரம் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான். கிராப் தலைச் சிறுமி சில்லை நெற்றியில் வைத்து அண்ணாந்து கண்களை மூடி “ரைட்டா ரைட்டா” என நம்பிக்கை இழக்காமல் நடந்து கொனடிருந்தாள்.

முனைப்பு

(சிறுகதை)

அழைப்பிதழைப் புரட்டி நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மாநாட்டுக்குச் செல்வதா வேண்டாமா என்றுயோசித்துக்கொண்டிருந்தான். காரியத்தில் ஒன்றுமில்லாமல் சடங்கு போல வெறும் மாநாடாக நடத்திக் கொண்டிருப்பதிலோ, வேண்டுதல் மாதிரி சும்மா அதற்குப் போய் வந்து கொண்டிருப்பதிலோ என் பயன் என்பது இவனுக்குக் கேள்வியாயிருந்தது. என்றாலும் நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க போய் வருவது என்று முடிவு செய்து கொண்டான்.
சுற்றிலும் மரங்கள் அடர்ந்த மைதானத்தின் நடுவில் திருமணக் கூடம் போல் அமைந்திருந்த அரங்கில் மாநாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். முகப்பிலேயே “தமிழ் இன உணர்வாளர்களே வருக! வருக!” என்கிற பதாகை வரவேற்க எங்கு பார்த்தாலும் தமிழ் உரிமை சார்ந்த முழக்கங்கள் கோரிக்கைகள்.
அறிமுகப்பட்ட முகங்களைப் பார்த்து வணக்கம் சொல்லி புன்முறுவல் பூத்து நலன் விசாரிக்க, எழுச்சிப் பாடல்களுடன் தொடங்கிய மாநாடு, வழக்கமான வரவேற்புரை, சிறப்புரை, தலைமையுரைக்குப் பின் கருத்தரங்க நிகழ்சசிகளால் களை கட்டி கரவொலிகளால் அரங்கை அதிர வைத்துக் கொண்டிருந்தது.
நண்பகல் இடைவேளை அறிவிப்பிற்குப் பின் மாநாட்டுப் பந்தலியே வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களை நண்பர்களுடன் வாங்கி வைத்துப் பிரித்து மரத்தடியில் அமர்ந்தவன் சாப்பிட்டபடியே உரையாடிக் கொண்டிருந்தான்.
“அதே போச்சாளர்கள் அதே பேச்சு, இப்படி மாநாடகவே நடத்திக்கனு இருந்தா எப்பதான் இதுக்கு விடிவுகாலமோ...” என்றார் ஒரு நண்பர்.
“நம்மகிட்ட என்னா செயல் திட்டம் இருக்கு அத நடைமுறைப்படுத்த, அது இல்லாதவரைக்கும் சும்மா வாயாலியே பேசிக்னு இருக்க வேண்டியதுதான்” என்றான் இவன்.
“செயல்திட்டம் அப்புறம் இருக்கட்டும், மொதல்ல இந்த நிகழ்ச்சில கலந்துக்னு பேசறவங்க மாநாட்டுக்கு வந்து இருக்கறவங்கல்லாம் அவங்கவங்க கொழந்தைகள தமிழ் வழில படிக்க வச்சா போதும் தமிழ் தானா வளர்ந்துடும” என்றார் இன்னொரு நண்பர்.
“நல்லா சொன்னீங்க. இவ்வாளோ பேரு எங்கெங்கியோ இருந்து எவ்வளவோ செலவு பண்ணிக்னுவர்றம் வந்து புதுசா என்னா தெரிஞ்சிக்னு போறம். ஊருக்குப் போய் புதுசா என்னா செய்யப் போறம். எல்லாம் பழையகதைதான்” என்றார் முதலில் ஆரம்பித்தவர்.
“அதுக்காகவா மாநாட்டுக்கு வர்ரம். வந்தா எல்லாரையும் ஒருசேர சந்திக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு. அதத் தாண்டி வேஎன்ன..?” என்றான் இவன்.
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன முதன் முதலாக தமிழ் மொழி சார்ந்த பல கருத்துக்களை இவன் அறிய நேர்ந்தபோது அதன் நியாயம் இவனை மிகவும் கவர்ந்தது. இவ்வளவு காலம் இதை அறியாமல் போயிருந்து விட்டோமே, எப்படியெல்லாமோ வாழ்ந்துவிட்டோமே என்று அதற்காக வருத்தப்பட்டான். என்றாலும் சரி போனது போகட்டும் இனியாவது இதுபடியே நடந்துகொள்வோம் இது படியே வாழ்வோம் என்று முடிவு செய்து கொண்டான்.
ஆனால் முடிவு செய்யும்போது தெரியாத சங்கடம் அதை நடைமுறைப்படுத்தும் போதுதான் தெரந்தது. எல்லோரும் ஒரு விதமாய் இருக்க தான் மட்டும் வேறு விதமாய் இருப்பது போல் தோன்றியது. பேசுவதில் உள்ள சிரமம் ஒரு புறம் இருக்க மற்றவர்களுக்கு அதைப் புரிய வைப்பதில் உள்ள சிரமம் கூடுதலாக இருந்தது.
முதல் அனுபவம் இவனுக்கு நன்றாகவே ஞாபகத்தில் இருந்தது. சென்னை தியாகராயர் நகரிலிருந்து பாரிமுனை செல்லும் பேருந்து எறியவன் தன் கொள்கையை நடைமுறைப்படுத்து முகமாக முத்திய தொடர் வண்டி நிலையம் ஒண்ணு என்றான். நெரிசலில் பயணச்சீட்டுத் தந்து வந்து கொண்டிருந்த நடத்துநர் ‘கள்’ ளென்று ‘எங்க’ என்றார். இவன் சுற்று முற்றும் பார்த்து திருதரு வென்று விழித்து, மேற்கொண்டு நத்துவனரின் பொறுமையைச் சோதிக்க விரும்பாமலோ அல்லது அதற்கான மனத்திண்மை இல்லாமலோ லேசாய் முகம் சுருக்கி ‘சென்ட்ரல் ஒண்ணு’ என்றான்.
முதல் முயற்சியே இப்படித் தோலவியில் முடிந்தது இவனுக்கு சோர்வைத் தந்தாலும் இதற்கெல்லாம் தயங்கி ஏற்றுக் கொண்ட கொள்கையை விட்டு விடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டான். என்றாலும் ஒவ்வொரு முறையும் பேருந்தில் பயணம் செய்ய நேரும் போதெல்லாம் போக வேண்டிய இடத்தைத் தமிழிலேயே சொல்லிக் கேட்பதா இல்லை ஆங்கிலத்திலேயே கேட்டு விடுவதா என்பது கேள்வியாய் இருக்கும். இரண்டில் எதைச் சொன்னாலும் ஒன்றாயிருக்கும் இடங்கள் பற்றிப் பிரச்சினையில்லை. ஆனால் தமிழில் ஒருபெயரும் ஆங்கிலத்தில் ஒரு பெயருமாயிருக்கிற இங்கள் பற்றி வரும்போது தான் பிரச்சினை என்பதால் எதில் கேட்பது என்று மனதுக்குள் போராடுவான். தமிழில் கேட்பதிலுள்ள சங்கடங்களை உத்தேசித்து பேசாமல் ஆங்கிலத்திலேயே கேட்டுவிடலாமா என்றும் சபலம் தட்டும். கொள்கை இடிக்க, என்னவானாலும் சரி தமிழிலேயே கேட்பது என்று உறுதி எடுத்துக் கொண்டு நடத்துநருக்கு எந்த சந்தேகமும் எழாத வகைக்கு முதல் கேட்பிலேயே தெள்ளத் தெளிவாய்ப் புரியும் வகையில் போகவேண்டிய இடத்தைத் திருத்தமாகச் சொல்வான்.
சில நடத்துநர்கள் ஒரு விநாடி நிதானித்துப் புரிந்து கொண்டு சீட்டைக் கிழித்துத் தந்து விட்டுப் போய் விடுவார்கள். சிலர் முகத்தைச் சுளித்து மறுபடியும் ‘எங்க’ என்பார்கள். இவன் உறதி தளரக் கூடாது என்பதற்காக முதலில் சொன்னதையே மறுபடியும் கூடுதல் அழித்தத்தோடு சொல்வான். நடத்துனர் சற்று நிதானித்து ஒரு மாதிரியாகப் பார்த்துவீட்டு சம்பந்தப் பட்ட இடத்திற்கு உரிய பெயரை ஆங்கிலத்தில் சொல்லி ‘அங்கேயா’ என்று கேட்பார் இவன் தலையை மட்டும் ஆட்டி ‘ஆமா’ என்பான்.
எப்போதாவது தானியில் ஏற நேர்ந்தாலும் இதே சிக்கல்தான். தெரிந்த இடமானால் தானிக்காரர் அவராகவே உரிய இடத்துக்குக் கெண்டு போய் விட்டு விடுவார். புரிய இடம் என்று வந்தால் இவன் பின்னால் அமர்ந்து வழிகாட்டிச் செல்வான். இவன் இடது புறம் என்றால் தானிக்காரர் வலது புறம் திரும்புவார். வலது புறம் என்றால் இடது புறம் திரும்புவார். கேட்டால் ‘நீங்கதான சார் சொன்னீங்க’ என்பார். பிறகு அவருக்கு ‘இடது, வலது’ பற்றி ‘பீச்சக் கை’, ‘சோத்துக் கை’ யில் தொடங்கி ‘லைஃப்ட் ரைட்டை’ அதோடு பொருத்தி விளக்கம் தந்து வகுப்பு எடுத்துக் கொண்டே போய் இறங்க வேண்டும். அடுத்து வேறு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அவரே தான் கிடைப்பார் என்பதற்கும் எந்த உத்திரவாதமுமில்லை. அடுத்தமுறை வேறு ஒருவர். அப்புறம் அவருக்கும் வகுப்பு என்று தானிக்காரர்களுக்கான கொள்கைப் பரப்புரை தொடரும்.
வானங்களில் செல்ல நேரும் போதுதான் இந்தப் பிரச்சினை என்றால், நடந்து செல்லும் போதாவது கொள்கைப் பிடிப்போடு நடந்து கொள்ள முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. யாரையாவது வழி கேட்டாலோ, யாருக்காவது வழி சொல்ல நேர்ந்தாலோவும் இதே பிரச்சினைதான். ஒருமுறை நாடகம் ஒன்றைப் பார்ப்பதற்காக அண்ணா நகர் மேற்கிலிருந்து வர நேர்ந்த போது எழும்பூர் அருங்காட்சியகம் போன எந்தப் பேருந்து என்று இவன் பலபேரைக் கேட்டும் எல்லோரும் புரியாத மாதிரித் தலையாட்ட கடைசியில் ‘எக்மோர் ம்யூசியம்’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டு வந்து சேர்ந்தது. அப்புறம் திருவல்லிக்கேணியில் ‘மீர்சாஹிப் சந்து எந்தப் பக்கம்’ என்று கேட்டவருக்கு இவன் ‘இப்படியே நேராபோனா ஒரு பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து எடது பக்கமாகவே பார்த்துக்னு போனா ஒரு பெரிய மருத்துவமனை தெரியும். அதைத் தாண்டி கொஞ்சதூரம் போனா ஒரு வணிக வளாகம் வரும். அதுக்கு நேர்எதிர்த்தாற்போல. இருக்கற தெருவுல நடந்தா வலது பக்கம் ஒரு அடுமனை. அதுவும் பக்கத்துல இருக்கிற சந்துதான் மீர்சாஹிப் சந்து’ என்று சொல்ல, ஏதோ வேற்று கிரகத்து மனிதனைப் பார்த்து மாதிரிப் இவனைப் பார்த்து விட்டுச் சென்றார்.
தொலைபேசி எண்களைத் தெரிவிக்கும் போதும் இதே சிக்கல் தான். புதிய எண்களை அறிய நேரும்போது கவனமாக அதைத் தமிழில் சொல்லிப் பதிய வைத்துக்கொள்ள முடிகிறது. என்றாலும் எற்கெனவே மனதில் பதிந்து வைத்திருக்கும் பழைய எண்களை யாராவது கேட்டால் அதை ஆங்கிலத்தில் நினைவு கூர்ந்தே தமிழ்ப் படுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. டுஃபோர் த்ரி சிக்ஸ், இருவத்தி நாலு முப்பத்தாறு, செவன்ஃபல் நைன் எயிட் எழுபத்தஞ்சி தொண்ணூத்தெட்டு இப்படி.
அமைப்புத் தோழர்கள் தூரத்து நண்பர்கள் முன்பின் அறிமுகமில்லாத தவர்களிடம் எப்படியோ தொலைகிறது என்று பேசிக் கொள்கையை நிலைநாட்டி விடுகிறோம் என்றா ஞவட்டில் வாயைத் திறக்கவே கூச்சமாக இருக்கிறது. தொடக்கத்திலிருந்தே இப்படி இருந்து விட்டிருந்தால் பிரச்சினையில்லை. இவ்வளவு காலம் ஒரு மாதிரி பேசிவிட்ட இப்போது போய் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்வது என்றால் மாற்றிக் கொள்வதில் நமக்குத் தயக்கம் இருப்பது ஒருபுறம், மாற்றினால் பையன் என்ன ரு தினுசாகப் பேசுகிறானே என்று நினைப்பாதர்களோ என்கிற சங்கடம் மறுபுறம், எதையுமே பேச விடாமல் அல்லவா தடுக்கிறது. அம்மாவிடம் போய் ‘அம்மா சிற்றுண்டி கொண்டு வா’ என்றோ ‘இந்த மாதத்தொலைபேசி கட்டணச் சீட்டு வந்ததா’ என்றோ எப்படிப் பேசுவது இதனாலேயே வெளியில் நிகழ்த்தும் கொள்கைப் பரப்பலை வீட்டுக்குள் நிகழ்த்த முடியாமல் வாயிற் படியிலேயே அதறகு வேலி கட்ட வேண்டியதாகி விடுகிறது.
இப்படிப்பட்ட சங்கடங்கள் நேரும்போது, தன் சொந்த மொழியில் பேசவே எவனாவது கூச்சப்படுவானா, தன் தாய்மொழியில் பேசுவதையே, தன் தாய்மொழியில் பேசுவதையே எவனாவது கேலியாக நினைப்பானா, உலகில் வேறு எந்த மொழியிலாவது இப்படி ஒரு நிலை இருக்குமா என்று கேட்டுக் கொள்வான். இங்குமட்டும் ஏன் இந்த அவலம் இதற்கெல்லாம் யார் காரணம் எது காரணம் என்று யோசிப்பான். முந்தைய தலைமுறை மீது இவனுக்கு கோபம் வரும். சிறு குழந்தையிலிருந்தே இப்படிப் பேசவைத்துப் பழக்கிவிட்டிருந்தால் எந்தப் பிரச்சனையுமில்லை. உரிய காலத்தில் உரியதைச் சொல்லிப் பயிற்றுவிக்காமல் அப்போதெல்லாம் துங்கிக் கிடந்துவிட்டு இப்போது வந்து இதைப் பற்றிப் பேசினால்.. பேசுவது என்ன அவ்வளவு எளிதாகவா இருக்கிறது. இயல்பாய் வரும் பழைய மொழியைத் தவிர்த்து ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்துப் பார்த்துஅதுஅதற்கும் உரிய தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்துப் பேசுவது என்றால், கொஞ்சம் எச்சரிக்கைக் குறைவாய் இருந்தாலும் பழைய சொல்தானே முந்தித் துருத்திக் கொண்டு வருகிறது. ஐந்தில் வளைக்காமல் ஐம்பதில் வளைக்கும் முயற்சியாக அல்லவா இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரது இல்லத்துக்குச் சென்ற இவன் நினைவுக்கு வந்தது. அறுபது வயதை நெருங்குபவர். ஒரு முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு சமீபம் எழெட்டு ஆண்டுகளாகத் தமிழ் தமிழினம் என்பதில் ஈடுபாடு கொண்டு அதற்காகக் குரல்b காடுத்து வருபவர்.
நண்பரோடு உரையாடிக் கொண்டிருக்கும் போதே அவரது பேரக்குழந்தை வந்து அவரது மடியில் உரசியது. சுமார் ஒண்ணரை வயது இருக்கும்.
குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்ட அவர் ‘மாமாவுக்கு வணக்கம் சொல்லு’ என்றார்.
புதிய மகம் என்பதால் சற்று நேரம் உற்றுப் பார்த்து பின் இரண்டு கைகளையும் பின்னி ‘ம்ணக்ம்’ என்று மழலையில் மொழிந்தது குழந்தை.
நண்பரது முகத்தில் ஒரே பூரிப்பு. தான் பழக்கி வைத்த பிராணிகள் சொன்னதைச் செய்யும் போது பழக்யிவர் முகத்தில் ஒரு பெருமிதம் பொங்குமே அதைப் போல.
இவனுக்கும் மகிழ்ச்சிதான் பரவால்ல. எல்லார் வீட்லியும் மாமாவுக்கு சூட்மார்னிங் சொல்லுன்னு தான் பழக்கப்படுத்தி வச்சிருப்பாங்க. நீங்க வணக்கம் சொல்லிப் பழக்கி வச்சிருக்கீங்க என்றான்.
‘ஆனா இதுமட்டும் தான் தமிழ். மற்றதெல்லாம் இன்னும் ஆங்கிலம் தான்’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அவர்.
‘என்ன’ என்றான். ‘பாருங்க’ என்று அவர் பக்கத்தில் குறுமேசையில் கிடந்த செய்தித்தாளைக் காட்டிக் குழந்தையிடம் “இது என்னா பா’ என்றார். குழந்தை “பேப்ப” என்றது. “அது” “டி.வி”, “அதோ அது” லேடியோ”, இது “அலோ” தொலைபேசுவது போல காதருகில்கையை வைத்துக்காட்டியது “அதோ தெரியுமே அது” “லேய்ட்” “தோ மேல சுத்துதே அது” “பேன்”.
இப்படி பல, பொருள் பார்த்து பெயர் சொல்லல்களுக்குப் பிறகு வேறு சில வினாக்கள்” அதோ தெரியுதே அது என்னப்பா” “லோடு” “ரோடுல என்னப்பா வரும்” “லாலி”, “அப்பறம்” “பச்சு”, “பஸ்ஸுல என்னப்பா குடுப்பாங்க” “டிக்க” “வானத்துல பறக்குமே அது” “ஏபளேன்”, “தாத்தா கூட சாயங்காலத்துல என்ன போவீங்க” “வாக்கி”, “மாமா கூட கடைக்கி போலுங்க “சேக்கிள்”, “பல்லு எதால தொலைக்குவ” “புச்சு’, “என்னா போட்டு வெளக்குவ” “பேஸ்ட்”.
இவன் பொறுமையிழக்க அவரே குறுக்கிட்டு சொன்னார் நம்ப - குடும்பங்கள்லேயே இப்பிடி இருக்குதுன்னா அப்பறம் மத்த சாதாரணக் குடும்பத்து கொழந்தைகங்களப் பத்தி சொல்லவே வேண்டியதில்லை என்றார்.
இவன் ஏன் அப்பிடி என்றான்.
‘என்ன செய்யறது, நான் ஒருத்தன் மட்டும் தமிழ்ல சொல்லிக்குடுத்துட்டா போதுமா, ஊட்டுல இருக்கற மத்தவங்களும் அதுவும் ஒத்துழைப்பா இருக்க வேணாமா, அவங்க ஒண்ணாச் சொல்லி நான் ஒண்ணச்சொன்னா கொழந்தைக்கு என்ன புரியும். கொழப்பம்தான் வரும்.
‘ஏன் ரெண்டையும் சொல்லிக் குடுக்கறது’ என்றான்.
‘குடுக்கலாம், அதுக்கு இன்னும் வயசு போதாது. வளரட்டும் அப்பறமா பாத்துக்கலாம்னு உட்டுட்டேன்’ என்றார்.
அதை இவன் நண்பர்களிடம் சொல்லி மொதல்ல நம்பளப்போல உள்ளவங்க நம்ப வீட்ல தமிழ்ல பேசணும், கொழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கணும். அப்படி இல்லாம நம்ப தேழர்களே இன்னம் ‘கமிட்டி, கன்சல்ட், டிஸ்கஷன், டிபேட், ட்ரையின், டிக்கட், ரிசர்வேஷன், கோட்டான்னு பேசின்னு இருந்தா அப்பறம் தமிழ் எங்கிருந்து வளரும். இப்ப கூட நாம்ப எழுந்துவரும் போது நான் நாற்காலயீயல் உட்காந்துக்னு இருக்கேன். ஒரு தோழர் கடந்துபோறார். அவர் கால் எம்மேல பட்டுடுச்சி சாரி தோழர்ன்னு தான் சொல்லிட்டுப் போறார். ஏன் “மன்னிக்கவும் தோழர்’ வந்தறேன் தோழர்னு சொல்றது இப்படி சொல்றதுக்கு மொதல்ல ஒரு மாதிரியாத்தான் இருக்கும். பழகிட்டா சரியாப் போவுது. ஏன் முன்ன ‘தாங்க்ஸ்’ சொன்னவங்க இப்ப ‘நன்றி’ சொல்லல. இப்ப நன்றி சகஜமாயிடலியா அதுமாதிரித்தான் இதுவும் என்றான் இவன்.
எல்லோரும் சாபபிட்டு முடித்து இலையை மடித்து விரல்களை அதிலேயே துடைத்துக் கை கழுவ குழாய் பக்கம் நோக்கித் திரும்ப அப்பகுதியில் கூட்டாயிருப்பதைப் பார்த்து ஒரு நண்பர் சொன்னார். ‘இருங்க தோழர் நான் போய் வாட்டர் பாட்டல்ல தண்ணி புடிச்சின்னு வந்துடறேன். இப்பிடியே கழுவிக்கலாம்’ என்றார்.
“பார்த்தீங்களா ‘வாட்டர் பாட்டல்’ என்றான் இவன். ‘தண்ணி பாட்டல்’ னு சொல்றது.”
‘தண்ணி பாட்டல்னா வேறு அர்த்தம் வரும் தோழர்’ என்றார் ஒருவர்.
‘எல்லாம் பழக்கம்தான்’ என்றார் மற்றொருவர்.
“வாட்டருக்கு ண்ணீன்ட்டீங்க, பாட்டலுக்கு..”
“பாட்டலுக்கு புட்டி, குப்பி, சீசான்னு பலது இருக்கு. நாம்ப ‘தண்ணீர் புட்டின்னு’ சொல்லலாம்” என்றான்.
‘நல்லாத்தான் இருக்குது பழக்கப்படுத்திக்னா சரியாயிடும்...”
“சரி வாட்டர் பாட்டிலுக்கு இப்பிடி சொல்லிடறம். மினரல் வாட்டருக்கு என்ன சொல்லுவீங்க” என்றார் நண்பர்.
“மணி நீர்னு சொல்லலாம் மணின்னா தமிழ்ல அருமையான சிறந்த, உயர்வானன்னு பல பொருள் இருக்குது. தண்ணியில் தூய்மை கருதி அதை மணின்னு சொல்லலாம். அது உடன்பாடா இல்லன்ன நேரடியாவே கனிம நீர்ன்னு சொல்லிடலாம். கனிமம்னா மினரல்தான்”
“ஆனா அதுக்காக எலலாத்தியும் வலுக்கட்டாயமா தமிழ்ப் படுத்தி செயற்கையா பண்டிதத் தமிழா பேசனம்னு நான் சொல்லல. முடிஞ்சத ஏற்கெனவே தமிழ்ல அறிமுகமாயி பழக்கப்பட்டு வந்ததையாவது பேசலாமில்லியா அதத்தான் சொல்றேன்” என்றான்.
‘ஆனா எதப் பேசனாலும் உட்டுக்கு வெளியேதான் வச்சிக்கணம். ஊட்டுல போய் இந்த மாதிரியெல்லம் பேசனா நம்பள மெண்டல்ன்னுதான் நெனைப்பாங்க”
“அப்ப ஊருக்குத் தான் தமிழ் ஊட்டுக்கு இல்லண்றீங்களா” என்றான் இவன்.
“உங்களுக்கு இன்னும் மேரேஜ் ஆவல தோழர் அதனால தைரியமா பேசறீங்க” என்றார் நண்பர்.
“பாத்தீங்களா. பழையபடியே மேரேஜ். ஏன் திருமணம்னு வரமாட்டன்னுது.”
“பழக்கம் தான்”
‘இந்தப் பழக்கத்தத்தான் மாத்தனம்ன்றேன்’ என்றான்.
‘சரி, இந்த வாதத்த உடுங்க. புக்ஸ்டாலுக்கா ஒரு ரவுண்ட் போய்ட்டு வருவம். புது புஸ்தகம் எதுனா வந்திருக்குதா பாப்பம் என்றார்” நண்பர்.
இவன் நண்பரைப் பார்த்து முறைத்தான்.
நண்பர் சிரித்து “என்னா புக்ஸ் டாலா..” என்றார்.
“ஏன் நூற்கூடம், நூல் அரங்குன்னு சொல்றது எதுவுமில்லைன்னா சாதாரணமா புத்தகக் கடைன்னு சொல்லிட்டுப் போறது”
இப்பிடியெல்லாம் பார்த்தா வாயையே தெறக்க முடியாது தோழர் என்றார் அவர்.
இவன் ஏதோ பதில் சொல்ல எல்லோரும் பேசிக் கொண்டே நூற்கூடத்தை அடைந்தார்கள்.
“மொதல்ல முன்னோடிகளா இருக்கிறவங்க அவங்கவங்க ஊட்ல அவங்கவங்க கொழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கணும் அதுங்கள தமிழ்ல படிக்க வக்கணம். அத உட்டுட்டு ஊர்ல இருக்கறவங்க ஊட்டு கொழந்தைங்களுக்குத்தான் தமிழ். தன் உட்டுப் புள்ளைங்களுக்கு மட்டும் கான்வெட்டுன்னா தமிழ் எங்க உருப்படும்” என்றார் நண்பர்.
எல்லோரும் அப்படியிருக்காங்கன்னு சொல்ல முடியாது தோழர். சிலபேர் அப்படியிருக்கறாங்க கன்றதுக்காக எல்லாரையும் கொற சொல்ல முடியாது”
“அதுகூட அவங்க என்னா காரணம் சொல்றாங்க தமிழ் வழில படிக்க வக்ய நல்லதரமான பள்ளிக்கூடம் இல்ல. அதனாலதான் நாங்க ஆங்கில வழிப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப வேண்டியதா இருக்குதுன்றாங்க”
“இதெல்லாம் சும்மா ஒரு சாக்கு தோழர் எல்லாரும் இப்பிடிப் பேச ஆரம்பிச்சா அப்பறம் இதுக்கு எப்பத்தான் விமோசனம்”
“ந;ல்ல தரமான பள்ளிக் கூடங்கள் பெருகணம்”
“தானா எப்படிப் பெருகும். நாமதான் அதப்பெருக வக்யணம்.”
“பள்ளிக்கூடங்கள் பெருகனா மட்டும் போதாது தோழர். ஊட்டுல இருக்கறவங்க மனோபாவமும் மாறணம். இவரு தமிழ்ப் பற்றாளரா இருப்பாரு. ஊட்டுலு இருக்கறவங்க இவர ஓரங்கட்டி வச்சிட்டு அவங்க வேலையப் பாப்பாங்க. கேடட்h நீங்க உருப்படாமப் போனது போதும் புள்ளைங்களையாவது உருப்பட உடுங்கன்னு அவரை வாயடைப்பாங்க. இப்பிடி இருந்தா அப்பறம் தமிழ் எப்பிடி உருப்படும்.”
“இதனாலதான் பல குடும்பங்கள்ள இவரு பெரிய தமிழ்ப் பற்றாளரா இருப்பாரு, இவரு புள்ளைங்க பேரப்புள்ளைங்கள்லாம் கான்வென்ட்ல படிக்கும், கேட்டா குடும்பச் சூழல்ன்னு வாரு. குடும்பத்துலியே செல்வாக்கு செலுத்த முடியாதவரு அப்புறம் சமூகத்துல எப்பிடி செல்வாக்கு செலுத்த முடியும்ங்
“சிலபேர் குடும்ப சூழல் சிக்கலாத்தான் இருக்கும் தோழர். அதுக்காக ஊட்ட திருத்த முடியாதவர் ஊரத்திருத்த முடியாதுன்ற வாதத்த வைக்க முடியாது. அவரால மத்தவங்க திருந்தலாம் இல்லியா?”
“எதாருந்தாலும் மொதல்ல தமிழன் அவங்கவங்க ஊட்டுல தமிழ் பேசற துணிச்சலோட இருக்கணம். தமிழன் கூச்சலோட இருக்கணம். தமிழன் கூச்சப்படாம ஊட்டுல தமிழ் பேசி குடும்பத்தாரையும் எப்ப அப்படி பேச வக்யறானோ அப்பதான் தமிழ் உருப்படும்.”
“நல்ல சொன்னீங்க” என்றார் இன்னொரு நண்பர்.
உணவு இடைவேளை முடிந்து பிற்பகல் கவியரங்கம், பொது அரங்கம், நடக்க இருப்பதையும் முன்னதாக காலை நிகழ்ச்சிகள் தொடங்க இருப்பதாகவும் ஒலி பெருக்கியில் தெரிவித்த அறிவிப்பு ஆங்காங்கே வெளியே நின்று கொண்டிருக்கும் தோழர்களை அரங்கிற்குள் வந்து அமருமாறு கேட்டுக்கொண்டிருந்தது.
“சரி போய் உக்காருவம் தோழர்” என்றான் இவன்.
எல்லோரும் உள்ளே சென்று ஏற்கெனவே அமர்ந்திருந்த இடத்தை நெருங்கினர். இவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பக்கமாக தூரத்து நண்பர் ஒருவரைக் காண இவன் அவரை நெருங்கினான். நண்பர் இடைநிலை ஆசிரியர். தமிழ்ப் பற்றாளர். துணைவியாரும் அப்பிடியே. இலக்கிய இளம்கலைப் பட்டம் முடித்துப் பணி வாய்ப்பைத் தேடிக் கொண்டிருப்பவர். ஆசிரியர் மற்றவர்கள் மாதிரி இல்லாமல் வீட்டிலும் தமிழ் பேசினார். எப்போதாவது அவர் இல்லம் போனால் அவர் துணைவியாரும் தமிழ் பேசுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். நமக்கும் இப்படியே வாய்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வான். அல்லது இதுபோன்ற வராகத்தான் பார்த்து முடிக்க வேண்டும் என்று நினைப்பான். முதல் வகுப்புப் படிக்கும் ஒரே பையனுடன் குடும்பத்தோடு வந்திருந்தார்.
இவன் அவரை நெருங்கி “வணக்கம் தோழர்” என்றான்.
சட்டென்று திரும்பிய அவர் பதிலுக்கு வணக்கம் வைத்து “வாங்க வாங்க எப்ப வந்தீங்க” என்று வரவேற்க துணைவியாரும் பையனும் வணக்கம் வைத்து “வாங்க” என்றனர்.
இவன் தான் வந்த விவரத்தைச் சொல்லி “நீங்க எப்ப வந்திங்க, முற்பகல் உங்களப் பாக்கலியே” என்றான்.
“நிகழ்ச்சி தொடங்கும் போதே வந்துட்டேன் தோழா., முன்பக்கமா உட்கார்ந்திருந்தேன். ஒலி பெருக்கிப் பெட்டி ஒரே இரைச்சல் அதனாலதான் கொஞ்சம் தள்ளி உக்காரலாமேன்னு இங்க வந்துட்டம்” என்றார்.
“உணவெல்லாம் முடிச்சிட்டீங்களா” என்றார். அவரது துணைவியார்
“முடிச்சிட்டம். நீங்க” என்றான். இவன்
“கையோட கொண்டாந்திருந்தோம்” என்றார் அவர்.
இவன் அவரை அறியாத நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவரது தமிழ் ஆர்வத்தைப் பற்றியும் சொல்ல, நண்பர்கூச்சத்தோடு புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தார்.
கலைநிகழ்ச்சிகள் தொடங்க இருப்பதற்கான அறிவிப்புகள் வர இவன் அமர்ந்திருந்த இருக்கைப் பக்கமாகத் திரும்பினான். அங்கு அடையாளத்துக்காக துண்டால் சுற்றி மடித்து வைத்துவிட்டுச் சென்றிருந்த நாளேட்டைக் காணாமல் துண்டு மட்டும் இருக்க சுற்றுமுற்றும் பார்த்துக கொண்டிருந்த இவனை, நண்பர் “என்னா தோழர் தேடறீங்க” என்றார். இவன் தன்னுணர்வின்றியே இயல்பாக “ஒண்ணுமில்யே இங்க பேப்பர்’ வச்சிருந்தேன் காணம்” என்றான். அதற்கு ஆசிரியரின் முதல் வகுப்புப் படிக்கும் மகன் அருகில் அமர்ந்திருந்த யாரையோ கையைக் காட்டிஇவனிடம் சொன்னான் “செய்தித்தாளா. அதோ அவர் எடுத்து வச்சி படிச்சிக்னு இருக்கறார் பாருங்க.”

திங்கள், 12 ஏப்ரல், 2010

சூரப்பன் வேட்டை

(சிறுகதை)

- சாங்கியன்

ஏமாளித் தேசம் கடும் வறட்சியில் திண்டாடியது. தேசத்தின் வயல்களெல்லாம் காய்ந்து பாளம் பாளமாக வெடித்திருந்தன. வறுமையில் மக்கள் நண்டு நத்தைகளைப் பிடித்துத் தின்றும், எலிக்கறி சாப்பிட்டும் நாளைக் கழித்தனர். பலர் பஞ்சம் பிழைக்க அண்டை நாடுகளை நோக்கிப் புறப்பட்டனர். சிலர் எந்த வழியும் புரியாமல் தற்கொலை செய்து கொண்டு மாண்டனர்.
ஏமாளித் தேசத்தின் மேற்கே ஏமாற்றுத் தேசம் இருந்தது. இந்த இரு தேசங்களையும் இணைத்து பழைமை மிகுந்த ஒரு ஆறு ஓடியது. இது ஏமாற்றுத் தேசத்தில் உற்பத்தியாகி, ஏமாளித் தேசத்துள் புகுந்து, பல்வேறு கிளைகளாகப் பிரிந்து ஏமாளித் தேசத்திற்க வளமூட்டிக் கடலில் கலந்தது. காலம் காலமாக இரு தேசங்களும் பகிர்ந்து கொண்டு வந்த இந்த ஆற்று நீரைச் சமீபத்தில் ஏமாற்றுத் தேசம் அணைக்கட்டுகள் பல கட்டியும் நீர்த் தேக்கங்கள் பல அமைத்தும் ஏமாளித் தேசத்திற்குச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது. இந்த அநியாயத்தைப் பலமுறை கேட்டும் ஏமாற்றுத் தேசம் எதற்கும் செவிசாய்க்காத நிலையில் ஏமாளித் தேசம் சிற்றரசுகளுக்குள் ஏற்பட்ட இப்பிரச்சினையைத் தீர்க்க வஞ்சகப் பேரரசிடம் முறையிட்டது. வஞ்சகப் பேரரசு நடவடிக்கை எடுப்பதாய்க் கூறி நாளைக் கடத்தியதே தவிர ஏமாளித் தேசத்திற்குரிய நீரைப் பெற்றுத்தர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஏமாளித்தேச மக்கள் தங்களுக்குள்ள நீரைப் பெற்றுத்தரவும், முறைப்படி நிர் கிடைக்காததால் வறட்சிக்கு நிவாரணம் கோரியும், பயிர்கள் காய்ந்து கருகிப் போனதால் வாங்கிய பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யக் கோரியும் ஏமாளித்தேச அரசையும் வஞ்சகப் பேரரசையும் வலியுறுத்தி போராட்டங்கள் தொடங்கினர்.
ஏமாளித் தேச ஆட்சியாளர்களோ மக்களைப் பார்த்து, கவலைப்படாதீர்கள் சூரப்பனை விரைவில் பிடித்து விடுவோம் என்றார்கள். சூரப்பனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம், சூரப்பனை இதில் ஏன் இழுக்க வேண்டும் என்று ஏமாளித் தேச மக்களுக்குப் புரியவில்லை என்றாலும் ஆட்சியாளர்கள் அவ்வப்போது இதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஏமாளித் தேசத்தையும், ஏமாற்றுத் தேசத்தையும் இணைக்கும் எல்லைப் பகுதியில் இரண்டு தேசத்தையும் உள்ளடக்கிப் பலகாத தூரம் நீண்ட மிகப் பரந்த காடு ஒன்று இருந்தது. பத்து தப்படிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு முட்புதர்களும், செடிகொடிகளும், மரங்களும் மண்டி வளர்ந்து அடர்ந்து கிடக்கும் காடு அது. இந்த வனப்பரப்பில் தான் சூரப்பன் வாழ்ந்து வருவதாகச் சொல்லப்பட்டது.
மலைப் பகுதிகளையொட்டிய ஒரு சிறுகுக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் சூரப்பன் பிறந்திருந்தாலும் சிறு வயதிலிருந்தே அவன் வன வாழ்க்கையை மேற்கொண்டு காட்டு வாசியாகவே மாறிவிட்டதில் காட்டில் கரடி வேட்டையாடி அதன் ரோமம் பல், தோல் முதலானவற்றைக் கள்ளத் தனமாகக் கடத்தியும் காட்டு மரங்களை கண்டமேனிக்கு வெட்டி வீழ்த்தியும், சூரப்பன் வாழ்ந்து வருவதாகவும், இதற்கு இடையூறாக இருக்கும் வனச் செவகர்களையும், காவலர்களையும் அவன் கொடூரமாகக் கொன்று போடுவதாகவும் காட்டின் இண்டு இடுக்கு, மூலை முடுக்குகளெல்லாம் அவனுக்கு நன்கு அத்துப்படியாகி விட்டதால், காட்டில் அவன் எங்கு இருப்பான், எங்கு இல்லாமலிருப்பான் என்று அறிய முடியாத படிக்கு மாயாவிபோல் திரிந்து வருவதாகவும் அவன் அசகாய சூரன்என்றும் எந்தக் கொம்பனாலும், எப்படிப்பட்ட காவல் படையாலும் அவனைப் பிடிக்க முடியாது என்றும் இதனாலேயே யார் கையிலும் பிடிபடாமல் அவன் திரிந்து இவற்றையெல்லாம் விற்று வருவதாகவும் ஆட்சியாளர்கள் சொன்னார்கள்.
மலைவாழ்ப் பகுதி மக்கள் கூற்றோ வேறு விதமாக இருந்தது. ஆட்சியாளர்கள் சொல்லுமளவுக்கு சூரப்பன் அவ்வளவு கொடுமையானவன் இல்லை என்றும், ஆட்சியாளர்களுக்குத்தான் கொடூரமானவனே தவிர, சாதாரண மக்களுக்கு அவன் நல்லெண்ண மின்ன பரோபகாரி என்றும் சொன்னார்கள். தவிர அவன் மலைவாழ் மக்கள் பால் பாசமும் பரிவும் கொண்டவனாக, அவர்களது இல்லங்களில் நடைபெறும் நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டு உதவுவதாகவும் சொன்ன அவர்கள் சூரப்பனைப் பிடித்து எங்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. என்றாலும் ஆட்சியாளர்கள் தான் தங்களுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் சூரப்பனைப் பிடித்து விடுவதாகச் சொல்வதுடன், ஆட்சியாளர்களால் சூரப்பனைப் பிடிக்க முடியாமலிப்பதற்குக் காரணம், நாட்டிலிருந்து கொண்டே அவனுக்கு உதவும் முக்கியப் புள்ளிகள் தான். சூரப்பனை இத்தொழிலுக்கு இழுத்து விட்டு, அதில் அவனுக்கு ஆசை காட்டி அவனைக் கருவியாக வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள்தான். இவர்களே சில வனச் சேவகர்களையும், காவலர்களையும் தங்கள் கையாட்களாக்கிச் சூரப்பனுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உதவி இருக்கும்வரை சூரப்பனைப் பிடிப்பது என்பது பகற்கனவாகவே இருக்கும் என்றுச் சொன்னார்கள்.
என்றாலும் சூரப்பனைப் பிடிப்பது பற்றியே ஆட்சியாளர்கள் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தார்கள். சூரப்பனைப் பிடிக்க முதலில் ஏமாற்றுத் தேசமும், ஏமாளித் தேசமும் தடாலடிப் படை என்கிற ஒரு படையை அமைத்தது. தடலாடிப்படை என்பது, சாதாரணக் காவல் படைகளுக்கு உள்ளது போன்ற கட்டுப்பாடுகளோ விதிமுறைகளோ ஏதுமின்றி எதையும் தடலாடியாகச் செய்யும் ஒரு படையாக இருந்தது. இப்படையாட்கள் குதிரை மீதேறி அதன் குளம்புகள் ஒலிக்க புழுதியைக் கிளப்பியபடியே, வனப்பகுதியின் பல இடங்களில் வலம் வந்தார்கள். சந்தேகப்படும் இடங்களில் குதிரைகளை நிறுத்தி, அப்படியே கூட்டமாக இறங்கி தோளில் மாட்டியதுப்பாக்கிகளுடன் தோல் காலணிகள் சடசடக்க நாலாபுறமும் ஒடுவார்கள். பிறகு வெறுங்கையோடோ அல்லது யாரையாவது பிடித்து இழுத்துக் கொண்டோ திரும்புவார்கள்.
தடாலடிப் படைக்கு சூரப்பனைப் பிடித்ததோ இல்லையோ, மலைவாழ்ப் பகுதிமக்கள் வளர்த்து வந்த ஆடு கோழிகளைப் பிடித்தது. மலைப் பகுதித் தயாரிப்பான கள்ளச் சாராணத்தைப் பிடித்து மூச்சு முட்டக் குடித்து கோழிக் குருமாவும் ஆட்டுக்கறி வறுவலும் தின்று திளைத்தது. சரக்க தினவெடுக்க வயது வித்தியாசமின்றி மலை வாழ்ப்பகுதிப் பெண்கள் பலரைத் தங்கள் பசிக்கு இரையாக்கியது. இது போக விசாரணை என்கிற பெயரில் இழுத்து வந்தவர்களை கொடுமையாகச் சித்ரவதை செய்தது. அல்லது ஈவு இரக்கமின்றிக் கொன்று போட்டது.
இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட தடாலடிப் படையினரை அவன் பதிலுக்குக் கொன்று போட்டான். தடாலடிப் படைப் பகுதிகளில் கண்ணி வெடி வைத்தான். இதனால் தடாலடிப் படையினரின் இம்சை மலைவாழ் மக்கள் பால் கூடுதலாகியது. தாங்காமல் சூரப்பன் நடமாட்டம் பற்றித் தங்களுக்குத் தெரிந்த தகவல்கள் சிலவற்றை மக்கள் தடாலடிப் படையினருக்குச் சொல்ல, காவவர்களுக்கு மக்கள் உளவு சொல்வதாக சூரப்பன் சந்தேகிக்க, சந்தேகப்பட்ட நபர்களைத் தன்வளையத்திற்குள் கொண்டு சென்று கொன்று போட மக்கள் என்ன செய்வது என்று புரியாமல் ‘இருதலைக் கொள்ளி’ எறும்பாய்த் தவித்தனர். தடாலடிப்படையின் அத்துமீறல் பற்றி அரசுக்கும் புகார் தெரிவித்தார்கள்.
இதற்கிடையில் ஏமாற்றுத் தேசத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரை அவர் வீட்டிலிருந்தே சூரப்பன் கடத்தி வந்து தன் காலடியில் வைத்து பல்வேறு கோரிக்கைகளுடன் ஏமாற்றுத் தேசம் ஏமாளித் தேசத்திற்கு உரிய நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கோரியதுடன் தடாலடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும்எ ன்று கோர அது இருதேச அரசுகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சந்தர்ப்பத்திலும் ஏமாளித் தேசத்தைத் சார்ந்த முக்கியப் பிரமுகர்களே சூரப்பனிடம் தூது போய் பேச்சுவார்த்தை நடத்தி அம்முக்கியப் புள்ளியை மீட்டு அவர் வீட்டில் விட்டு வந்தார்கள். சூரப்பனுக்கு ஏற்பட்ட தொரு கடும் நெருக்கடி காரணமாகவே இக்கடத்தல் நடத்தப்பட்டதாகவும் பெருந்தொகை இதில் கைமாறியுள்ளதாகவும் எங்கும் பேச்சு அடிப்பட்டது.
இருதேச அரசுகளுக்குமே இது பெருந்தலைவலியாகியது. சூரப்பன் உயிரோடு இருக்கும்வரை இந்தத் தலைவலி ஒயாது என்று கருதிய இரு தேச அரசுகளுமே சூரப்பனை எப்படியாவது ஒழித்துவிட முடிவு செய்து வஞ்சகப் பேரரசின் உதவியை நாடின. சிற்றரசுகளின் கோரிக்கையை ஏற்ற பேரரசும் தன் பங்கிற்கு ஒரு சிறப்புப் படையை அனுப்ப இந்த சிறப்புப்படை எப்படியும் சூரப்பனைப் பிடித்து வரும் என்று நம்பப்பட்டது.
நவீனரகப்போர் ஆயுதங்களையும் இரவிலும் தெளிவாகக் காணத்தக்க தொலை நோக்கிகளுடனும் சூரப்பன் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் முகாமிட்ட இச்சிறப்புப்படை இரண்டு மாதங்கள் கழித்து முகாமைக் காலி செய்து வஞ்சகப் பேரரசின் தலைநகர் நோக்கித் திரும்பியது. இது பற்றிச் செய்தி திரட்டுவோர் கேட்டதற்கு சூரப்பன் எங்கிருக்கிறான் என்று எங்களுக்குச் சொன்னால் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்திப் பிடிப்பதுதான் தங்கள் வேலையே தவிர, அவன் எங்கிருக்கிறான் என்று தேடுவது தங்கள் வேலையல்ல, எனவே சூரப்பன் எங்கிருக்கிறான் என்று கண்டு பிடித்து எங்களுக்குச் சொன்னால் நாங்கள் வந்து அவனைப் பிடித்துக் கொடுப்போம் என்றும் சிறப்புப் படையின் தலைவர் தெரிவித்ததாகச் சொன்னார்கள். இதற்கு மேல் சூரப்பனைப் பிடிக்க வஞ்சகப் பேரரசு மையப் படையை அனுப்பிவைக்குமா என்று கேட்டதற்கு மையப்படை என்பது நாடுகளுக்கிடையேயான போருக்குத் தான் பயன்படுத்தப்படுமே தவிர சாதாரண ஒரு குற்றவாளியைப் பிடிக்க அதைப் பயன்படுத்த மாட்டார்கள். இதற்கெல்லாம் மையப்படையைப் பயன்படுத்துவது அதன் தரத்தை தாழ்த்துவதாகி விடும். படையதிகாரிகளும் அதற்கு ஒப்ப மாட்டார்கள் என்றார்கள்.
ஆக, பேரரசுப் படையாலும் சூரப்பனைப் பிடிக்க முடியவில்லை என்கிற நிலையில் மீண்டும் சிற்றரசுகளே சூரப்பனைப் பிடிக்கும் முயற்சியைத் தொடர்ந்தன. தடாலடிப் படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முயற்சி மேற்கொள்ளாத நிலையில் சூரப்பனை உயிருடனோ பிணமாகவோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தடாலடிப் படையினருக்கும் சூரப்பனைக் கண்டதும் சுடவோ, சுட்டுப் பிடிக்கவோ கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு தடாலடிப் படைத் தலைவர்களையும் அரசு அவ்வப்போது புதிது புதிதாக நியமித்தது.
பொறுப்பேற்கும் ஒவ்வொரு அதிகாரியும் தாங்கள் எப்படியும் சூரப்பனைப் பிடித்து விடுவோம் என்று சூளுரைத்ததுடன் சூரப்பனை மிகவும் கிட்டத்தில் நெருங்கி விட்டதாகவும் இன்னும் இரண்டொரு தினங்களில் சூரப்பனைப் பிடித்து விடுவோம் என்றும்அறிக்கை விட்டு இதற்கான ஆதாரங்களையும் அவ்வப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
தேடுதல் வேட்டையின் போது ரம்மியமான காலைப் பகுதியில் வீசும் மெல்லிய இளம் காற்றில் இயற்கைக்கு மாறான ஏதோ ஒரு துர்நாற்றமும் கலந்து வருவதாக உணர்ந்த தடாலடிப் படைத்தலைவர் தன்னுடன் வந்த படையாட்களைப் பார்த்து யாராவது காலைக்கடன் முடிக்காமலிக்கிறீர்களா என்றார். எல்லோரும், இல்லை ஐயா முடித்து விட்டோம் என்றனர். அதிகாரி மீண்டும் தீவிர யோசனையுடன் சில தடவை மூக்கை உறிஞ்சி மோப்பம் பிடித்து இது ‘யார் விட்டதாய் இருக்கும்’ என்று சிந்தையில் ஆழ, சட்டென்று அவர் முகம் மலர்ச்சியடைந்தது. அடுத்த நாள் செய்தி யேட்டில் இது பற்றிய முழுவிவரமும் வெளியாகியிருந்தது. தேடுதல் வேட்டையின் போது தடாலடிப் படைத் தலைவர் உணர்ந்த துர்நாற்றம் சாதாரண காட்டு விலங்குகள் விட்டதாகச் சொல்ல முடியாது, மனிதர்கள் விட்டதாகவே இருக்க முடியும் என்றும், அதேவேளை இது பருப்பு சாம்பார் காய்கறி உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருபவர்கள் விட்டதாகவும் தெரியவில்லை. காடை, கௌதாரி, மான், முயல், உடும்பு அயிட்டங்களாகவே தெரிகிறது என்றும், மனிதர்களிலும் நாட்டில் வாழ்பவர்கள் இதுபோன்று விட சாத்தியப்படாது, தொடர்ந்து காட்டில் வாழ்பவர்களுக்கே இது சாத்தியம் என்றும் எனவே இது சூரப்பனோ அல்லது அவனது கும்பலைச் சேர்ந்தவர்களோ விட்டதாகத்தான் இருக்க முடியும் என்றும் சொன்ன அவர் இதை உறுதி செய்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட இந்த அயிட்டத்தை ஆய்வுக்காகக் கண்ணாடிக் குப்பியில் அடைத்து வல்லுநர் குழுவுக்கு அனுப்பி யுள்ளதாகவும், அது சூரப்பன் கும்பல் விட்டதுதான் என்பது உறுதியானால் இன்னும் ஆறுமாதத்திற்குள் அவனைப் பிடித்து விடுவது நிச்சயம் என்றும் அறிவித்திருந்தார்.
இவ்வாறே அடுத்தடுத்து வந்த அதிகாரிகளும் சூரப்பன் கும்பல் வெளியேற்றியதாக நம்பப்பட்ட நீர்ம, திண்மப் பொருட்களை, அஃதாவது காய்ந்த வனப் பகுதியில் திட்டுத் திட்டாகத் தெரிந்த ஈரப்பகுதியைப் பார்த்து, பிடித்து வைத்த பிள்ளையார் போல் கூம்பிய முனைகளுடன் ஆங்காங்கே இறக்கப்பட்டிருந்த சரக்குகளைப் பார்த்து இதுவும் சூரப்பன் கும்பலின் உபயமாய்த் தான் இருக்கும் என்று நம்புவதாகவும் இவை உறுதியாகும் பட்சத்தில் சூரப்பன் கும்பலைப் பிடிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இப்படியாகத் தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டிருக்க அடைமழை பெய்து கொண்டிருந்த ஒரு நாளின் நள்ளிரவில் ‘அரசு முரசம்’ அறையும் ஒலி கேட்டது. ஏதோ முக்கிய சேதி என்று மக்கள் திரள சூரப்பனும் அவனது கும்பலைச் சேர்ந்தவர்களும் சுட்டுக் கொல்லப் பட்டதாக அரசு அறிவித்தது. மக்கள் நம்ப மாட்டார்கள் வியந்தும் சந்தேகத்தோடும் கேள்விக்குறி தோன்றும் முகத்தோடும் ஒருவரை யொருவர் நோக்க தடாலடிப் படையினர் சூரப்பன் மரணத்தை உறுதிசெய்து வாணவேடிக்கைகள் நடத்தியும் பட்டாசுகள் கொளுத்தியும் சூரப்பன் மறைவையும் தங்கள் வெற்றியையும் கொண்டாடிக் காட்டினார்கள்.
தடாலடிப் படைத்தலைவர் தான் சூரப்பனைக் கொன்ற விதம்பற்றி செய்தியாளர்களுக்கு இவ்வாறு அறிக்கை தந்தார். சூரப்பன் சிலகாலமாகவே நோய் வாய்ப்பட்டிருக்க அக்கும்பலுக்குள் அடுத்து யார் தலைமைப் பொறுப்புக்கு வருவது என்று போட்டி நிலவியதாகவும், சூரப்பன் சிகிச்சைக்காக காட்டை விட்டு வெளியே வந்து மருத்துவம் பார்க்க முயன்றதாகவும், இதை உளவுப் பிரிவின் மூலம் அறியவந்த தடாலடிப் படைத்தலைவர் தம்படையாட்களை அனுப்பி அவனது நம்பிக்கையப் பெற்று அவர்களே பல்லாக்குத் தூக்கிகளாகக் இருந்து காட்டை விட்டு அவனை வெளிக் கொண்டு வந்ததாகவும், வெளிவந்த அவனைக் கரணடையக் கேட்டபோது அவன் கரணடையாமல் தடாலடிப் படையைப் பார்த்துச் சுடமுயன்றதாகவும் தற்காப்புக்காக தடாலடிப்படையும் சுட சூரப்பனும் அவனது ஆட்களும் குண்டடி பட்டு மாண்டு போனதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தடாலடிப்படையின் தன்னிகரற்ற சாதனையாக சூரப்பன் படுகொலையை, அரசு பாராட்டி மகிழ, செய்தியேடுகள் பலவும் ‘சூரப்பவதம்’ என்றும் ‘சூரப்ப சம்ஹாரம்’ என்றும் சித்தரித்து சூரப்பன் மறைவைக் கொண்டாடின.
ஏற்கெனவே ஆட்சி நடத்தியவர்கள்,நடத்தாதவர்கள் எனப் பாகுபாடியின்றி அனைத்து முக்கியபுள்ளிகளும் சூரப்பன் மறைவிற்கு தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.
சூரப்பனால் கடத்தப்பட்டு 108 நாட்கள் பிணைக் கைதியாக இருந்து வெளிவந்த போது சூரப்பன் தன்னை மிகவும் பண்போடு நடத்தினான் எனவும் சூரப்பன் மிகச் சிறந்த மனிதாபிமானி எனவும், அப்போது பாராட்டிப் பேசிய ஏமாற்றுத் தேச முக்கியப் புள்ளி அப்பாடா ஒரு மனித மிருகம் ஒழிந்தது. எனக்கு மிக மகிழ்சசி. இனி என்சொந்த வீடில் பயமின்றி வாழ்வேன் என அறிக்கை விட்டார்.
சூரப்பன் வேட்டையில் தன்கு கவெற்றிகிட்ட வேண்டும் என்றுஅம்மன் கோயிலுக்கு வேண்டுதல் செய்துகொண்டிருந்த தடாலடிப்படைத் தலைவர் தமது வேண்டுதல் படி அம்ன் கோயிலுக்குப் போய் கை நகங்களை வெட்டிக் காணிக்கைசெலுத்திவிட்டு வந்தார். அத்துடன் சூரப்பன் காட்டிலிருந்து ஏமாளித் தேசத் தலநகருக்குத் தன் படைபரி வாரங்களுடன் கால்நடையாகவே பாதயாத்திரை செல்பவராகவும் அறிவித்தார்.
சூரப்பனைச் சுட்டு வீழ்த்தி காகசம் நிகழ்த்தியமைக்காக தடாலடிப் படையினர் ஆயிரம் பேருக்கும் தலா ஆயிரம் பொற்காசுகளையும் அவர்கள் விரும்புமிடத்தில் ஒரு குடியிருப்பு மனையும் வழங்குவதாக ஏமாளித் தேச அரசு அறிவித்தது.
சூரப்பன் தேடுதல் வேட்டையில் தாங்களும் பங்களிப்புச் செய்துள்ளதாகத் தெரிவித்த வனச்சேவகர்கள், எங்களுக்கும் அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க அரசு அவர்களுக்கும் பரிசு அறிவித்தது.
இதையொட்டி காவல் பரிவுகள் பலவும் சூரப்பன் வேட்டையில்தஙகள் தங்கள் பங்களிப்பைச் சொல்லி, தங்களுக்கும் அரசு பரிசுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கத் தொடங்கின.
இவ்வாறு நாடெங்கும் அமர்க்களமாக சூரப்பன் கொலையில் பல மர்மங்கள் இருப்பதாகவும் சரணடைய விரும்பிய சூரப்பனை அநியாயமாகச் சுட்டுக் கொன்று விட்டதாகவும், அல்லது சூரப்பனை நான்கைந்து நாட்கள் முன்னதாகவே பிடித்து வைத்திருந்துசித்ரவதை செய்து கொன்று விட்தாகவும், அல்லது காவல் படையின் பிடியில் சிக்க விரும்பாமல் தானாகவே தற்கொலை செய்து கொள்ள இறந்துபோன சூரப்பனையே தடலாடிப் படை சுட்டுக் கொன்றதாகப் பொய் கூறி பெருமை பாராட்டிக் கொள்வதாகவுமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டதுடன், தடலாடிப் படைக்கு பொற்காசுகள் பரிசளிப்பதைத் தடைசெய்யக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
ஏமாளித்தேசம் எது பற்றியும் கவலைப்படாமல் தடலாடிப்படைக்கு விழா எடுத்து பாராட்டுப் பத்திரமும் பொற்கிழியும் பரிசாக வழங்கியது. டலாடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தங்களும் வழங்கப்படாத நட்ட ஈட்டிற்காக மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட் மக்கள் இடையில் பெய்த கடும் மழையால் பாதிக்கப்பட்டு வறட்சி நிவாரண நிதியோடு வெள்ள நிவராண நிதியும்கேட்டுக் கொண்டிருந்தனர். ஏமாளித் தேச அரசு எதற்கும் செவி சாய்க்காது. காவல் படையினருக்கு பதவி உயர்வுகள் வழங்கி, படைக்குப் புதிதாக ஆள் சேர்த்துக் கொண்டிருந்தது. ஏமாளித்தேச மக்கள் நீண்ட காலம் ஏமாளிகளாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

விசுவாசம்-

சிறுகதை
விசுவாசம்
- சாங்கியன்
சாமானிய மக்கள் வாழும் குடிசைகளின் பக்கமாகக் கேட்ட அந்தக் குரைப்புச் சத்தம் வித்யாசமாக இருந்தது. இதற்குமுன் எப்போதும் கேட்டறியாதது போன்ற ஒரு வசீகரத் தன்மை கொண்டு மக்களை ஈர்த்தது. முதலில் அது வழக்கமாக எப்போதும் கேட்டதுதான் என்பது போல மக்கள் அதைப் பொருட்படுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள். பின் சத்தம் வேறு மாதிரி இருக்கவே அது பற்றி ஆறிய ஆவல் கொண்டவர்களாகத் தங்கள் குடியிருப்புகளின் தட்டிப்படல்களையும், சாக்குப் படுதாக்களையும் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். ஒட்டிய வயிறுகளுடன் எலும்பும் தோலுமாய்ப் பஞ்சடைந்து கண்களோடு காட்சி தந்த அவர்கள் செவிக்கு சத்தம் மட்டும்தான் கேட்டதே தவிர அது எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை.
சத்தம் வரவர மிக அருகில் கேட்பதாக இருந்தது. தெருமுனையில் அதன் தோற்றம் தெரிய பலரும் அதை ஆவலுடன் பார்த்தார்கள். செம்பழுப்பும் கருமையும் கலந்த நிறத்துடனும் இவர்களைப் போலவே வத்தலும் தொத்தலுமாக மெலிந்த தோற்றத்துடனும் காட்சி தந்த அது அது பாட்டுக்கு தெருவே குரைத்துக் கொண்டு போனது. தலையை மட்டும் உயர்த்தி இருபுறமும் இருந்து, குடியிருப்புகளைப் பார்த்துக் குரைத்தது. அது என்ன குரைத்துக் கொண்டு போகிறது? ஏன் குரைத்துக் கொண்டு போகிறது? என்பது எவருக்கும் புரியவில்லை. என்றாலும் அதன் குறைப்பு எல்லோரையும் கவனிக்க வைப்பதாய் இருந்தது.
தினம் அது காலை மாலை இரண்டு வேளையும் வந்து குரைத்து விட்டுப்போனது. காலையில் மக்கள் அனைவரும் வேலைக்குப் போகும் முன்பும், மாலையில் வேலை முடிந்து திரும்பிய பின்னுமாக அது வந்து குரைத்து விட்டுப் போனது. முதல் சில நாட்கள் தெருவோடு குரைத்துக் கொண்டு போன அது பிறகு, வீடு வீடாக நின்று வீட்டிலுள்ளவர்களை நோக்கி ஏதோ சொல்ல முனைவது போல குரைக்கத் தொடங்கியது. மார்கழி மாதத்தில் வீட்டுக்கு வீடு வந்து சேதி சொல்லி விட்டுப் போகும் குடு குடுப்பைக் காரணப் போல இதுவும் வீடு விடாக ஏறி இறங்கிக் குரைத்து விட்டுப் போவதை மக்கள் விசித் திரத்துடன் பார்த்தார்கள். சிலர் இதன் குரைப்பில் ஏதாவது சேதி இருக்கலாம் என்றார்கள்.
அது எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது, இவ்வளவு காலம் எங்கே தங்கியிருக்கிறது? என்பது பற்றியெல்லாம் எவருக்கும் தெரியவில்லை, சிலர் இவ்வளவு காலமும் அது ஊர் முகப்பின் வண்டிப்பாதையோரம் இருந்த இலுப்பை மரத்தடியிலோ அல்லது இடிந்து போய்க் கிடக்கும் பொதுச் சாவடியின் குட்டிச் சுவர் ஒரத்திலோ படுத்துக் கிடந்ததாகச் சொன்னார்கள். வேறு சிலர் அது ஊர்ப்பொதுக் கழிப்பிடமாக விளங்கிய குளத்து மேட்டுப் புளியத் தோப்பிலேயே பலகாலம் திரிந்து கொண்டிருந்ததாகவும் பின் ஊருக்குப் புதிதாக வந்திருந்த தாடிக்கார சந்நியாசி தோப்புக்குச் சென்ற போதெல்லாம் இதுவும் உடன் சென்றதாகவும் அதிலிருந்துதான் ஏதோ அருள் வாக்குப் பெற்றது போல் ஊருக்குள் வந்து குரைத்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.
அதன் பூர்வீகம் என்னவாயிருந்த போதிலும் அதன் குரைப்பு சிறப்பாயிருப்பதாகப் பலராலும் பாராட்டப் பெற்றது. அதன் தோற்றத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாத கணீர்க்குரலில், சீரொழுங்கான ஓசைநயத்தில், ஆற்றொழுக்குப் போன்ற வெளிப்பட்ட அதன் குரைப்பு பலருக்கும் பிடித்திருந்தது. அதன் குரைப்பைக் கேட்பதற்கென்றே பலர் காலையில் கண் விழித்து தெருத் திண்ணையிலே அமர்ந்து அதன் வருகைக்காகக் காத்திருந்தார்கள். அதன் குரைப்பைக் கேட்ட பிறகே மற்ற தங்கள் அன்றாட வாழ்வின் அலுவல்களைத் தொடர்ந்தார்கள் அல்லது இரவு படுக்கச் சென்றார்கள்.
வீடுவீடாக நின்று குலைத்து விட்டுப்போன அது ஒருநாள் மாலை வேளையோடு வந்து குரைத்து வீட்டிலுள்ளவர்களின் ஆடையைப் பற்றித் தெருவுக்கு இழுத்தது. சிலருக்கு அது பிடிக்காமல் தங்கள் ஆடைகளை விடுவித்துக் கொண்டு அதை விரட்டினார்கள். சிலர் என்னதான் செய்கிறது பார்ப்போம் என்பது போல அதன் இழுப்புக்கு இணங்கி தெருவுக்கு வந்தனர். அது ஒவ்வொரு வீடாகப் போய் இப்படிப் பலரைத் தெருவுக்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியது. பிறது எல்லோரையும் பார்த்து மறுபடியும் குரைத்து சிலரின் ஆடைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு தெருவில் நடந்தது. முன்னே செல்லும் அதை பலரும் ஒருவருக்கொருவர் கேள்விக் குறியோடு நோக்கியபடி பின் தொடர்ந்தார்கள்.
எல்லோரையும் அழைத்துக் கொண்டு சென்ற அது ஊர்ப் பொது மைதானத்தின் அரச மரத்தை அடைந்து அங்கிருந்த மண்nடையில் ஏறியது. சுற்று முற்றும் எல்லோரையும் ஒரு முறை பார்த்து மீண்டு குரைப்பைத் தொடங்கியது. அதன் குரைப்பைக் கேட்டவர்கள் அது மிக அழகான, சிறப்பான குரைப்பு என்றும் சாமானிய மக்களின் நலனுக்காகவே அது குரைக்கிறது எஙனறு இதுபோன்ற குரைப்பை தாங்கள் யாரும் இதற்குமுன் எப்போதும் கேட்டதில்லை என்றும் பாராட்டினார்கள். அதோடு குரைப்பின் நடு நடுவே அடிக்கடி கை தட்டியும் விசிலடித்தும் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இப்படிப் பலரும் அதன் குரைப்புக்குச் செவிசாய்க்க நாளாவட்டத்தில் அக் குரைப்பைக் கேட்பதற்கான கூட்டம் பெருகியது. எங்கும் அதன் குரைப்பு பற்றியே பேச்சாயிருக்க அக்குரைப்பின் பேரால் மன்றங்கள் தொடங்கப்பட்டன. எல்லோரும் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் அதன் குரைப்புக்கு ஆட்பட்டு அதன் குரைப்பைக் கேட்பதிலேயே பித்தாய்த் திரிந்தார்கள்.
ஒருநாள் தன் குரைப்பை முடித்து கீழே இறங்கிய அது மறுபடியும் எல்லோரது ஆடையையும் பிடித்து இழுத்து விட்டு வேறொரு திசை நோக்கி நடக்கத் தொடங்கியது. மக்கள் முதலில் புரியாமல் நின்று திகைத்தாலும் பிறகு ஏதோ முக்கிய சேதியாகவே அது அழைப்பதாகக் கருதி அதன் அழைப்புக்குக் கட்டுப்பட்டவர்கள் போல எல்லாரும் பின்னால் நடந்தார்கள்.
சாமானியர்களின் குடியிருப்பையொட்டியிருந்த அறுவடையாகிக் காய்ந்த பொட்டல் வெளிகளையும் பண்படுத்தப்படாது கரம்பாய்க் கிடந்த அது பூங்கா போன்று குளிர்ந்த மலர்ச் செடிகளுக்கும் பசிய புல்தரைப் பரப்புக்கும் மத்தியில் சுற்றிலும் முள் கம்பிவேலியால் பாதுகாக்கப்பட்டு பிரும்மாண்டபமான தோற்றத்தோடு தெரிந்த அடுக்குமாடி பங்களா நெருங்கியது. எல்லோரும் தன்னைப் பின்தொடர்ந்து வருகிறார்களா என அடிக்கடி திரும்பிப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டபடியே நடந்து வந்த அது பங்களாவின் முகப்பை நெருங்கி ஆவேசமாகக் குரைத்தது.
பிறந்ததிலிருந்து எப்போதுமே இந்தப் பக்கம் வந்தறியாதவர்கள், அப்படியே வந்திருந்தாலும் இந்த பங்களாவை நிமிர்ந்து பார்த்தோ, அல்லது அதை எதிர்த்தோ ஒரு சிறு முணுமுணுப்பைக் கூட வெளிப்படுத்தாதவர்கள், அது இப்படித் துணிந்து பங்களாவை நோக்கிக் குரைப்பதை அச்சத்துடன் பார்த்தார்கள். வயிற்றுத் தோல்கள் எம்பிஎம்பி ஒட்ட எலும்புகள் புடைக்க குரைத்துக் கொண்டிருந்தது. அது அடிக்கடி இவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லோரும் பின்னால் கட்டுக் கோப்பாய்த் திரண்டிருப்பதைப் பார்க்க அது முன்னிலும் தீவிரமாகக் குரைக்கத் தொடங்கியது.
நீண்ட நேரம் எந்த அரவமும் இல்லாது அமைதியாயிருந்த பங்களாவின் உட்புறமிருந்து திடீரென குலைபதறச் செய்யும் வகையில் பயங்கரக் குரைப்புச் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பங்களாவின் உட்புறக் கதவு திறக்கப்பட வாட்ட சாட்டமான தோற்றம் கொண்ட நான்கு பிராணிகள் முன்புற வரவேற்பு அதை வழியாக இவர்களை நோக்கிப் பாய்ந்தன.
நன்கு வளர்ந்த கன்றுக் குட்டியின் உயரத்துக்கு மினுமினுக்கும் சருமத்தோடு கொழுகொழுவென்று தோற்றத்தில், பிளந்த வாயோடும், இரைக்கும் மூச்சோடும் பாய்ந்த அவைகளைக் கண்டு மக்கள் அதிர்ந்து பின்வாங்கி ஒட யத்தனித்தார்கள். பிறகு நல்ல வேளையாக அவை சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதைக் காண ஆறுதலடைந்தாலும் நடுக்கத்தோடே நின்றாhகள். கூடவே தங்களைத் திரட்டிக் கொண்டு வந்த அது என்ன ஆயிற்றோ என்றும் பதற்றதோடு அதைத்தேட அது அவர்களின் கால்களுக்கிடையே புகுந்து ஒளிந்து பீதியுடன் நோக்கியது. வாலைப் பின்னங்கால்களுக்கிடையே இடுக்கிக் கொண்டு, உடம்பைக் கூனிக் குறுகியபடியே இவர்களைப் பார்த்து மொறுமியது. அதன் தோற்றத்தைக் காண இவர்களுக்குப் பரிதாபமாயிருந்தது.
வரவேற்பு அறையில் நுழைந்த பங்களாப் பிராணிகள் அங்குள்ள பஞ்சுமெத்தை இருக்கைகளில் ஏறி கம்பிரமாக அமர்ந்து அவ்வப்போது இவர்களைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தன. சும்மாயிருக்கக் கூடாது என்பதற்காக பேருக்கு இதுவும் பதிலுக்குக் குரைத்தாலும் அதன் குரைப்பில் முன்னே மாதிரித் தெம்போ ஆவேசமோ இல்லை. இரண்டொரு முறை லேசாகக் குரைத்து விட்டு அது சமானியர்களின் குடியிருப்பை நோக்கித் திரும்பியது.
பின்னால் வந்த சாமானியர்கள் அதைப் பரிதாபத்தோடு பார்த்தார்கள். இந்த நிலையிலேயே இருந்தால் எந்த நாளிலும் அதால் பங்களாப் பிராணிகளுக்கு ஈடு கொடுக்க முடியாது என்றும் அவற்றுக்குச் சமமாக இதை வளர்க்க வேண்டுவத மிகவும் அவசியம் என்றும் கருதினார்கள். எனவே குரைப்பு முடிந்தாலும் வழக்கம் பால் இனி தனியே போக விடாமல் அதைத் தங்கள் பொறுப்பில் வைத்துப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் முடிவு செய்தார்கள். என்றாலும் தங்களைப் போலவே வெறும் கூழ், கஞ்சி, பழைய சோறு முதலானவைகளை மட்டுமே உண்டு வந்தால் அதைப் பங்களாப் பிராணிக்கு நிகராக உருவாகக்க முடியாது என்பதால் பொது நிதியொன்று திரட்டி அதற்கு சுறிசோறு, பிஸ்கோத் முதலானவைகளை வாங்கித் தரவும் திட்டங்கள் விடுத்து அது தங்குவதற்கும் ஒரு சிறு குடிலை ஏற்பாடு செய்தார்கள்.
இவ்வாறு சாமானிய மக்கள் தந்த ஊட்டத்திலும் ஆதரவாளர்கள் தந்த நிதியிலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது அது. தோற்றமும் படிப்படியாக பங்களாப் பிராணிகளுக்கு நிகராக மெருகேறியது.
இந்த மாற்றத்திற்குப் பிறகு அது மீண்டும் சாமானியங்களைத் திரட்டிக் கொண்டு போய் பங்களாவை நெருங்கி தன் குரைப்பைத் தொடங்கியது. வரவேற்பு அறையில் போடப்பட்ட மெத்து மெத்தான இருக்கைகளில் இருந்தபடியே பங்களாப் பிராணிகளும் இதைப் பார்த்தன. இதன் தோற்றம் அவைகளுக்கு எப்படியிருந்ததோ முதலில் அவை நேச பாவத்தோடு இதைப் பார்த்து வாலை ஆட்டி மொறுவின. ஆனால் இது அதைச் சட்டை செய்யாமல் தன் குரைப்பைத் தொடங்க பதிலுக்கு அவைகளும் குரைக்கத் தொடங்கின. இப்படி இது குரைக்க, அவையும் குரைக்க மாற்றி மாற்றி இந்தக் குரைப்புப் போர் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பின் பங்களாவின் உட்புறமிருந்து ஒரு கனத்த குரல் அதட்டல் போட்டு அவைகளை அடக்கியபடியே வெளியே வர இதுவும் அடங்கித் திரும்பியது.
இப்படியாக அவ்வப்போது இந்தக் குரைப்புப் போர் நடைபெற இது பகுதியெங்கும் பிரபலமாகியது. பத்திரிகைகளும் இதுபற்றி எழுத சமானிய மக்கள் மேலும் மேலும் இந்தக் குரைப்புப் போரைக் காண ஆவல் கொண்டு திரண்டதுடன் இதற்கு ஆதரவாக பொருளுதவியும் செய்தார்கள். நாளுக்குநாள் திரளும் மக்கள் கூட்டம் பங்களாவையே முற்றுகைக்குட் படுத்தியது போல் இருந்தது. பங்களா வாசிகளுக்கு இது எப்படியிருந்ததோ குரைப்புப்போர் நடந்து கொண்டிருந்த ஒரு நாளில் பங்களாவின் பொறுப்பாளர் வெளியே வந்தார். பங்களாப் பிராணிகளைப் பார்த்து ஒரு அதட்டல் போட்டு அடக்கி விட்டு இதை நோக்கி “த்தோ... த்தோ...” என்று அன்பொழுகும் குரலில் ஓர் அழைப்பு விடுத்தார்.
பட்டென்று ஒரு கணம் தன் குரைப்பை நிறுத்திய இது, தன்னைச் சுற்றியிருந்த சமானிய மக்கள் அனைவரையும் ஒரு முறை பார்த்தது. பிறகு அது முன்னிலும் வேகமாக அவரைப் பார்த்து குரைக்கத் தொடங்கியது. பங்களாவாசி முயற்சிகை விடாமல் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியைச் சுற்றியிருந்த சாமானியர்கள் பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். பங்களாவாசியே நேரில் வந்து அழைத்தும் அதைச் சட்டை செய்யாமல் தன் பாட்டுக்கு குரைத்துக் கொண்டிருந்த அதன் கொள்கை உறுதியையும் மனத் திட்பத்தையும் மக்கள் மிகவும் பாராட்டினார்கள். குரைப்பு முடிந்து குடியிப்புகளுக்குத் திரும்பிய பிறகு சமரசமற்ற அதன் நேர்மையைப் புகழ்ந்து அதற்கு விழாக் கொண்டாடி பூரிப்பும் மகிழ்ச்சியும் பொங்க அதற்கு மாலை அணிவித்தார்கள்.
இந்தச் சம்பவத்திற்கு பிறகு சாமானியர்களுக்கு அதன் மேல் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. தங்களுக்காக குரல் கொடுக்கவும், தங்கள் வாழ்வை வளமாக்கவும் அது தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதாகக் கருதி அதை மேலும் கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தார்கள். என்றாலும் இனி அது போகுமிடமெல்லாம் தாங்களும் கூடவே போக வேண்டிய அவசிய மில்லை என்றும் கருதினார்கள். இதுவும் முன்னைப் போல எப்போதும் இவர்களை அழைத்துக் கொண்டில்லாமல் அதுபாட்டுக்கு அவ்வப்போது தனியே போய்க் குரைத்து விட்டு வந்தது.
அன்று வழக்கத்துக்கு மாறாக அது வெகுநேரம் குரைப்பதைப் பார்த்த பங்களாவாசி எழுந்து வெளியே வந்தார். ஏற்கெனவே பலமுறை அதை அழைத்துப் பார்த்து அலுத்துப் போன அவர் சிறிது நேரம் நின்று அதையே பார்த்துவிட்டு உள்ளே சென்றார். திரும்பி வரும்போது அவர் கையில் பெரிய இறைச்சித் துண்டு இருந்தது. நேரே அதைக் கொண்டு வந்து, விடாமல் குரைத்துக் கொண்டிருந்த அதன் முன் வைத்தார். இதைப் பார்த்த பங்களாப் பிராணிகள் கோபமடைந்தவை போல் சங்கிலிப் பிடிக்குள் பாய்ந்தன.
குரைப்பைச் சற்று நிறுத்தி தன் முன்னே வைக்கப்பட்ட இறைச்சித் துண்டையே சிறிது நேரம் பார்த்த இது அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தன் குரைப்பைத் தொடங்கியது. எப்படியாவது அதைச் சமாதானப் படுத்த வேண்டும் என்றும் பங்களாவாசி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலிப்பதாய்த் தெரியவில்லை. சிறிது யோசனை செய்து மீண்டும் உள்ளே சென்ற அவர் மேலும் இறைச்சித் துண்டுகளோடு வெளியே வந்து அவற்றைப் பங்களாப் பிராணிகளின் முன் போட்டார்இ அவை மிகுந்த ஆர்வத்தோடு ஆவேசத்தோடும் அவ்விறைச்சித் துண்டுகளைக் கடித்துக் குதறி சுவைத்து உண்பதைக் காண இதன் நாக்கில் நீர் ஊறியது. குரைப்பதைச் சற்று நிறுத்தி இறைச்சித் துண்டையே சிறிது நேரம் பார்த்தது. கூடவே சற்று முற்றும் திரும்பி சாமானியர்கள் யாரும் தென்படுகிறார்களா என்றும் ஒரு நோட்டம் விட்டது. பிறகு உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே மெல்ல காலால் அதைத் தன் பக்கம் இழுத்து. அதையே சற்று நேரம் பார்த்து மீண்டும் சுற்றிமுற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு அவ்விறைச்சித் துண்டை முன்னங்கால்களில் அழுத்தியபடியே வாயால் கடித்து இழுத்து ருசித்து தின்னத் தொடங்கியது.
ஒரு வெற்றிப் புன்னகையோடு உள்ளே சென்ற பங்களாவாசி மேலும் சில இறைச்சித் துண்டை சுத்தமாய்க் கடித்து விழுங்கிய பிறகு அது சுற்றுமுற்றும் பார்த்து மீண்டும் குரைக்கத் தொடங்கியது. அதைப் பார்த்து சிரித்த பங்களாவாசி அடுத்த துண்டைப் போட்டார்.
இதன் பிறகு அது அடிக்கடியோ அல்லது வழக்கத்திற்கு முன்னதாகவோ வந்து குரைக்கத்தொடங்கியது. தன்னோடு எப்போதாவது வரும் ஒரு சில சாமானியர்களும் கலைந்து போகும் வரைக்கம் காத்திருந்து இறைச்சித் துண்டுகளுக்காகக் குரல் கொடுத்தது. முதலில் இறைச்சி வரத் தாமதமானால் முன்னிலும் வேகமாகக் குரைத்தது. இதற்கு இப்படி இறைச்சித் துண்டுகள் போடுவதைப் பார்த்து, அது தங்களுக்குப் போட்டியாக வந்து விட்டது போல் கோபத்தோடும் ஆத்திரத்தோடும் குரைத்த பங்களாப் பிராணிகள் நாளடைவில் அதைத் தங்கள் சக பிராணிபோலக் கருதி ஏற்றுக் கொள்ளத் தொடங்கின. இருந்தாலும் அதற்கான கவனிப்பு மட்டும் வெளி முற்றத்திலேயே நடந்தது.
குரைக்கிற நாட்களில் போடுகிற இறைச்சித் துண்டுகளை மட்டும் வயிறாரத் தின்று சென்று கொண்டிருந்த அது அன்று தின்று முடித்த பிறகும் போகாமல் வரவேற்பு அறையையே பார்த்துக் குரைக்கத் தொடங்கியது. சிறிது நேரம் அதன் குரைப்புக் காரணம் புரியாது குழம்பிய பங்களாவாசி அதன் பார்வை நிலை குத்திய இடத்தைப் பார்த்து அதைப் பார்த்து மெல்லச் சிரித்தார். அறையில் பங்களாப் பிராணிகள் கம்பீரத்தோடு அமர்ந்திருந்த மெத் மெத் என்ற இருக்கைகளின் பக்கத்தில் காலியாகவும் சில கிடந்தன.
இது உறுதியான பிறகு அவர் தன் பணியாளர்களை அழைத்து எதுவோ சொன்னார். அவர்கள் உரிமையோடு வந்து இதைத் தட்டிக் கொடுத்து எழுப்பி பங்களாவின் பின்புறம் அழைத்துச் சென்றார்கள்.
இதுவும் எதிர்ப்பு எதுவும் காட்டாமல் நீண்ட நாள்கள் அவர்களோடு பழக்கப்பட்டது போல வாலை ஆட்டியும் குழைந்தும் நேச பாவத்தோடு உடன் சென்றது. பணியாளர்கள் வெது வெதுப்பான நீரில் நன்கு சோப்புப் போட்டுக் கழுவி அதைக் குளிக்க வைத்தனர். இரண்டு மூன்று முறை இப்படிக் கழுவி அதன் கடந்த கால அழுக்குகளைப் போக்கியதாகத் திருப்தியற்ற பின் பிறகு கடைசியில் அதை நோய்க்கிருமிகள் அண்டாத மருந்து நீரில் குளிப்பாட்டி தேங்காய்ப் பூ துவாலையால் துவட்டினர். பிறகு அதன் மீது வாசனைத் திரவியங்கள் அடங்கிய நீர்மம் பூசப்பட்டது. எல்லாம் முடிந்த பிறகு பணியாளர்கள் ஏற்கெனவே எண்ணெய் போட்டுத் துடைத்துப் பளபளப்பாக்கி சுவரில் மாட்டியிருந்த சங்கலிகளுள் ஒன்றை எடுத்து அதன் கழுத்தில் மாட்டினார்கள். இவ்வாறாக அது “ஞானஸ்நானம்” அளிக்கப்பட்டது போல் அனைத்தும் முடித்து அழைத்து வரப்பட்டு முன்புறம் வரவேற்பு அறையில் ஏற்கெனவே பங்களாப் பிராணிகள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்குப் பக்கத்தில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்த்தப்பட்டது.
ஏதோ தன் வாழ்க்கை இலட்சிய நிறைவேறிவிட்டது போன்ற பூரிப்புடனும் மகிழ்ச்சியுடனும் பட்டுப்போன்று வழவழக்கும் வெல்வேட் இருக்கையில் மெத்து மெத்தென்ற பஞ்சு மெத்தையில் கழுத்தில் மாட்டிய சங்கிலியோடு அமர்ந்து அது சக பிராணிகளைப் பெருமையோடு பார்த்தது. சக பிராணிகள் எதுவும் புரியாது முதலில் அதற்கு எதிர்ப்புக் காட்டினாலும் பங்களாவாசி வந்து அவற்றையும் தடவிக் கொடுத்து சமாதானம் செய்த பிறகு அவை ஏதோ எல்லாம் புரிந்தது போல் சகஜ பாவத்துக்கு வந்து அதனோடு நட்பு பாராட்டின. இதற்குப் பிறகு இதுவும் பங்களாப் பிராணிகளுள் ஒன்றாகவே பாவிக்கப்பட்டு அதற்கேற்ப எல்லா சவரட்சணைகளும் அதற்கும் நடந்தன. அதுவும் கழுத்தில் மாட்டிய சங்கிலியோடு எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக ஏற்று முறைப்படி வரவேற்பு அறை இருக்கையில் வந்து அமர்ந்து மற்றப் பிராணிகளைப் போலவே அதுவும் தன் கடமையை ஆற்றத் தொடங்கியது.
கொஞ்சநாளாய்த் தங்கள் குடியிருப்பு பக்கமே வராமல் எங்கோ அது காணாமல் போயிருப்பதைக் கண்டு சாமானிய மக்கள் அது எங்கே போயிக்கும் என்று முதலில் குழம்பினார்கள். ஒரு வேளை பங்களாவாசிகள் அதை ஏதும் செய்திருப்பார்களோ என்றும் இவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இந்த அச்சத்தில் அதைத் தேடவும் அது பற்றி செய்தியறியவுமான முயற்சியில் அவர்களுக்குக் கிடைத்த தகவல் திகைப்பூட்டுவதாக இருந்தது.
பங்களாவில் உள்ள காவல் பிராணிகளின் எண்ணிக்கை ஒன்று கூடியிருப்பதாகவும், அதன் தோற்றம் இதேபோன்று இருப்பதாகவும் இதுவும் அப்பிராணிகளோடு சேர்ந்து மெத்திருக்கைகளில் அமர்ந்து அவ்வழியாகப்போவோர் வருவோரையெல்லாம் குரைத்துக் கொண்டிருப்பதாகவும் சிலர் சொன்னார்கள். முதலில் நிச்சயம் அது இதாயிருக்காது என்று கருதிய அவர்கள், தொடர்ந்து பலபேரும் இவ்வாறே வந்து சொல்லவே நம்பமாட்டாமல் எதற்கும் நேராகத்தான் போய்ப் பார்த்து விட்டு வருவமே என்று எல்லோரும் ஒன்றாய் திரண்டு சென்றார்கள்.
முன்கம்பி வேலிக்கு இருப்பால் இருந்த முகப்பு வாயிலை இவர்கள் நெருங்கியதுமே வரவேற்பு அறையிலிருந்து குரைப்புச் சத்தம் பலமாகக் கேட்டது. அறையில் வரிசையாகப் போடப்பட்ட இருக்கைகளிலிருந்து எல்லாம் குரைத்துக் கொண்டிந்தன. அவற்றுக்குப் பக்கத்தில் இதுவும் கம்பீரமாய் அமர்ந்து அவற்றைப் போலவே குரைத்துக் கொண்டிருந்ததைக் காண இவர்களுக்க அதிர்ச்சி ஏற்பட்டது. அடையாளமே தெரியாமல் முற்றும் அவற்றைப் போலவே மாறியிருந்த அல்லது மாற்றப்பட்டிடிருந்த அதைத் கண முதலி அதுவா இது என்று இவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டாலும் அதுதான் இது என்று உறுதியாய் அறிய இவர்கள்ஆத்திரமடைந்தார்கள்.
தங்களை அடையாளம் தெரியாமல் குரைப்பதாகக் கருதிச் சிலர் தங்களை அடையாளம் காட்டவோ அல்லது பழைய நட்பை வெளிப்படுத்தவோ அதை மேற்கொண்ட முயற்சிகளோ அல்லது நோக்கி ‘த்சோ த்சோ...’ என்று அழைத்ததோ எதுவும் அதனிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அது ஏற்கெனவே முன்பின் பழக்கப்பட்டதாகவோ வத்தலும் தொத்தலுமாகத் தெருவேயும் வீடு வீடாகவும் குரைத்துக் கொண்டு போனதாகவோ எந்த நினைவையும் காடட விரும்பாததைப் போலப் பார்க்கப் போனால் அப்படியெல்லாம் எதுவுமே நிகழவில்லை என்பது போல எல்லாவற்றோடும் சேர்ந்து தீவிரமாகக் குரைத்துக் கொண்டிருந்தது அது.
இவர்களுக்க வயிறு உடம்பெல்லாம் நமநமவென்று எதுவோ ஏற ரத்தம் சூடாவதைப் போலிருந்தது. கையில் கிடைக்கும் எதைக் கொண்டாவது கொண்டு அதைத் தாக்கி அழிக்க வேண்டும் என்று ஆவேசம் பொங்கியது. ஆத்திரம் தீரும் அந்த முனைப்பில் இவர்கள் குனிந்து கற்களைத் தேடி எடுத்து அதை நோக்கி வீச அது முன்னிலும் மூர்க்கமாகக் குரைத்தபடியே இவர்களை நோக்கிப் பாய்ந்தது. பங்களாப் பிராணிகளும் அதற்குத் துணையாக அதனோடு சேர்ந்து பாய்ந்து கொண்டிருந்தன.

கரசேவை-

கரசேவை
- இராசேந்திரசோழன்
“தோழரே... தோழரே”
இரண்டாவது முறையும் குரலைக் கேட்க அதிர்ச்சியுற்று எழுந்தான். கட்டிலில் அமர்ந்தபடியே சுற்று முற்றும் பார்த்தான். தெரு வெறிச் சென்றிருந்தது. பக்கத்தில், தொலைவில், கட்டிலுக்கடியில், வீட்டு முகப்பில் எங்கும் எவரையும் காணவில்லை. மனதில் கிலிபடர பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு என்பதெல்லாம் கேள்விக் குறியாகி விடுமோ என்கிற குழப்பத்தோடு மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னா தோழர் பயந்துட்டீங்களா”.
இவனுக்கு என்ன சொல்தென்று தெரியவில்லை. பேசாமலிந்தான்.
“உங்களோட உங்க ஒடம்புல ஒரு உறுப்பா இருந்தும் எங்களையெல்லாம் ரொம்ப நாளா மறந்துட்டீங்களே” என்று கேட்டது கை.
இவனுக்குப் புரியவில்லை.
“மறந்துட்டனா. என்ன சொல்ற”
“நீங்க ஏன் தோழர் இப்ப முன்ன மாதிரி மாநாடுங்கள்லாம் நடத்தறதில்ல..”
“மாநாடா..”
“அதான் தோழர், கோரிக்கை மாநாடு, எழுச்சி மாநாடு, ஆதரவு மாநாடு, எதிர்ப்பு மாநாடுன்னு அடிக்கடி நடத்துவீங்களே”
“ஆமா. அதுக்கென்னா...”
“அந்த மாதிரி மாநாடெல்லாம் இப்ப நீங்க நடத்தறதில்லண்றத்தான் எங்க கொறையே...”
“கொறையா..”
“ஆமா தோழர். அடிக்கடி இப்பிடி மாநாடு நடந்துக்னு இருந்தாதான் எங்களுக்கும் வேல இருக்கும். மனுசுக்கும் ஒரு உற்சாகம் இருக்கும். அதஉட்டுட்டு நீங்க பாட்டுனு இப்படி மாசக் கணக்கா எந்த மாநாடும் நடத்தாம சும்மா இருந்தா எங்க கதி என்னா ஆவுறது சொல்லுங்க”
இவனுக்கு புதிராயிருந்தது. “உங்களுக்கென்னா கொறை இதுல”
“என்னா தோழர் இப்பிடி கேட்டுட்டீங்க. மாநாட்டுல எங்களோட பங்கு ரொம்ப முக்கியமில்லியா”
“ஒங்களோட பங்கா”
“சரியாப் போச்சி போங்க. கை அலுத்துக் கொண்டது. “எப்பவுமே கூட இருக்கிறதப் பத்தி தெரியாது அதன் அரும, இல்லாட்டி போனாத்தான் தெரியும் அதன் பெருமன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரிதான் இருக்குது நீங்க கேக்கறது”
“என்னா பெரும”
“எங்களோட பெரும கைகளோ பெரும. இதும் பெரும என்னான்னு இன்னும் பலபேருக்கு சரியா தெரியாமலே இருக்குது. நாங்க இல்லண்ணாதான் தெரியும். எங்க பெரும”
கை வருத்தத்தோடு சொல்வது போல் தோன்றியது. இவனுக்கும் ஏதோ குற்றவுணர்வு ஏற்பட “உங்க பெரும தெரியாமலா இருக்கிறோம்” என்றான்.
“என்னா தெரியும். சொல்லுங்க பாப்பம்” என்றது கை.
இவன் இப்போது தான் முதன்முறையாக கைகளின் பயன்பாடு பற்றி யோசிக்கத் தொடங்கினான். “உண்ண, உடுக்க, எடுக்க, பிடிக்க, குடிக்க, புகைக்க, கழுவ, துடைக்க, வணங்க, வரவேற்க, வழியனுப்ப, கைகுலுக்க, டாடா காட்ட, அடிக்க, அணைக்க, இடிக்க, வெட்ட, குத்த, தாக்க, தடுக்க, முழக்கமிட முஷ்டியை உயர்த்த இப்படி கைகளால் தான் எத்தனை பயன்... நினைக்க நினைக்க இவனுக்கே மலைப்பாயிருந்தது. அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னான்.
எல்லாவற்றையும் கேட்ட கை சற்று ஏளனமாய்ச் சிரித்தது. “இதெல்லாம் தினப்படி அன்றாடப் பயன்பாடுகள் தோழர். குறிப்பாக மாநாடுங்கள்ல எங்களோட பயன் என்னான்னு சொல்லுங்க”
“மாநாட்டுலயா” யோசித்தான் தட்டிகட்ட, விளம்பரம் எழுத, சுவரொட்டி ஒட்ட, துண்டறிக்கை விநியோகிக்க, உண்டி குலுக்க, துண்டு ஏந்த, மேடை போட, பந்தல் அலங்காரம் செய்ய, தோரணம் கட்ட, தலைவர்களை அழைக்க, ஒலிபெருக்கி அமைக்க, மைக் பிடிக்க.. இப்படி எவ்வளவோ பயன்பாடுகள் நினைவுக்கு வர ஏதோ மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தியது போன்ற பெருமிதத்துடன் ஒவ்வொன்றாகச் சொன்னான்.
இருந்தும் கை திருப்தியடையவில்லை.
“எல்லாம் சரிதான் தோழர், ஆனா முக்கியமான ஒண்ண உட்டுட்டீங்களே”
“எத...”
“நீங்க சொன்னதெல்லாம் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஆனா. மாநாடு நடக்கும்போது அதுல எங்களோட பங்கு என்னா அதச் சொல்லுங்க...”
“இவனுக்குப் புரியவில்லை”
“நல்ல யோசனைப் பண்ணிப் பாத்து சொல்லுங்க தோழர். மைக்வரிக்கும் வந்துட்டிங்க. அதைத்தாண்டி வாங்க” கை புதிர் போட்டது.
“மைக்கைத் தாண்டியா” எதுவும் பிடிபடாமல் குழப்பத்துடன் யோசனையில் ஆழ்ந்தான்.
கை “க்ளு” கொடுத்தது. “மைக்க புடிச்;ச என்ன தோழர் பண்ணுவாங்க”
“பேசுவாங்க...”
“அவங்கள யார் பேச வக்றது”
“வாய் பேசப் போவுது” என்றான் இவன். இதுல கைக்கு என்னா வேல”. சில பேர் கைய ஆட்டி, சொழட்டி, முழக்கி, பாவன பண்ணி பேசவாங்க அதச்சொல்றியா”.
“ஐயோ அது இல்ல தோழர்” கை அலுத்துக் கொண்டது “என்னா தோழர் இது கூட தெரியாம இருக்கிறீங்க”
“எத...”
“கை தட்டறத தோழர், கை தட்றது தெரியாது. மாநாடு நடக்கும் போது தலைவர்கள் பேசும் போது அப்பப்ப கை தட்டுவாங்களே. இந்த கை தட்டல் இல்லாம எந்த மாநாடாவது நடந்தது உண்டா”
“ஓ.. அதுவா” என்றான்.
“என்னா தோழர் அவ்வளோ அலட்சியமா சொல்லிட்டீங்க. கை தட்டலோட அருமை என்னா, அதன் முக்கியத்துவம் என்னான்னு புரியாம பேசறிங்க நீங்க” என்றது கை.
நேரம் என்ன இருக்கும் என்ற தெரியவில்லை. நல்ல உறக்கத்தில் எழுப்பி இப்படி ஒரு விசாரணையில் ஈடுபடுத்தியதில் உற்சாகமின்றி கம்மென்று குந்தியிருந்தான்.
பொதுவாக கைத்தட்டல்கள் பற்றி இவனுக்கு அவ்வளவாக நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. இதனால் கைதட்டல்களே இவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. கை தட்டல்கள் சிறப்பாகப் ஏதாவது பாராட்டப் படவேண்டிய இடங்களில் அரிதாக மட்டும அமைந்தால் பரவாயில்லை. அல்லாது எதற்கெடுத்தாலும் கை தட்டுவது அல்லது அற்ப விஷயங்களுக்கெல்லாம் கை தட்டுவது என்பதில் இவனுக்கு உடன்பாடு இல்லை. எடுத்துக்காட்டாக “தமிழர்கள் மானம் காக்கும் மறவர்களாக வீறு கொண்டு எழுவார்கள்” என்றாலும் கைதட்டல் “அவர்கள் சூடு சொரணையற்ற இளித்தவாய்ச் சோதாக்களாகத் திரிகிறார்கள்” என்றாலும் கை தட்டல்” தங்கத் தம்பி தாண்டவராயன் என்றாலும் கைதட்டல் “அருமை அண்ணன் அம்பலவாணன” என்றாலும் கைதட்டல் என இப்படி எடுத்ததற்கெல்லாம் கைத்தட்டல்கள் மலிந்திருந்த சூழல் கைத்தட்டல்கள் மேல் இவனுக்கு ஒரு மரியாதைக் குறைவை ஏற்படுத்தியிருக்க சுவாரஸ்யமின்றி” அப்படியா” என்றான்.
கை லோசகக் கோபடைந்தது போல் தோன்றியது பற்றி இவ்வளவு இளப்பமான கருத்து கொண்டிருக்கிறாய். சின்ன வயதில் கைத்தட்டல்கள் பற்றி படித்தில்லையா நீ” என்றது.
“சரியாய் நினைவில்லை...” என்றான்.
“இதற்குள்ளாகவா எல்லாவற்றையும் மறந்து விட்டாய்” என்ற கை
“கல்விக்கழகு
கசடற மொழிதல்
செல்வர்க்கழகு
செழுங்கிளை தாங்குதல்
உண்டிக்கழகு
விருந்தோடு உண்டல்
கைகளுக்கழகு
கரவொலி எழுப்பல்”
என்று ஏதோ ஒரு செய்யுளைச் சொல்லி “படித்ததில்லையா” என்று கேட்டது.
முதல் மூன்று வரிகளை மட்டும் படித்ததாக ஞாபகம், நாலாவது தொடர்பற்றி ஏதும் நிச்சயமில்லை. இருந்தாலும் எதற்கு சர்ச்சை என்று “ம்” என்றான்.
“இதையெல்லாம் படித்திருந்துமா கைத்தட்டல்கள் பற்றி அக்கறையில்லாமல் இருக்கிறாய்” என்று கேட்டது.
“பேசுவது வாய்தானே இதில் கைகளுக்கென்ன பங்கு இருக்கிறது என்று கைத்தட்டல் பற்றி பொறுப்பில்லாமல் இருக்கிறாய் நீ. ஆனால் அந்த வாய்களைப் பேசவைப்பதும் பேச விடாமல் முடக்கிப் போடுவதும் எல்லாம் இந்தக் கைகள் தான் என்பதை மறந்து விடாதே” என்றது கை. கூடவே கைத்தட்டல்களின் பெருமைகள் சாகசங்களின் அதன் வகைப்பிரிவுகள் பற்றியெல்லாம் பிராபலிக்கத் தொடங்கியது.
“தட்டுவது கைகளையோ கைகளாலோ எப்படியும் நிகழலாம். எனில் கைகளால் தட்டுவது சட்டமன்றம், கைகளைத் தட்டுவது கவியரங்கம், மாநாடு, பொதுக் கூட்டம், பட்டி மன்றம், சில சமயம் கடைத்தெருவும் “கடைத்தெருவில் எதற்கு” என்றான்.
“நண்பர்கள், தெரிந்தவர்கள் போனவர்களை அழைக்க, தெருவோடு செல்கிறவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்க, பல சமயம் சம்பந்தப்படாதவர்களையும்....” என்றது கை.
“கைத்தட்டல்களுக்கு பல வல்லமையுண்டு, மாநாடுகளில் அவை பேச்சாளர்களுக்குப் போதையூட்டி பேச்சின் போக்கையே திசைமாற்றும். முதலில் பேசுகிறவர் பெறும் கைத்தட்டல் அடுத்துப் பேச இருப்பவதைத் திணற அடிக்கும். திகைப் பூட்டும், கஷ்டப்பட்டுத் தயாரித்து வந்த குறிப்புகளையெல்லாம் காணா மலாக்கும். கிடப்பில் வீழ்த்தும் போட்டிக்கு நிற்கும் பள்ளி மாணவனைப் போல கைத்தட்டலுக்காக பாயிண்டுகளைத் தேடித் தவிக்கவைக்கும், திணற அடிக்கும் திண்டாடச் செய்யும் ஏங்கி அலைய வைக்கும். சிற்றுரையோ, பேருரையோ சுவை குன்றா வரிகளுக்க சொற்சிலம்ப சதிராட வசியம்வைத்துக் களம் இறக்கும். எதிர்பார்த்த கைத்தட்டல் கிட்டாத போது சோர்வூட்டும், கவலைப்படுத்தும், விரக்தியளிக்கும் சில சமயம் தற்கொலைக்குத் தூண்டுவது முண்டு. மாநாடுகளில் மட்டுமல்ல பொதுக்கூட்டம் கருத்தரங்கம், கவியரங்கங்களிலும் கைகளின் பங்கு இவ்வாறே.
இவன் களைப்போடு கேட்டுக் கொண்டிருந்தான். வேறு யாராவதாயிருந்தால் விடைகொடுத்து வழியனுப்பி வைக்கலாம் அல்லது விலகி அப்பால் செல்லலாம். உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்பது போல் உடம்பின் ஒரு உறுப்பாகவே இருந்து உயிரை எடுத்தால் மீள வழியின்றி பார்த்துக் கொண்டிருந்தான்.
கை தொடர்ந்து “தட்டும் கைகளிலும் பல வகையுண்டு. தட்டும் வாய்ப்பிற்காகவே காத்து தவம் கிடக்கும் கைகள். கிடைத்த வாய்ப்பை தழுவ விடாது காற்றுள்ள போதே தூற்றி மகிழும் கைகள், நமைச்சலெடுத்தவன் சொரியவது போல் தட்டுவதையே தொழிலாகக் கொண்ட கைகள், தட்டித் தட்டியே உரமேறி காப்புக் காய்த்த கைகள். “பழக்க தோஷத்தால் ஒலிப்பான்களை அழுத்தும் வாகன ஓட்டிகள் போல் நொடிக்கொருதரம் தட்டுவதே வாடிக்கையாய் வழக்கப்பட்டுப் போன கைகள், உடையவன் விருப்பமின்றியே அனிச்சை செயலாய் தானாக இயங்கி தவணை முறையில் விட்டு விட்டுத் தட்டித் தீர்க்கும் கைகள், தட்டும் சந்தர்ப்பங்களுக்காகவே எப்போதும் தயாராய்த் தலைதூக்கிக் காத்து விழித்திருக்கும் கைகள். இப்படி கைகளில் தான் எத்தனை வகை” என்றது கை. “கூடவே கைத் தட்டலின் வகைகளை விவரிக்கவா” என்றது.
பல மாநாடுகளில் பார்த்ததுதான். இது என்பதானால் ‘வேண்டாம்’ என்றான்.
“சரி, ஆனால் கைகளைப் பற்றி இளப்பமான மதிப்பீடு மட்டும் கொள்ளாதே. கைகளுக்கும் தன்மான சுயமரியாதை உணர்ச்சிக்ளெல்லாம் உண்டு” கை சொன்னது.
எப்படி என்று இவனுக்குக் கேட்கத் தோன்றவில்லை.
கை அதுபாட்டுக்குத் தொடர்ந்தது. “கைகளக்குக் காதுகளுமுண்டு. கிளர்ச்சியூட்டும் உரைகளுஙககாகவே செவிகளைத தீட்டி வைத்து காத்திருக்கும் கைகள், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களையே அழங்காத சவத்துப்போன உரையைக் கேட்டு அலுத்த கடுப்பாய் உடையவனையே கேட்கும் ‘வேலையற்ற இடத்திற்கெல்லாம் என்னை எதற்கடா அழைத்து வந்தாய முட்டாளே’ நீ மட்டும் வந்து தொலைவதுதானே என்று”
நடந்து முடிந்த மாநாட்டு நிகழ்ச்சிகள் பல மனக்கண் முன் ஓட இவன் மெல்ல சிரித்துக் கொண்டான்.
கை முடிவாய்ச் சொன்னது...”எனவே தோழரே மாநாடுகளுக்கு கைதட்டல்கள் முக்கியம். மாநாடுகளை கட்ட, நிகழ்ச்சிகளுக்கு உயிர் கூட்ட கேட்போர் களி கொள்ள அரங்கு அதிர விண்ணைப் பிளக்கும் தரவொலிகள் மிக மிக முக்யிம். தவிர கைகளின் பிறவிப் பேறும் அது”
மங்கிய நட்சத்திர வெளிச்சத்தில் அமைதியாயிருந்தது. கை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க மௌனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தான். கை இறுதியாய்ச் சொன்னது.
“அதுதான் தோழரே. இதனால் கைகளுக்கு அஞ்சி யாரும் அதை வீட்டில் வைத்து விட்டு வந்து விடக்கூடாது என்பதால் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் கட்சிகள் கைகளின் முக்கியத்துவம் கருதி அதற்கும் தனியாக சிறப்பு அழைப்பு அனுப்ப வேண்டும்”.
இவன். “சரி” என்றான்.
கை ஒரளவு திருப்தியடைந்தது போல் தோன்றியது. பிறகு சற்று யோசனையோடு அது கேட்டது.
“ஆமாம் அடுத்த மாநாடு எப்போது”
“கூடிய விரைவில் இருக்கலாம் இன்னும் தேதி நிச்சயமாகவில்லை” என்றான்.
“தேதி முடிவானதும் மறக்காமல் தெரிவி” என்று பழைய நிலைக்கு சுருண்டது கை.
சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் படுத்தான். கனவு போல் நடந்து முடிந்த இந்நிகழ்வின் பாதிப்பில் ஏதோதோ யோசனைகளோடு கிடந்தவன் எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. காலை வழக்கம் போல் விழிப்பு கண்டு எழுந்து பல் துலக்கி செய்தித் தாளை விரிக்க ஒரு சின்ன அதிர்ச்சி. 7 ஆம் பக்கம் உலகச் செய்திகள் இடம் பெறும் பகுதியில் ஒரு தகவல் ‘கை தட்டினால் ஆயுள் கூடும். ஆராய்ச்சியாளர்கள் முடிவு’ என்கிற தலைப்பில் “கைத்தட்டல் இரத்த ஓட்டத்தை சுறு சுறுப்பாக்குகிறது, இதயத்தை வலுப்படுத்துகிறது ஆகவே நீண்ட ஆயுளோடு வாழ தாராளமாக கைதட்டுங்கள்” என்று தெரிவித்திருந்தது.
பலகாலம் முன்பு சிரிப்பு பற்றி இப்படி ஒரு செய்தி வந்து, சிரிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அது பதட்டத்தை தணிக்கிறது. மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது ஆகவே தாராளமாக மனம்பிட்டு சிரியுங்கள் என்றெல்லாம் மருத்துவர்கள் கூறியிருந்ததை இதழ்கிள்ல பார்த்திருந்தான். கைத்தட்டலுக்கும் இப்படி ஒரு பலன் இருக்கிறது என்று அறிய இவனுக்கு விசித்திரமாயிருந்தது. நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பயக்கும், உடலுக்கும் மனத்திற்கும் ஊட்டம் அளிக்கும் கைத்தட்டல் பற்றி இவ்வளவு காலமும் குறைவான மதிப்பீடு கொண்டிருந்ததற்காக வருத்தமடைந்தான்.
அடுத்து வரக் கூடிய மாநாடுகளிலிருந்தாவது இனி கைத்தட்டலுக்கு உரிய முக்கியத்துவம் தரவேண்டும் என்று கருதினான்.
இனிவரும் மாநாட்டிற்கான திட்டமிடல் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் போது ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து சுவரொட்டி போடும்போது இப்படி போடச் சொல்லி கருத்து தெரிவிப்பது பொருத்தமாயிருக்கும் போல் தோன்றியது.
“அணி அணியாய்த் திரண்டு வருக! அலைகடலென ஆர்ப்பரித்து வருக! மாநாடு சிறக்க வேனெடுத்து வருக. மறக்காமல் உங்கள் கைகளுடனும்....”